20 பக்கத்திற்கு மிகாத சிறார் கதை கூறும் நூலிது. எங்கள் ஊர் எழுத்தாளர் என்பதால் எங்கள் தெருவும் அவர் தெருவுமே கதை நிகழும் இடமாக மனக்காட்சியில் விரிந்தது. இக்கோடைக்கால இறுதியில் படித்தாலும் குற்றாலச் சாரல் மனதில் விழுந்தது
கோடை மழைக்காலமாகத் திரிந்ததோ எனுமளவிற்குக் கோடைமழை கொட்டிச் சற்றே நின்ற இந்நாளில் அடுத்துவரும் சாரல் திருவிழாவிற்கு என்னை இட்டுச் செல்ல இக்காலத்தில் இக்கதை என்கை சேர்ந்தது போலும். August 15ல் குற்றாலத்திற்கு இன்பச் சுற்றுலா செல்ல விரும்பும் எட்டாம் வகுப்புச் சிறுவன் கதை இது
குளிக்கிறதுக்காக
தட்டட்டி
தாசால்
வரையுதியா
கூப்பிடுதா
கிடக்கு
போயே போய் நோயே தெளிஞ்சுட்டான் போலுக்கு
போன்ற எங்களூர்ப் பேச்சுவழக்கை எழுத்தில் காண்கையில் கிட்டுமின்பம் எட்டுத்திக்கும் சென்று திரைகடலோடித் திரவியம் தேடினும் கிட்டுமோ. தாசால் மூலவடிவும் வேர்ச்சொல்லும் தேடிக்கண்டேன்
Kavidhai எழுதுபவர் கதை எழுதினால் அக்கதைக்குள் சில kavidhai ஆங்காங்கே தாமே இடம்பிடித்துக்கொள்கின்றன. ஒரு மழை நாளில் கரையும் காகம் ஒன்றைப் பற்றிய வரிகள் கதைக்குள் kavidhai ஆக மின்னின. மழை தீட்டும் கவினோவியத்தை எழுத்தால் வரைந்து மனதிற்குள் மழைவிழச் செய்கிறார் வண்ணதாசன்
குடும்பத்தின் பொருளியல் நிலையைக் குழந்தைகள் அறிந்து வளரும் சூழலை உருவாக்குதல் பெற்றோர் பொறுப்பு. அதை உணர்ந்து அடம் பிடிக்காமல் இருப்பதை வைத்துச் சிறப்புடன் வாழக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் அமைவது பெற்றோர் செய்த நல்வினைப்பயன் போலும். ஆனால் அதிலும் ஒரு நுண்துயர் உள்ளது
அந்நுண்மனத்துயரை ஒரு மென்மனத்தந்தைக்கும் பொன்மனச்சிறுவனுக்கும் இடையே நிகழும் நிகழ்வுகளின் வழியாகப் பேசுகிறார் ஆசிரியர். துயர் கவியும் நொடிகள் என்பதை விட மனம் கசியும் நொடிகள் எனலாம் அவற்றை
தாயின் சேலைத்தலைப்பிற்குள் மறைந்துகொண்டு தந்தையிடம் வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ளும் சிறுவர்க்கும் மனைவியின் வசையில் இருந்து தப்பிக்கத் திக்கித் திணறியேனும் அவற்றைச் செய்யும் கணவருக்கும் இடையே இக்கதையில் வரும் சிறுவன் & தந்தையின் மன உணர்வு நுண்கவனத்திற்குரியது
தந்தையைப் பற்றிப் பேசும் இலக்கியம் பெருக விழையும் ஒருவனாக அத்தகு சிறார் இலக்கியம் ஒன்றைக் கண்டதில் பெருமகிழ்ச்சி. ஆனால் இதிலும் தந்தையும் மகனும் நம்மைப் போன்றே மனம்விட்டுப் பேசிக்கொள்வதில்லை. அவர்கள் பேசிக்கொள்ளாவிட்டாலும் அவ்விருவர் உள்ளக்கிடக்கையும் நாம் பேசவேண்டியவை
இவ்வளவு எழுதத் தூண்டும் இக்குறுங்கதை இணையத்தில் கிடைக்கிறது. தேடிப் படித்துக் கொட்டுங்குற்றாலமழையில் நனைக மக்களே!