விரும்பாத இருட்டு வந்து அப்பிக் கொள்வதால் கண்களில் உறக்கம் ஒட்டிக் கொள்வதில்லை.
இப்படியானத் தனி இரவுகளின் பந்தத்தோடுப் படைத்துவிட்டக் கவிதைகளின் தொகுதி இது.
"இந்தப் பொழுதின் கவிதைகள் இரண்டு பட்டாம்பூச்சி நான்கைந்து வலசைப் பறவைகள் ஒரு கைப்பிடி வானவில் தேவைக்கேற்ப பூக்கள் ஒரு சிட்டிகை மென்சோகம் தேனீக்கள் இடை இடையில் அவ்வப்போது, “கண்ணாடி உவமைகள்” என்று நிலாவில் அமர்ந்த படி வடை சுடும் பாட்டிப்போல் சரிவிகிதம் பொருள் சேர்த்துச் சுட்டுப் போடும் கவிதைகள் இல்லை."
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள "கற்பனை நதியும் கவிதைத் துடுப்பும்" கவிதையிலிருந்து...
காதலும் கவிதையும், தாகமும் தனிமையும், தவிப்பும் இனிமையும், இரவும் வலியும் புரியுமென்றால், இந்த உலகத்தின் மொழியும் புரியும். அந்த மொழிப் புரியும் ஒவ்வொருவருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பு சொந்தம்.
நிச்சயம் நீங்கள் கடக்க வேண்டிய பக்கங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கும்.
எதற்கு இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும்? ஒரு வாலிபனின் எண்ணங்கள், கவிதைகள் இதனை படிக்காவிட்டால்தான் என்ன? என்ன குறைந்துவிடும்? எதுவுமே குறையாது! ஆம், எதுவுமே குறைந்துவிடப்போவதில்லைதான்!
அப்படியே ஒவ்வொரு நாளும், ஏன் எதற்கு எப்படி என்று யோசிக்காத அதே வாழ்க்கை, மிகச் சுகம்தான்!
இப்படி நாம் இருக்கும்வரையில் இங்கே இருக்கும் அறியாமைகள் அப்படியே தான் இருக்கும் வாழ்க்கையின் அழகுகள் புரியாமலேயே நாட்கள் கடக்கும்!
இவையெல்லாம் எப்படிக் குறையும்? இந்தப் புத்தகத்தின் சில வரிகளைப் படித்தால் குறைப்பதற்கான முதற்படியை எங்கிருந்து தொடங்கவேண்டும் என்று புரியக்கூடும்!
ஒரு நல்ல புத்தகம் என்ன செய்யும்? அப்படியே இந்த உலகத்தைத் திருப்பிப்போட்டு விடுமா? இல்லை! அப்படியெல்லாம் அதற்கு செய்யத் தெரியாது! மனிதர்கள்தான் அதனைச் செய்ய முடியும், ஆம்! நீங்கள்தான் செய்ய முடியும் அதை! மனிதர்கள் எங்கேயிருந்து அப்படிச் செய்வார்கள்? கடல் மழைக்கான தேவையைத் தருவது போல மழை பூமியிலிருந்தே எடுத்து பூமிக்கே நீரைத் தருவது போல ஒரு புத்தகம் மனித மனதிலிருந்தே எடுத்து மனித மனதிலேயே ஊட்டத்தை ஊட்டுகிறது!
அப்படிப்பட்டதொரு ஆற்றலின் தேவையை நீங்கள் தேடிக்கொண்டிருந்தால், உங்கள் தேடலின் ஒரு முக்கியப் பகுதியை இந்தப் புத்தகத்தைப் படிக்காமலிருந்தால் தொலைத்து விடுவீர்கள்!
எதுவும் பெரிதாக எல்லாம் நாம் மாறிவிட வேண்டாம்! நம்மைச் சுற்ற நடப்பவற்றை உண்மையான கருணைப்பார்வையோடு உணர்வுப் பாதையில் அறிவின் துணைக்கொண்டு மென்மையாக நோக்குங்கள்! அது போதும்!
இந்தப் புத்தகத்தில் காதலின் எதார்த்தம் அப்படியே பேசப்படுகிறது! உவமையில் புனைவுகள் இல்லை! அழகியலிலும் உவமையிலும் எதார்த்தம் கொண்டு வருவது கடினம்! அந்தப் அற்புதத்தை இங்கே ஆசிரியர் செய்திருக்கிறார்!
திடீரென்று அவ்வப்போது நமக்கு சில ஞானங்கள் உதிக்கக் கூடும்! நமக்குக் கனவுகளும் பிறக்கக்கூடும்! உண்மைகளும் தெளியக்கூடும்! ஆனால் அது நம் நாட்களின் கடலில் அப்படியே அடித்துப்போகும்! உள்சென்று எழும்பி உள்சென்று எழும்பி என்று நமது எண்ணங்கள் மாறும்! அப்படியே நடைமுறை வாழ்க்கைக்குத் தாவும்! இதனை வார்த்தைகளால் நமக்குச் சொல்லத்தெரியாது! ஆனால் கவிஞர் சொல்லியிருக்கிறார்!
'கருப்பாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சலில் ஒரு துண்டும் நீர்ப்போக்கில் இன்னொரு துண்டும் போய்க்கொண்டே இருக்கிறது'
இந்த வரிகள் சொல்லும் பொருள் ஆழமானது! அது உங்கள் ஒவ்வொருவருக்கும் அலாதியானது! படித்துப் பாருங்கள்! உங்களுக்கே புரியும்! எங்கெங்கோ தொலைத்துவிட்ட உங்கள் பகுதிகளை அது கண்டுபிடித்துத் தரும்!
நமது வாழ்வில்தான் எத்துணை முரண்கள்! முரண்களின் ஊடே இங்கே பல கவிதைகள் முறுவலிக்கின்றன! ஒருவருக்கு வேண்டாம் வேண்டாம் என்றாலும் கதவைத்தட்டும் வாய்ப்பு! இன்னொருவருக்கோ, வாழ்க்கை முழுதும் உழைத்தாலும் கிடைப்பதில்லை! ஒருவருக்கு மிகத் தேவை, இன்னொருவரின் கைகளில் வெறும் சாம்பலாகிறது!
எங்கோ யோசித்தது போலத் தெரிகிறதா? அனுபவித்தது போலும் தெரியுமே! செல்லுங்கள்! அந்தக் கவிதை உங்களை அரவணைத்துக்கொண்டு உங்களைப் புரிந்துகொள்ளக் காத்திருக்கிறது!
இன்னும் நான் சொன்னால், அப்படியே ஒவ்வொரு வரியாக எடுத்துக்கூறி, அவை எனக்குள் செய்த ரசவாதத்தையும் சொல்லத் துவங்கிவிடுவேன்! வேண்டாம்! நீங்கள் செல்லுங்கள்! அந்த அனுபம் உங்களுக்கே அலாதியானது! அள்ளிப் பருகுங்கள்!
உங்களின் அனுபவங்களையும், எண்ணங்களையும் பிரதிபலிக்க, அலசிப் பார்க்க, ஆய்ந்து நோக்க, நீங்கள் பார்ப்பதையே வேறு வேறு கோணங்களில் காட்ட இந்தப் புத்தகத்தில் உள்ள கவிதைகள் காத்திருக்கின்றன!
ஆற அமர அமர்ந்து, உங்களுக்குப் பிடித்த ஒரு வேளையில், சிந்தனைகளோடு சண்டை போடவும், பேசிக்கொள்ளவும், அன்பு செலுத்தவும் நினைக்கும் ஒரு தருணத்தில் எடுத்து இந்தப் புத்தகத்தைப் படியுங்கள்!
உங்களின் ஒருமணிநேரத்தை இந்தப் புத்தகத்திற்குக் கொடுங்கள்! உங்களின் ஒரே ஒரு சிந்தனையையேனும் இந்தப் புத்தகம் மாற்றிக் காட்டும்!
மிகவும் அருமையான புத்தகம். மனிதனின் பல உணர்வுகளை மற்றும் வாழ்க்கையின் உணர்ச்சிமிக்க படிமங்களை அழகான நடையிலும்,அனைவருக்கும் புரியும்படி எளிமையான நடையிலும் தாங்கள் எழுதியதில் நான் வியந்தேன். புத்தகத்தின் பத்தாம் கவிதை "கற்பனை நதியும்,கவிதைத் துடுப்பும்!" எனக்கு மிகவும் பிடித்த கவித்துவமான கவிதையாகும். புத்தகத்தின் பெயரிலேயே உள்ள "மீன்களின் விக்கல்கள்" என்ற கவிதை மிகவும் ஆழமான அர்த்தத்தில் எழுதப்பட்டிருக்கிறது. "முழுமை" எனும் கவிதை படிப்பவர்களுக்கு பெரும் தன்னம்பிக்கையை புகுத்தும் வண்ணம் எழுத்தப்பட்டிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அப்படியாக பல படிமங்களில் எளிமையான நடையில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில் கடைசியாக எழுதப்பட்ட "அபிநய இலாகிரி" யின் இலக்கிய நயம் வியக்கத்தக்கதாய் இருந்தது. புத்தகத்தில் எழுதப்பட்ட அனைத்து கவிதைகளையும் படித்து முடித்தபின் தங்களின் எழுத்துக்கள் மீது பெறும் மதிப்பும் ஆர்வமும் உண்டாகிறது. தங்களின் எழுத்துக் கலை மென்மேலும் வளர்ச்சி பெற எனது வாழ்த்துக்கள். தங்களின் "ஒப்பம்" குறுநாவலை ஆவளுடன் எதிர்ப்பார்க்கிறேன்.