அன்றாடம் நாம் செய்தித்தாள்களில் வாசித்து எளிதாக கடந்து சென்றுவிடுகிற, சாமானிய மக்களின் பிரச்சனைகளாகிய சொத்துத் தகராறு, விவாகரத்து, விபத்து , கள்ளக்காதல் சார்ந்த கொலைகள் , மற்றும் வன்கொடுமைகள் போன்றவற்றை விசாரிக்கும் வழக்குகளையும் அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மனிதர்களை மற்றும் வழக்கறிஞர்களை பற்றியும் , அவர்களின் பின் கதைகளையும் மய்யமாக வைத்து எழுதப்பட்ட எட்டு பெரும் சிறு கதைகள் .
இந்த எட்டு கதைகளில், எனக்கு சில கதைகள் மற்ற கதைகளை விட மிக ஆழமான தாக்கத்தையும் , பாதிப்பையும் ஏற்படுத்தியது . தினம் தினம் இவ்வாறான கதைகளை பார்த்து பார்த்து எந்திரத்தன்மையாகி மரத்துப்போன நீதிமன்றங்களின் மனிதர்களையும் உருக்கி, அவர்களின் மனிதாபிமானத்தை வெளிக்கொணர்ந்துவிடும் ஆற்றல் சில கதைகளுக்கு உண்டு என்பதை இந்நூல் காட்டுகிறது .
நிறைய இடங்களில், நீண்ட (Long-Winded ) வர்ணனைகளைஆசிரியர் தவிர்த்திருக்கலாம் . அது தவிர்த்து பெருபாலும் அனைத்து கதைகளும் என்னை வாசிப்பில் மூழ்க செய்தது .கதைகள் அனைத்தும் நேரியல் அல்லாத (Non-Linear or Disjointed ) முறையில் சொல்லப்பட்டிருப்பது தமிழ் சிறுகதை உலகில் ஒரு புது முயற்சி என்று நினைக்கிறன்.
நான் இதுவரை வாசித்த சிறுகதை தொகுப்புகளுள், இது மிக மிக சிறந்த கதைத் தொகுப்பு. இந்த நூலை ஒரு சிறுகதை தொகுப்பாக ஆசிரியர் சொன்னாலும், இது நிச்சயம் சிறுகதைகள் அல்ல. 8 குறுநாவல்கள் கொண்ட ஒரு தொகுப்பாக தான் நான் கருதுகிறேன்.மொத்தம் 8 கதைகள், 376 பக்கங்கள். சராசரியாக ஒவ்வொரு கதையும் 50 பக்கங்கள்.
இந்த புத்தகத்தின் ஆசிரியர் திரு. பாவெல் சக்தி அவர்கள் ஒரு வழக்கறிஞர். இந்த 8 கதைகளுமே ஏதோ ஒரு விதத்தில் நீதிமன்றத்தோடும், காவல்துறையோடும் சம்பந்தப் பட்டதாகவே இருக்கிறது. 8 கதைகளில், செண்டிமெண்ட், கள்ளக்காதல், காதல், நகைச்சுவை, விவாகரத்து, விபத்து, பாலியல் குற்றம், பண மதிப்பிழப்பு என்று விதவிதமான கலவையாக இருப்பது மிகவும் சிறப்பாக உள்ளது.
ரொம்ப வித்தியாசமான தலைப்பு, வித்தியாசமான கதைகள், வித்தியாசமான களம், வித்தியாசமான மனிதர்கள் என்று இந்த நூலின் வாசிப்பே வித்தியாசமான அனுபவமாக இருந்தது. எல்லாக் கதைகளுமே பிளஷ்பக் அண்ட் ரீவர்சல் ஸ்டோரி டெல்லிங் பார்மட்டில் எழுதப்பட்டு உள்ளது.
#1. பட்டாளத்தார் இறந்துவிட்டார். அந்நிலையே இறந்தார் எனப்படுதல் நன்று: இது நூலின் முதல் கதை. ஒரு சராசரி மனிதரின் வாழ்வில் ஒரு நீதிமன்ற வழக்கு அவர் வாழ்வை என்னவெல்லாம் செய்துவிடும் என்பதை நாகர்கோவில் கன்னியாகுமரி வட்டார மொழி வழக்கில் மிக நேர்த்தியாக சொல்லியுள்ளார் ஆசிரியர். கதையை படித்து முடிக்கும் பொழுது மனதில் ஏற்பட்ட அந்த ஒருவித கனமான உணர்வே எழுத்தின் வெற்றி.
#2. விஜயன்: பகை பாவம் அச்சம் பழியென நான்கும்: ஒரு கொலையும், அதற்கு காரணமான ஒரு கள்ளக்காதலும்.
#3. அமீரின் நாட்குறிப்புகள்: கொலைக்களத்து மாலை: ஒரு விபத்துடன் தொடங்கும் இந்த கதை ஒரு அழகிய காதல் கதை. கல்லூரி கால காதலை மிக அழகாக, நேர்த்தியான வர்ணனையும் சேர்த்து எழுத்தில் தெறிக்க விட்டுள்ளார்.
#4. பொச்சுக்கிள்ளி: இன்முகம் காணும் அளவு: இது ஒரு நகைச்சுவை கதை. புதிதாக மாறுதல் ஆகி வரும் நீதிபதி, அந்த ஊரில் வித்தியாசமான பெயர்களை கொண்ட குற்றவாளிகளை பற்றி காவல்துறை அதிகாரியிடம் கதை கேட்கும் கதைதான் பொச்சுக்கிள்ளி. நிறைய இடத்தில் வாய்விட்டு சிரிக்கும்படியான நகைச்சுவை கொண்ட ஒரு கதை.
#5. மூன்று பெண்கள்: செய்யதக்க செய்யாமை யானும் கெடும்: என்னை மிகவும் பாதித்த ஒரு கதை. ஒரு சாதாரண விவாகரத்து கதையாக ஆரம்பித்தாலும், நிஷிதா என்ற அந்த குழந்தையின் பார்வையில் கதை சென்ற அந்த பகுதி முழுவதும் கண்களில் நீர்திரை குறையவில்லை. திருமணத்தை விட கொடுமையானது நம் நாட்டில் விவாகரத்து வழக்குகள். நாம் அனைவருமே நம் திருமண வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம் துணையை விவாகரத்து செய்ய எண்ணி இருப்போம். அந்த எண்ணம் ஏற்படும் போதெல்லாம் நான் எனக்குள் கூறிக்கொள்ளும் ஒன்று, "ஒரு கணவன் மனைவி பிரியலாம். ஆனால் ஒரு தாய் தந்தை பிரிவது ஒரு குழந்தைக்கு பெரிய தண்டனை". இந்த கதையில் நிஷிதாவின் ஏக்கங்கள் மிகவும் பாதித்தன. இந்த நூலிலுள்ள 8 கதைகளில், எனது பார்வையில் இதுவே சிறந்த கதை.
#6. 7-மார்ச்-2018: நிழல்தன்னை அடிவிட்டு நீங்காது: இது ஒரு பழிவாங்கல் கதை. ஒரு விபத்தும், அது விபத்தாக மாற்றப்பட்ட விதமும், அதை செய்யத்தவரின் காரணமும் தான் கதை. நாம் நம் வாழ்வில் செய்திகளிலும், செய்தித்தாள்களிலும், பார்த்தும் படித்தும் கடந்து சென்ற ஒரு செய்தியை மய்யமாக கொண்டு எழுதப்பட்டு இருக்கிறது.
#7. சோபியா: மறத்தலைவிடக் கொடியது வேறில்லை: ஒரு பிரபல வழக்கறிஞரின் நினைவு ஆண்டு நாளில் அவரின் ஜூனியர் வழக்கறிஞர் பகிர்ந்து கொள்ளும் 2 முக்கிய வழக்குகளை பற்றிய நினைவுகூறலாக இந்த கதை ஆரம்பித்தாலும், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை பற்றி பேச தொடங்கும் இடத்தில் கனமாகிறது. ஒரு குற்றவுணர்வு எப்படியெல்லாம் இம்சிக்கும் என்பதை சிறப்பாக சொல்கிறது.
#8. நான்கு பேர்கள் இரண்டு சம்பவங்கள்: நாடொறும் நாடு கெடும்: இது இன்னுமொரு நகைச்சுவை கலந்த கதை. பணமதிப்பிழப்பை மய்யமாக வைத்து எழுதப்பட்டு இருக்கிறது. நாகர்கோவில் கன்னியாகுமாரி வட்டார வழுக்கு நிரம்பி வழிகிறது. என்னை போன்று கொங்கு தமிழ்காரர்களுக்கு நிச்சயம் வாசிக்க சவாலாக உள்ளது. வாசிக்க மிகுந்த நேரம் எடுத்துக்கொண்டாலும் கதை முடிவு எதிர்பாராத திருப்பம். தம்புரான்னின் பின்கதையை நகைச்சுவையால் நிறைந்துள்ளார் ஆசிரியர்.