கீரனூர் ஜாகிர்ராஜா தமிழ் நவீன எழுத்தாளர் ஆவார். 1995ஆம் ஆண்டு தஞ்சாவூரிலிருந்து தன்னுடைய எழுத்து வாழ்க்கையைத் தொடங்கினார். அதிகம் அறியப்படாத தமிழ் இஸ்லாம் சமூகத்தின் வாழ்க்கையை நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் வாயிலாக அறிமுகப்படுத்தியவர். 2004ஆம் ஆண்டு இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. தொடர்ந்து வெளிவந்த 'மீன்காரத்தெரு' நாவல் தமிழ் முஸ்லிம்களில் ஒடுக்கப்பட்ட ஒரு பிரிவினரின் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டியது. கருத்த லெப்பை, துருகித்தொப்பி, வடக்கேமுறி அலிமா, மீன்குகை வாசிகள், ஜின்னாவின் டைரி, குட்டிச்சுவர் கலைஞன் போன்ற நாவல்களையும் எழுதியுள்ள ஜாகிர்ராஜா மேலும் 4 சிறுகதை நூல்கள், 3 கட்டுரைத் தொகுப்புகள், 6 தொகை நூல்கள், குழந்தை இலக்கிய நூல்களையும் எழுதியுள்ளார். தனது எழுத்துப் பணிக்காக கனடா இலக்கியத் தோட்டம் விருது, சேலம் தமிழ்ச்சங்க விருது உள்ளிட்ட 15 விருதுகள் பெற்றுள்ளார்.
ஞாயிறு கடை உண்டு - மற்றுமொரு தஞ்சாவூர் நாவல் , ஆனால் சற்று வித்யாசமாக ,தஞ்சை-இஸ்லாமிய கதைக்களம் . கதையில் வருபவர்கள் பெரும்பாலும் , இஸ்லாமியர்களே , அவர்களை பற்றிச்சொல்லும் பொது , இஸ்லாமிய வழக்கங்களை பற்றி சிறிது தெளிவு கிடைக்கிறது. ஆனால் எல்லாமே ஒரே மனம் தானே , அதனால் எல்லாருக்குமான நாவல்தான். நாவலில் சரியான தொடக்கம் , முடிவு என்றெல்லாம் இல்லை , கதை தொடக்கத்தில் வரும் அனைவரும் , முடிவிலும் அதே போல்தான் உள்ளனர் . எந்த மாற்றமும் இல்லை அவர்கள் வாழ்க்கையில் . மற்ற நாவல்களை போல் , ஒரு முடிவு , பினிஷிங் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் எழுத்தாளர் நினைக்கவில்லை . தன் வீட்டின் ஜன்னல் வழி நின்று சிக்கந்தர் , மரியம்மை பார்பது போல் , நாம் ஒரு பெரிய ஜன்னல் வழிநின்று , மரியம் , பாப்பாத்தி , சிக்கந்தர் , நாகூரார் , ஸ்னோலின் , நாச்சியார் , கேரியர் பையன்கள் பார்த்து விட்டு , போக வேண்டியது தான் . அதை தான் கீரனுரும் எதிர்பார்க்கிறார் .