"சாதியும் நானும்" என்னும் நூல், எழுத்தாளர் பெருமாள் முருகன் உள்ளிட்ட 30 பேரின் சாதி குறித்த அனுபவங்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு. சாதி ஆதிக்கத்தின் பல்வேறு வெளிப்பாடுகள் இதில் பதிவாகியுள்ளன. குற்றச்சாட்டுகளைப் போலவே, சாதி மனோபாவம் கொண்டிருந்த காரணத்தாலும், அதற்குத் துணைபோன காரணத்தாலும் உண்டான குற்றவுணர்ச்சிகளும் ஏக்கங்களும் வெளிப்பட்டிருக்கின்றன. சமாதானம் காணும் கட்டுரைகளும் நியாயம் கற்பிக்கும் கட்டுரைகளும் உள்ளன. ஒப்புதல் வாக்குமூலங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. சுயவரலாற்றுத் தன்மை மிகுந்தவையும் உள்ளன.
இங்கு நிற்க. இன்னுமா ப்ரோ சாதி எல்லாம் பார்க்குறாங்க என்பாருக்கு:
"நீங்க நான்வெஜ் சாப்பிடுவீங்கதானே?"
"உன் சொந்த ஊர் எது?", "அப்பா தாத்தாலாம் வாழ்ந்த ஊரா அது?", "குலசாமி எது?", என்று மறைமுகமாகத் தொடங்கி, "நீங்க எந்த ஆளுங்க?" என்று நேரடியாகவே கேட்கும் வரைக்கும் சாதி அறியும் கேள்விகள் நீளும். ஊர்க்காரத் தாத்தாவில் இருந்து, கூட வேலை செய்து மாதம் லட்சக்கணக்கில் சமபளம் வாங்கும் அலுவலக மேனேஜர் வரை சாதி அறியாமல் யாரும் வேலை செய்வது இல்லை; அந்தக் குறுகுறுப்புக்கு பின்னிருப்பது ஈராயிரம் ஆண்டுகால சாதிய சமூகம்!
பல அனுபவக் கட்டுரைகளில் கல்வி நிலையங்களில் சாதி சார்ந்த நிகழ்வுகள் எப்படி கசப்பாக அமைந்தன என்று வாசிக்கும்போது, அறிவை வளர்க்கும் கல்வி நிறுவனங்களிலும் பரவி உள்ள சாதி மனநிலையைக் காணமுடிகிறது. உதவித்தொகை தருவதில் சுணக்கம் காட்டுவத���, கோட்டாவில் வந்தவன்/ள் என்று சொல்லிக்காட்டுதல், நிறத்தையும் பேச்சையும் வைத்தே சாதியைக் கணிக்கிறேன் என்று ஆசிரியர்கள் இதுவரை செய்த கொடுமைகள், எத்தனை பிஞ்சுகளின் மனதில் விதைக்கப்படும் நஞ்சோ!
இது தவிர நூலின் பெரும்பாலான சம்பவங்களில் சாதி பெண்களை வைத்திருக்கும் நிலை என்ன என்பது குறித்ததே. மண்ணும் பொண்ணும் ஒண்ணு என்று இன்று ஆண்ட சாதிகள் சொல்லித் திரிவது நடைமுறையில் எத்தகைய பிற்போக்கு நிலையில் பெண்களை வைத்திருக்கிறது என்று அறிகிறோம். ஓரிரண்டு கதைகளில் மட்டுமே பிராமணர் வீட்டின் சாதி நிலையும், அவர்கள் தம் வீட்டுப் பெண்களை அணுகும் விதமும் பதிவாகி உள்ளது. குறிப்பாக மாதவிலக்கு என்னும் இயற்கை நிகழ்வு, எவ்வகையில் அனைத்து சாதிகளிலும் ஒரு தீண்டாமை (தீட்டு) நோக்கில் வழங்கி வருகிறது என்பதை பலரது அனுபவங்கள் ஊடாக அறிகிறோம்.
பெரும்பாலும் கொங்கு பகுதியைச் சேர்ந்தவர்களின் அனுபவத்தை சொல்லி இருப்பதால், கவுண்டர், நாயக்கர், நாயுடு என்ற ஆண்ட சாதிகள் எவ்வாறு ஆதிக்கத்தை செலுத்தின என்பதும், அவ்வாதிக்கத்தை செலுத்திய சாதிகளைச் சேர்ந்தோர் அதையெண்ணி வருந்தும் கதைகளும் உண்டு. விவசாயத்தில் தொடங்கி, கோயில் வழிபாடு, கல்வி முன்னேற்றம் ஆகியவற்றில் ஆண்டைகள் செலுத்தி வரும் ஆதிக்கம், "பண்பாடு", "கலாச்சாரம்" என்ற பேரில் இன்றும் நிலவுவது அருவருப்பை அளிக்கும் ஒன்று!
தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் கதைகளே இப்படி என்றால், சாதி என்பதன் முழு கோர முகத்தை அறிய மக்களிடையே சென்று அனுபவங்கள் கேட்பதே சிறந்த முயற்சியாக இருக்க முடியும். இத்தகைய முயற்சிகள் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் செய்யப்பட்டால், மேலும் பல சாதிகளையும், அவற்றின் பிற்போக்குக் கட்டமைப்புகளையும் கண்டறியலாம்! மற்றவர்களின் அனுபவ வாயிலாக, நம்மை சுய விமர்சனம் செய்துகொள்ளவும் இந்நூல் ஒரு வாய்ப்பாக அமைவது சிறப்பு!
சில அனுபவங்களில் இப்படியெல்லாமா சாதியை நிலைநாட்டுவார்கள் என்று அதிர்ச்சி அடைந்தேன்; சாதிக்கு படித்தவர், படிக்காதவர் பேதம் இருப்பதில்லை; கல்லூரி முதல்வரே தன் சாதிக்கு முன்னுரிமை தந்த சம்பவங்கள் இவற்றில் உண்டு!
இலக்கிய விமர்சகர் பொ. வேல்சாமி சொல்வது போலத் தான்: "படிச்சவன் சாதி பாக்குறது, கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு பீ திங்கிற மாதிரி!"