எதார்த்தமான எழுத்துக்களால் இலக்கிய உலகை ஆளும் வண்ணதாசனின் எழுத்துக்களும் வண்ணமயமானவை. மனிதர்களின் மனதைக் கற்றவர் வண்ணதாசன். அதனால்தான் அவரது எழுத்துக்கள் அழகாக ஜொலிக்கின்றன.
வண்ணதாசனின் வண்ணங்களால் ஆன உலகைத் தரிசிக்க...பக்கத்தைப் புரட்டுங்கள்!
Vannadaasan (தமிழ்: வண்ணதாசன்) aka கல்யாண்ஜி is a popular poet in Tamil Modern literature. He lives in Tirunelveli. He writes short stories and non fiction articles under the name "Vannadhasan". He writes poems under the name "Kalyanji". His real name is S. Kalayanasundaram
ஜீன்ஸ் பேண்ட்க்கு வெள்ளைச் சட்டை மாதிரி, கிராமியக் காதல் பாட்டு என்றால் இளையராஜா மாதிரி, பயணங்களில் படிக்க வண்ணதாசன் எனக்குப் பிடித்தமான காம்பினேஷன். விகடன் பிரசுரித்திருக்கும் வண்ணதாசனின் 'உயரப் பறத்தல்' சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன்.
பிழைப்புத் தேடி வந்த நகரங்களில், எதிர்படும் சிநேகமான சிரிப்பைத் தேடும் நபர்களுக்கு, அந்நிய மண்ணில் ஊர் மனிதர்களைப் பார்க்க விரும்பும் ஆட்களுக்கு வண்ணதாசன் கதைகள் பிடிக்கும். எனக்கும்.
அவர் கதைகளில் பெரிய அறங்களையோ, அறிவைத் தட்டிப் பார்க்கும் கேள்விகளையோ, ஆற்ற முடியாத கோபத்தையோ சந்திக்க முடியாது. ஆனால் மெலிதான நேசத்தையும், இயல்பான வாஞ்சையையும் கதை முழுக்க உணரலாம்.
அவரின் கதை மாந்தர்கள், தினமும் நாம் எதிர்கொள்ளும் மிகச் சாதாரண மனிதர்கள். அவர் கதைகளில்தான் அப்பாவைக் கொன்றவன் சிநேகமாய்ச் சிரிப்பான். கிட்டாமல் போன காதலியின் குழந்தையை அன்பாய் அணைக்கும் மனிதர்கள் இருப்பார்கள்.
மெல்லிசான மனதை முன் வைத்து எழுதுவதாலோ என்னமோ படிக்கும் போதே மனம் லேசாக ஆகி விடுகிறது. நாம் கடந்து வந்த மனிதர்கள் அத்தனை பேரும் இவர்கள் போல இவ்வளவு மென்மையானவர்கள் இல்லை என்ற போதும், நம் ஈகோவை எல்லாம் கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு, பழகிய மனிதர்களை ஒரு தரம் நினைத்துப் பார்க்க வைப்பதாய் இவர் கதைகள் எப்பவும் எனக்கு இருக்கும்.
மனதில் படிந்து போன சில வடுக்களை உருவாக்கியவர்களை ஒருபோதும் என்னால் மன்னிக்க முடிவதில்லை. சாவிலும் மறக்க முடியாத சில வார்த்தைகளை நான் கடந்து வந்திருக்கிறேன். சிலர் முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டுமென்ற வெறி என்னுள் கனந்து கொண்டிருக்கிறது. அத்தகையவற்றைக் கொடுத்த மனிதர்களை நினைத்துப் பார்ப்பதற்கு அவசியமேயில்லை என்றிருந்தேன். வண்ணதாசனின் கதைகள் அவற்றை மறுபரீசலனை செய்யச் சொல்கின்றன. அவர்களுக்குள்ளும் ஒரு மென்மை இருக்கலாம் என்பதை மனம் யோசிக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்து வந்த காயங்களை, இயல்பாக எடுத்தால் தான் என்ன என்று மனம் அறிவைச் சதா கேட்டுக் கொண்டேயிருக்கிறது. வண்ணதாசன் கதைகளால் விளைந்தவை இவை.
இந்தக் கதைகள் என்னைப் பண்படுத்துகிறதா அல்லது என் சுய கௌரவத்தை மழுங்கடிக்கிறதா என்று தெரிய எனக்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படலாம். 'உயரப் பறத்தலில்' அவர் சொல்வதைப் போல, "மனிதர்களைப் பற்றிய தகவல்களை சந்தோஷமாகப் பரிமாறிக் கொள்ள எல்லோராலும் முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!". அதைத் தான் செய்கிறது வண்ணதாசன் கதைகளும் உதயசூரியனின் 'சந்தித்திருக்கிறீர்களா'வும் ஆத்மார்த்தியின் மனக்குகைச் சித்திரங்களும்.
"உயரப் பறக்கும் எல்லாப் பறவைகளும் ஒரு சிறு கணம் பறப்பதில்லை! மிதக்கிறது! நீங்களும் அதை பார்த்திருப்பீர்கள்! இதுவரை பார்க்கவில்லையெனில் பார்ப்பீர்களாக! பறக்கவில்லையெனில் பறப்பீர்களாக!" இந்த வரிகள் வண்ணதாசன் அவர்கள் உயரப்பறத்தல் என்ற நூலின் முன்னுரையில் இடம் பெற்றவை. முன்னூரையே இவ்வளவு அழகாக எழுத முடியுமா என்று யோசித்தேன் படித்தவுடன். அன்பு காதல் நட்பு பாசம் பிரிவு சோகம் கோபம் சந்தேகம் இப்படிப் பல உணர்வுகளை இயல்பாக பேசும் 18 சிறு கதைகளைக் கொண்ட தொகுப்பே இந்நூல். இதில் சில கதைகள் நம்மை மேலும் ஒருமுறை படிக்க தூண்டும்! படித்தவுடன் மௌனத்தில் நம்மை ஆழ்த்தும்! பின்பு சிந்திக்க வைக்கும்! அவசரமில்லாமல் நிதானமாக படித்து நன்பர்களுடன் கலந்துரையாடல் செய்யபடவேண்டிய நூல். நான் வியந்த விசயம் என்னவெனில் இந்த நூலின் அட்டைப்படத்தில் உள்ள மருது ஐயா அவர்களின் ஓவியம் 😍 இந்நூலில் எந்தப் பெண் கதாபாத்திரத்தைப் படித்தாலும் அவள் முகமே என் கண் முன் தோன்றுகிறது.
வண்ணதாசனின் எழுத்துக்களை முதல் முறை படித்துணர்கிறேன்.
வண்ணதாசனால் மட்டும் எப்படி மனிதர்களை இவ்வளவு இயல்பானவர்களாக, அன்புடையவர்களாக உண்மையானவர்களாக காட்டி கதை அமைக்க முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது.
வண்ணதாசன் உலகில் வரும் மனிதர்கள் எல்லாம் நிஜத்தில் இருந்து எழுதப்பட்டவை என்று தோன்றினாலும் அவர் கதைகளில் இருக்கும் மனிதர்கள் எல்லாம் நிஜமாகவே இருந்தால் நன்றாக இருக்காதா என்று தோன்றுகிறது.
மிக எளிமையாக அலட்டிக் கொள்ளாத அற்புதக் கதைகள் இவை.