என் உரை எப்போதுமே சண்டைக்காரனாக அறியப்பட்டிருந்தவன், 16 வருட இடைவெளிக்குப் பின் இணையத்துக்கும் இலக்கியத்துக்கும் திரும்ப வந்தபின் போட்ட முதல் சண்டை இரண்டாவது மாதமே தொடங்கிவிட்டது. அது ட்விட்டரில்தான் நிகழ்ந்தது. அக்டோபரில் ட்விட்டர் மூலம் அறிமுகமானவனின் பழக்கம் பூசலாகி, நவம்பரில் முற்றி டிசம்பரில் நெடுங்கால நண்பருடனான உறவு முறிவில் போய் முடிந்தது. அது முழுவதும் இந்த நூலில் பதிவாகியுள்ளது. இதில் வருத்தமேதுமில்லை. எது நடந்ததோ அது நல்லதற்கே நடந்தது என்பது விதிவாதமோ, ஆன்மீகமோ அன்று. மன அமைதிக்கு எந்த ஊறும் நேராது, இறுதிவரை ஆரோக்கியத்துடன் இருப்பதற்கான நடைமுறை சாத்தியமுள்ள சிறந்த அணுகுமுறை. மனித உறவுகள் முக்கியம் என்பது உண்மைதான்.
விமலாதித்த மாமல்லன் (Vimaladhitha Maamallan) (பி. ஜூன் 19, 1960) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய விமர்சனம் என இதுவரை 6 அச்சு நூல்களும் 70க்கும் மேற்பட்ட மின்னூல்களும் வெளியாகியுள்ளன. மத்திய கலால், சரக்கு மற்றும் சேவைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் சென்னையில் வசிக்கிறார்.