கதை, கவிதை, நாவல், இலக்கிய விமர்சனம் முதலிய பல் துறைகளிலும் தமக்கென ஒரு நிலையான இடத்தைப் பெற்று வாசகர்கள் மனத்தைக் கவர்ந்தவர் ஆசிரியர் திருரகுநாதன்.
அவர் எழுதிய 'பஞ்சும் பசியும்' என்ற இந்நாவல் இலக்கியச் சாதனை வரலாற்றில் ஒரு மைல்கல், தமிழ் நாவல் இலக்கியப் பாதையில் ஒரு திருப்புமுனை; தமிழில் முற்போக்கு எதார்த்தவாதநாவல் இலக்கியத்துக்கு இதுவே முன்னோடி
இந்நூலைப் பற்றி ஸ்ரீலங்கா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் இலக்கிய விமர்சகரும் ஆராய்ச்சியாளருமான டாக்டர் க.கைலாசபதி தமது தமிழ் நாவல் இலக்கியம்' என்ற நூலில் இவ்வாறு மதிப்பீடு செய்கிறார்.
"சமுதாய இயக்க விதிகளையும் எதிர்காலச் சமுதாய வளர்ச்சியையும் நன்கு விளங்கிக்கொண்டு அவ்வுணர்வுடன் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை மெய்ம்மையுடன் சித்தரிப்பவனே யதார்த்தவாதி. இத்தகைய சிறப்புமிக்க யதார்த்த இலக்கிய நெறி தமிழ் நாவலுலகிற் பெருவழக்குப் பெற்றுள்ளதெனக் கூற முடியாது. இந்த வகையில் தென்னகத்தில் ரகுநாதனுடையபஞ்சும் பசியும் ஒன்றுதான் விதந்துகூறத்தக்கது".
மேலும், அயல்நாட்டு மொழியொன்றில் முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்டு, வெளியிடப்பட்ட முதல் தற்காலத் தமிழ் நாவல் என்ற சிறப்பையும் பெற்றது. செக்கோஸ்லாவக்கியா அகடமியில் திராவிடவியல் பிரிவின் தலைவராக இருந்த டாக்டர் கமில் ஸ்வலெபில்.
இந்நூலை செக் மொழியில் மொழிபெயர்த்துள்ளார். அந்நாட்டின் தலைநகரான பிராகில் உள்ள பிராஸ் பதிப்பகம் இம் மொழி பெயர்ப்பின் முதற் பதிப்பை 1957ல் வெளியிட்டது; இம் முதற் பதிப்பின் அரைலட்சம் பிரதிகளும் அந்நாட்டில் சில நாட்களிலேயே விற்றுத் தீர்ந்தன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
நம் நாட்டுக் கைத்தறி நெசவாளர்களை உலுக்கிக் குலுக்கி வந்த ஒரு பிரச்சினையைக் கருவாகக்கொண்டு, ஆசிரியர் ரகுநாதன் எழுதி வெளியிட்ட இந் நாவல், பல பதிப்புகளைக்கண்டு இன்றும் ஜீவசக்திமிகுந்த படைப்பாக விளங்கி வருகிறது. இந் நாவலில் வரும் பாத்திரங்கள் யாவும் நம் மத்தியில் நடமாடிய, நடமாடும் பாத்திரங்கள். ஆசிரியர் ரகுநாதனின் உயிர்த்துடிப்பு மிக்க பாத்திரப் படைப் பாலும், வைரம் பாய்ந்த சொல்லாட்சியாலும், வாழ்க்கை யின் எதார்த்தமான பிரதிபலிப்பாலும் தத்துவ தரிசனத் - தாலும் இந்நாவல் இலக்கிய ரசிகர்களை ஈர்ப்பதாகவும், விமர்சகர்களும் ஆராய்ச்சியாளர்களும்கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய கருவூலமாகவும் விளங்கி வருகிறது என்றால் மிகையாகாது. எனவே இந்நாவலைப் பல்கலைக் கழகங்களிலும் தன்னாட்சிக் கல்லூரிகளிலும் நாவல் இலக்கியத்திற்குப் பாடமாகவைக்கப்பட்டுள்ளது.
தொ. மு. சிதம்பர ரகுநாதன், (அக்டோபர் 20, 1923 – டிசம்பர் 31, 2001) சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர்.
என் இளம்பிராயம் முழுவதும் வறுமையில் வாடும் அன்னாடம் காச்சிகளாவே இருந்த இன்றும் இருக்கின்ற கைத்தறி நெசவாளர்களை பக்கத்துக்கு வீட்டுக்காரர்களாக கொண்டும் இருந்தததினாலோ என்னவோ, இந்த புதினத்தை பாதிப்பு இல்லாமல் கடந்து போய் விட முடியவில்லை . சொற்பம் பத்து ரூபாய்க்குள் காய்கறிகளையும் , மளிகை சாமான்களை வாங்கி , ரேஷன் அரிசி பொங்கி சாப்பிடும் அவல நிலை உள்ள மக்கள் . குழம்புக்கு புளி கூட வாங்க முடியாமல் , வெறும் புளி நாரை (புளி குதக்கு) வாங்கி சமைப்பர் . இருப்பினும் அவர்கள் சமையலுக்கு ஒரு தனி ருசி. மிக எளிமையான திருமணங்களை அவர்கள் சமுதாயத்தில் தான் நான் கண்டேன். கைத்தறி நூல்களை பாவு போடும் கஞ்சி வாசனையிலேயே என் காலைகள் புலர்ந்தன .ஏழ்மையிலும் மாண்புடைய நேர்மையான பொய் பேசாத எளிமையான அம்மக்களுக்கு நடுவே வளர்ந்தவன் நான் .
தொ .மு .சி யின் இப்புதினம் , நான் கண்ட நெசவாளர்களின் கஷ்ட நிலையை அப்படியே படம் பிடித்து காட்டியதைப்போல் நான் உணர்தேன் . அத்தொழிலில் உள்ள முதலாளித்துவ சுரண்டல்கள் , அவர்களின் நொந்துபோன வாழ்க்கை , அவர்களின் தொழிற்சங்க பரிணாமம் போன்றவற்றை தனக்கே உள்ள மொழி நடையில் தொய்வில்லாமல் விளக்கியிருக்கிறார் தொ .மு.சி .
கடந்த சில வருடங்களில் நான் வளர்ந்த அதே நெசவாளர் காலனியில் பல மாற்றங்களை நான் பார்க்கிறேன் . கைத்தறி வழக்காற்று போனதினாலோ என்னவோ , பலர் பரம்பரையாக செய்துவந்த தொழிலாளி விட்டு வேறு தொழிலுக்கு சென்றும் , அடுத்த தலைமுறையை படிக்கவைத்து அதனால் கிடைத்த வேலையினால் சில குடும்பங்களின் வாழ்வு நிலை உயர்ந்திருப்பதையும், இன்னும் சிலர் விசைத்தறி மூலமாகவும் சம்பாதிப்பதை என்னால் காண முடிகிறது.
காலத்தினால் மாற்றங்கள் இருந்தும், சில தரிகளின் தனித்த வைராக்கிய மிதி ஓசைகள் கூர்ந்து கேட்டால் தூரத்தில் இன்னும் கேட்கத்தான் செய்கிறது....
செக்கஸ்லோவாக்கிய தமிழ் அறிஞர் கமில் ஸ்வேலெபில் இந்நூலை செக் மொழியில் மொழிபெயர்த்திருப்பது மேலும் ஒரு சிறப்பு .
பலருக்கு தொ.மு.சியின் தமிழ் மொழிபெயர்ப்பாகிய மாக்ஸிம் கார்க்கியின் "தாய்" தெரிந்திருக்கலாம். அது தவிர தேடி வாசிக்கப்பட வாசிக்கப்படவேண்டிய அவரின் படைப்புகள் ஏராளம் .
மனித மனங்களையும், உணர்வுகளையும் எடுத்து கூற ஒரு இலக்கியத்திற்கு எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ அதே அளவும் ஏன் அதைவிட ஒரு படி மேல் பொறுப்பும், கடமையும் இந்த நாட்டின் சமூக அவலங்களை எடுத்து கூறுவதில் உள்ளது. அப்படி சமூக சிந்தனை கொண்ட இலக்கியங்கள் பெரும்பாலும் கட்டுரைகளாகவும், பரப்புரைகளாகவும் மட்டுமே வெளிப்பட்டு மக்களின் கண்களுக்கு புலப்படாமலே மறைந்து விடுகின்றன . ஆனால், அதே சமூக பொறுப்போடு, சமூக சிந்தனையை மக்கள் வாழ்க்கையின் மூலமாக கூறும் கதைகள் காலத்தால் அழியாது கடந்து நிற்பவை. சாயாவனம், சோளகர் தொட்டி போன்ற நாவல்கள் இந்த வரிசையில் இருந்தாலும் இவர்களுக்கெல்லாம் முன்னோடி இந்த பஞ்சும் பசியும் நாவலும் அதன் ஆசிரியரும் தான். இவர் மட்டும் இந்த நாவலுக்கு இந்த கருவை எடுக்காமல் இருந்திருந்தால் இத்தனை இன்னல்களும் யார் எதற்காக யாருக்காக என்ற உண்மை சுவடுகளே இல்லாமல் அழிந்திருக்கும்.
அம்பாசமுத்திரம் - பார்ப்பதற்கு அழகான ஊர்தான், அங்கு வாழ்ந்த நெசவாளர்கள், மற்றும் சிறு குறு ஜவுளி வியாபாரிகளின் வாழ்க்கை முறையும், சுந்தந்திரத்திற்கு பின் இந்திய அரசு உருவாக்கிய புதிய ஜவுளி சட்டமும், நூல் ஏற்றுமதி இறக்குமதி விதிகளும், கள்ள சந்தை வியாபாரத்தில் தின்று கொழுத்த பண (முதலை )முதலாளிகள் பற்றிய கதை என்று எளிதில் கூறிவிட்டு கடந்து செல்வது கடினம்.
கதையின் கருவை நிர்ணயித்தவுடன் கதை நகர்ந்து விடாது, அந்த கதையின் மாந்தர்கள் தான் அந்த கதையை நகர்த்தவும் பலம் சேர்க்கவும் தேவை. இந்த கதையில் வரும் அனைத்து கதை மாந்தர்களும் நம் மனதில் நிச்சயம் இடம் பிடித்து விடுவார்கள், அல்லது உங்கள் கண்ணீருக்குள் குடிபெயர்ந்து விடுவார்கள். ஏனெனில் அவர்கள் வெறும் கதைக்காக உருவாக்கப்பட்ட கதை மாந்தர்கள் அல்ல, அவர்கள் நம் கண்முன்னே, நம்மோடு இந்த உலகத்தில் வாழ்ந்தவர்கள். ஒரு நெசவாளர் சமூகத்தில் பிறந்த எனக்கு கைலாச முதலியாரும், தங்கம்மாளும் என் பாட்டணும், பாட்டியும் தான். அவர்களின் கண்களின் வழிதான் என்னால் இந்த கதையை வாசிக்க முடிந்தது.
கைலாச முதலியார் தற்கொலை செய்து கொள்ளும் முன் அவருக்கு ஏற்படும் நெருக்கடியை ஆசிரியர் விவரித்த விதம் வாசகனுக்கு ஒரு இறுக்கத்தை கொடுத்து விடுகிறது. மணி தனக்கு ஏற்பட்ட இன்னல்களை எண்ணி அஞ்சி ஊரை விட்டு ஓடுவது அந்த நேரத்தில் நமக்கும் தவறாகத் தான் தெரிகிறது, ஆனால் கதையின் முடிவில் அவனுக்குள் ஏற்படும் மாற்றம் நமக்குள்ளும் ஒரு உத்வேகத்தை புகுத்தி விடுகிறது. தன் மகன்களை பிரிந்து வாடும் இரண்டு தாய்களுக்கும் ஒரே தருணத்தில் தங்களின் வாரிசுகள் திரும்ப கிடைப்பது சிறப்பான ஒரு இடம், அதிலும் இரண்டு மகன்களும் சமூக போராளிகளாக கிடைப்பது கதையின் உச்சம். முதலாளியின் மகனாக இருந்தாலும், முதலிலிருந்து இறுதிவரை மக்களுக்காக களத்தில் நின்று கொடிபிடித்து, நெசவாளர் சமூகத்திற்க்கு சங்கம் அமைத்து கொடுத்து, ஒரு கட்டத்தில் தன் தந்தையையே எதிர்க்க துணியும் சங்கர் - சிவந்து காணப்படும் ஒரு இளஞ்சூரியனை போல் பிரகாசமாக தெரிகிறான்.
இந்த கதை இறுதி பக்கத்தில் முடியவில்லை, சொல்லப்போனால் கதை அங்கு தான் தொடங்குகிறது. நெசவாளர் சமூகம் தங்கள் நிலைமையை எண்ணி வருந்தி வறுமையில் சாவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வேளையில், வடிவேலு முதலியார், சங்கர், மணி, ராஜு போன்ற இளம் தலைமுறையினரின் உத்வேகத்தோடு, முறையான அரசியல் அறிவோடு, சமூக பொறுப்போடு அந்த பலம் இழந்து தளர்ந்து போன நெசவாளர் கூட்டத்தை ஒன்று திரட்டி பெரும் மக்கள் படையாக உருமாற்றி போராட்டம் தொடங்குவதோடு கதை நிறுத்தப் படுகிறது. இதற்கு மேல் முடிவு என்னவாக இருக்கும் என்பது நாம் அறிந்ததே. இந்த உலகில் மக்கள் படையை வீழ்த்திய ஒரு நிகழ்வு இது வரை நிகழ்ந்ததுமில்லை, நிகழப்போவதுமில்லை. வற்றிய வயிருடன், கண்ணீரின் கணத்துடன், நாளைய வாழ்க்கையின் கேள்வி குறிகளுடன், உழைத்து உருகுழைந்து போன உடல்களுடன், போராடினால் மட்டுமே உரிமையையும், ஊசலாடும் உயிர்களையும் மிட்டெடுக்க முடியும் என்று முழக்கமிட்டு முன்னேறும் இந்த மக்கள் படையை தடுக்க உலகின் எந்த அரசாலும் முடியாத ஒன்று.