இந்தக் கவிதைகளை கவிதைகளென்று எடுத்துக் கொள்ளாமல் விடுதலே எனக்குச் செய்யும் மரியாதை என நம்புகிறேன். எல்லா எழுத்தாளர்களையும் போல் கவிதைகளில் இருந்தே இலக்கியத்தின் பக்கமாய் வந்தேன், ஆனால் அந்த வடிவம் எனக்கானதாய் இல்லை. ஒரு தேர்ந்த கவிஞனுக்கான நுண்ணறிவோ கூர்மையான அவதானிப்புகளோ உருவகங்களோ கைவரப்பெறாமல் துவக்கத்தில் எழுதின ஒரு சில கவிதைகளோடு நான் அந்த வடிவத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டேன். புனைவெழுத்தாளனுக்கு சொற்களையும் புதிய படிமங்களையும் கண்டுபிடித்து தருகிறவர்கள் கவிஞர்களே. தமிழில் அப்படி நான் வியந்த கவிஞர்கள் ஏராளம். நல்ல கவிதைகளின் வாசகன் என்பதே நிறைவும் மகிழ்வும் அளிக்கக் கூடியதாய் இருப்பதால், தோல்வியுற்ற கவிஞனொருவனின் கடைசி சில கவிதைகள் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தோடு இந்த நூலை உங்களுக்கு வாசிக்கத் தருகிறேன்.