இரவு பெய்த மழையின் ஈரத்தால் பூமி குளிர்ந்திருந்தது. மரமல்லி மரம், காற்றில் அசைந்து மிச்சமிருந்த நீர்த்துளிகளுடன் பூக்களையும் கொஞ்சம் கீழே தூவ, மரத்துக்கு கீழ் நின்றிருந்த மதுமிதா சிலிர்த்தாள். சிறுமியின் குதுகலத்தோடு உதிர்ந்த பூக்களை சேகரித்தொடங்கினாள். ‘‘பூக்களை எடுத்து யாருக்கு மாலை தொடுக்கப் போகிறாய்?’’ அவளை கேலி செய்தபடியே சைக்கிளை ஸ்டேண்டு போட்டு விட்டு வந்தான் சக்தி. ‘‘யாருக்காவது கொடுக்கணும் என்றால்தான் சேகரிக்கணுமா? எனக்கு வெண்மையான இந்தப் பூ பிடிக்கும் சக்தி. இதன் வாசனைப் பிடிக்கும்... வேண்டுமானால் கொஞ்சம் முகர்ந்து பாரேன்...’’ அவள் கொத்துப் பூக்களை அப்படியே அவன் முன் நீட்டினாள்.