கோயில், தலம், தீர்த்தம் இம் மூன்றின் பெருமையையும் வரலாற்றையும் திருவிளையாடற் புராணம் கூறுகின்றது. கம்பர், திருத்தக்கதேவர், சேக்கிழார் முதலிய மாபெரும் கவிஞர்கள் விருத்தப்பாக்களில் தெய்வத்திருக் கதைகளை எழுதிப் பரப்பினர். வில்லிபுத்தூரார் பாரதம் எழுதினார். இவர்கள் வழியில் இத்தல புராணத்தைப் பரஞ்சோதி முனிவர் தமிழில் கவிதை வடிவில் எழுதியுள்ளார். கவிதைகளில் புதையுண்டு கிடக்கும் செய்திகளை வெளிக் கொணரச் செய்த முயற்சியே இவ் உரை நடையாக்கம். பரஞ்சோதியார் எழுதிய நூலுக்கு மூலநூல் வட மொழியில் கிடைத்த புராணங்கள் என்று பரஞ்சோதியார் கூறுகிறார். எது மூலநூல் என்பது தெளிவாகக் கூற முடியாது. எந்தத் தனிப்பட்ட புலவனும் இதை ஒருவரே எழுதியிருக்க முடியாத&
டாக்டர் ரா. சீனிவாசன் பச்சையப்பன் கல்லூரியில் 1940 முதல் 45 வரை மாணவர்; 1945 முதல் 1981 வரை தமிழ்த்துறைப் பேராசிரியர், தலைவர். மொழியியல், தமிழ் இலக்கணம், கட்டுரை நூல்கள், நாவல்கள், நாடகம், புதுக்கவிதை எனப் பல துறைகளிலும் அவர் நூல்கள் வெளிவந்துள்ளன; ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ என்னும் ஆய்வு நூல் மூன்று பதிப்புகளைக் கண்டது; மொழியியல் பத்துப் பதிப்புகளைக் கண்டது; அவர் எழுதிய உரைநடை நூல்களுள் ‘அணியும் மணியும்’ இன்னும் பாராட்டப்படுகிறது. அக்கட்டுரை நூலும், ‘சொல்லின் செல்வன்’ என்னும் நாடக நூலும், ‘வழுக்கு நிலம்’, ‘நனவோட்டங்கள்’ என்னும் நாவல்களும் பல்கலைக் கழகப்பாடநூல்களாக அவ்வப்பொழுது வைக்கப்பட்டு வருகின்றன; எழுத்து, அவர் தொடர் பணியாய் இருந்துவருகிறது. 1991 முதல் கம்பராமாயணம், மகாபாரதம், சீவக சிந்தாமணி முதலிய காவியங்கள் உரைநடையாக்கம் பெற்றன.