கோபம்,வெறுப்பு,தன்னகங்காரம்,தாழ்வுமனப்பான்மை என்று அனைத்தையும் கொண்டிருக்கும் மனது தனக்கென ஓர் எல்லையை வகுத்து தனித்து இருப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களையும் துன்படுத்தி அதில் தன்னைத் திருப்திபடுத்திக் கொள்ளும்.
பெற்றர்களின் தவறுகள் பிள்ளையின் வாழ்விலும் பங்கு கொண்டு இறுதிவரை அதுவே ஓர் அடையாளமாக அவர்களுடன் இணைந்துவிடும்.
சினிமா தயாரிப்பாளரான தந்தை ஒரு நடிகையுடன் சேர்ந்து வாழ்வதை பொறுக்க முடியாமல் தாய் தனித்துத் தன் உழைப்பால் பிள்ளைகளை வளர்த்ததால் அவரின் பெயரை கேட்டாலே வெறுப்பை உமிழும் தேவ்ராஜ் மற்ற மனிதர்களுடன் இருந்து தள்ளியே இருக்கிறான்.சிறுவயதில் இருந்து அப்பாவை போலப் பிள்ளை என்று மற்றவர்கள் சுட்டும் குற்றசாட்டைக் கேட்டு வளர்ந்ததால் ஒருவகை மனசஞ்சலத்துடனே காலத்தைக் கடத்துகிறான்.
அமைதியின் திருவுருவமான மதுராவிற்குத் தன் அத்தை மகனான தேவ்ராஜிவுடன் நடந்த திருமணம் அவள் குணத்தால் அத்திருமண வாழ்வு துன்பத்தை மட்டுமே அதிகம் கொடுக்கிறது.
மதுராவை விரும்பி இருந்ததை வெளிபடுத்த தயங்கிய தேவ்ராஜ் தன்னை மறைக்க அவளை எந்நேரமும் பயம் கொள்ள செய்து கண்ணீர் மட்டுமே விட வைத்ததால் கர்ப்பககாலத்தில் அவனிடம் இருந்து விலகி இருக்கும் முடிவை எடுக்கிறாள்.
மதுரா குடும்பமும் தேவ்ராஜ் குடும்பமும் நெருங்கிய உறவாக இருந்தாலும் அதில் இருக்கும் உறுப்பினர்கள் உண்டாக்கும் சிக்கல்கள் அவர்களையே நெருக்கி மனக்கசப்புகளையே கொண்டுவருகிறது.
தேவ்ராஜின் மனதை மாற்ற அவனால் மட்டுமே முடியும் என்பதை அவன் காதல் மனம் எடுத்துரைத்த பிறகு மதுராவிற்காகத் தன்னையே மாற்றியமைத்தவனுக்கு உறவுகளின் நெருக்கமும் அதனால் உண்டாகும் இன்பமும் வந்து சேர்ந்து ஒரு நிறைவை அளிக்கிறது.