ஐன்ஸ்டீன் தியரியின் படி, நேரம் பார்வையாளர்களைப் பொறுத்து வேறுபடும். வெவ்வேறு நம்பிக்கை கொண்ட மனிதர்கள் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களாக இருப்பார்கள் அது போலத்தான் இந்த சமூகத்திலும். பலர் வெவ்வேறு நூற்றாண்டு கருத்தியலைச் சார்ந்தவர்கள்... சிலர் இன்னமும் ஆதிவாசிகள் தான். இந்த கதையில் பல காதல்கள், வேறு வேறு வாழ்க்கைகள், நம்பிக்கைகள், போராட்டங்கள்... அவர்களினூடே முன்னும் பின்னும் பயணித்துக் கொண்டிருக்கிறாள் இமயா. காலசக்கரங்களும் கருந்துளைகளும் வார்ம் ஹோல்களும் எங்கோ பால்வீதியில் அல்ல நம் பார்வை படும் இடங்களிலெல்லாம்...
இழந்த அனைத்தும் வெறுப்பைத் தாங்கியிருப்பதில்லை,சூழ்நிலைகளால் விலக்கப்பட்டவைகள் அதன் அதன் நினைவுகளோடு காலத்தால் நிறுத்தி வைக்கப்படுகிறது.
தோழனே வாழ்க்கை துணையாக வர விருப்பம் தெரிவித்ததை ஏற்க தயாரான நேரத்தில் அவனின் அன்னையாலே அவனின் கனவு சிதைக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போகிறது இமயாவிற்கு.
நன்றிக்கடனுக்காக மகனின் ஆசையைப் பொசுக்கத் தயாரான குகனின் அன்னைக்குச் சிறுவயதில் இருந்து தான் பார்த்து வளர்ந்த இமயாவின் காதலா முக்கியமெனப்படும்?...
இடமாறுதல் இமயாவின் உணர்வுகளின் உச்சத்தை மட்டுப்படுத்தி அவளுக்கென எஞ்சி இருக்கும் வாழ்வை காட்டிவிடுகிறது.
தாயின் பக்கபலமாக எப்பொழுதும் வரும் ஆதியின் கவனம் இமயாவிடம் அடைக்கலமாகும் போது அவனின் வட்டத்திலுள்ளே அவளை இழுத்துவிடுகிறான்.
எதற்காகவும் எதுவும் நின்றுவிடுவதில்லை அதன் போக்கில் அனைத்தும் நடந்தேறும் சற்று காலதாமதமானாலும்...
மூத்த மகளின் விருப்பத்திற்குத் தலையசைத்தாலும் அவளிடம் எழுந்த கோபத்தை மறைமுகமாகக் காட்டிக் கொண்டு உலாவும் பார்த்திபன், மகள்களிடம் நெகிழ்ச்சியையும் அதட்டலையும் ஒரு சேர காட்டும் காவேரி,மகனின் அன்பில் முழுவதும் கரையும் ஷீலா என்று இமயாவை சுற்றி வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் அதன் எல்லையில் அவர்களுக்கான அடர்த்தியை வெளிக்காட்டி வாசிப்பவர்களின் நினைவில் நுணுக்கமாக நுழைந்துவிடுகின்றனர்.
மலர்ந்த பூ மீண்டும் மொட்டாவதில்லை. பூவின் விசயம் அப்படி இருக்கலாம். ஆனால், மாந்தரின் மனம் பூவைப் போன்றதல்ல. அது மரத்தைப் போன்றது. பனிக்காலத்தில் மரம் பட்டுவிட்டாற் போல தென்பட்டாலும், வசந்த காலத்தில், அதில் புதுத்தளிர் விடுகிறதே..! அது போன்றது வாழ்க்கை.. – வி.ஸ.கண்டேகர்.
அப்படிப் பட்டுப்போனதாக வெற்று வெளியில் சஞ்சரிக்கும் மனதில்.. காலமும் நேரமும் இணைந்து வசந்த காலத்தை உருவாக்குகின்ற.. கதைக்களம்…
இமயா… மகாராஷ்டிரா மாநிலத்தின் கிராமப்புற வங்கி ஒன்றில் பணியில் இருக்கிறாள். அவளது பெற்றோரும் அவளுடன் வசிக்கின்றனர். மூத்தப் பெண் ஷிவானிக்கு திருமணம் முடிந்து தமிழ்நாட்டில் வசிக்க.. எஞ்சியுள்ள தனது அடுத்த கடமையான இமயாவின் திருமணத்தை முடித்து விட, அவளது பெற்றோர் நினைக்க… அவளும் பிடிகொடுக்காமல் நழுவுகிறாள். முடிவாக அவர்களது நச்சரிப்பு பொறுக்காமல் சம்மதித்து விட… அவர்கள் அவளுக்காகத் தேர்ந்தெடுப்பது விமல் என்பவனை…
விமல்… இமயாவுடன் அதே வங்கியில் பணிபுரிபவன். அவளைப் போலவே தமிழகத்தைச் சேர்ந்தவன். இருவருக்கும் சற்று அளவளாவிக் கொள்ளும் அளவிற்கு நட்பும் இருந்தது.. இந்தக் காரணங்களால் அவன் அவளது பெற்றோர்களின் விருப்பமாகி விட.. வேறு வழியில்லாமல் அவர்களது விருப்பத்திற்கு சம்மதிக்கிறாள் இமயா.
ஆனால், அவள் மனமோ வெற்றிடத்தின் வசிப்பிடமாகவே இருக்கிறது. ஏனெனில், அவளது கடந்து சென்ற காலமும்… அவள் கடந்து வந்த காதலும்… அவளைக் கடந்து சென்ற ஒருவனும்.. என எல்லாமாக இணைந்து கொண்டதில், காலம் அவளுக்கு அவ்வெற்றிடத்தை பரிசளித்துச் சென்றிருந்தது… அதன் காரணமானவன் குகன்..
குகன்… அவளது சிறுவயது தோழன்.. பதின் வயது பங்குதாரன்… இளவயதின் இணையாளன்… இறுதி வரை உடன் வருவான் என ஆயிரமாயிரம் உணர்வுகளால் உருவான கற்பனைக் கோட்டைகளை, மனதிற்குள்ளேயே கட்டி முடிப்பதற்குள்ளாகவே அது சரிந்து மண் மேடாகி விட்டதில்.. இமயாவின் மனது எதிலும் பற்றுக் கொள்ளாமல் பட்டுப் போனது.. அதிலிருந்து அவளைக் காத்து விட எண்ணி, பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விமலாலும் முடியவில்லை. ஆனால், அது ஆதிரையனால் முடிந்தது...
ஆதிரையன்… அவள் பணிபுரியும் வங்கிக் கிளையின் மேலாளர் ஷீலா திவாகரனின் மகன். பப்ளிக் ரிலேஷன் ஆஃபிஸர். இமயாவிடம் காதல் கொண்டு, அவளிடம் அதனைப் பகிர்கிறான். அப்போதும் அவள் இளகிவிடவில்லை. ஆனாலும், ஆதியின் அணுகுமுறை… இமயாவின் மனதை அவனுடன் நட்பாக இணைக்கிறது.. பின், நாளடைவில் அந்நட்பே அவளது மனதில் காதலாக இழைய… பட்டுப்போன மனதில் காதல் பூக்கள் பற்றுக் கொள்ள, வெறுமையான உணர்வுகளில் எல்லாம் ஆதியின் காதல்… நீட்சி கொள்கிறது…
Feel good love story. வாழ்க்கையின் நிதர்சனத்தை காதலை மிக அழகாக எழுதியிருக்கிறார். இராணுவத்தில் சேராத கதாநாயகன் அதற்கு சொல்லும் விளக்கம் மிக மிக யதார்த்தம். வாழ்த்துகள் அனிதா.