நதி வழிப் பயணம் போகும் தக்கைக்கு என்ன லட்சியம் இருந்துவிடப் போகின்றது. காட்டாற்று வெள்ளம் போலன்றி மிக மெதுவாக அசைந்தாடிச் செல்லும் நீரில், இலக்கின்றி அலையும் ஒரு மெல்லிய சப்பரம் போல காற்றின் இசையைக் கேட்டபடி நகரும் தக்கையாக தோற்றம் கொண்டிருந்தன இக்கவிதைகள். கவிதைகள் வேண்டாம் என்று இத்திசை நீங்கி சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு என்று வேறு எண்ணங்களில் திரிந்தாலும், இக்கவிதைகளை மீண்டும் வாசிக்க நேர்கையில் எல்லாம் மனதுக்குள் மெல்லிய சலனத்தை ஏற்படுத்தியபடியே இருந்தன. மின்னூலின் சாத்தியங்களைப் பரிசோதித்துப் பார்க்கலாம் என்று எண்ணியபோது, முதலில் இக்கவிதைகளே நினைவில் வந்தன. தக்கையின் தனித்துவமே கனமற்று இருத்தல் தானே.