என்ற திருமூலரின் திருமந்திரக் கூற்றுப்படி குறையற்ற வாழ்விற்கு வேறு எதுவும் வேண்டாம். மனதை சரியாக வைத்துக் கொண்டால் போதும் என்பது தான் அவர் சொல்லியது. அவர் சொன்னது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக. இன்றைக்கும் நிலைமையில் மாற்றம் இல்லை.
அப்படிப்பட்ட மனது பற்றிய புத்தகம்தான் இது. வெற்றி தோல்விகளுக்கு மட்டுமல்ல, ஒன்றை வெற்றியாகவோ அல்லது அதையே தோல்வியாகவோ பார்க்க வைப்பதும் கூட மனதுதான்.
பொதுவாக சுயமுன்னேற்றுத்துக்கான புத்தகங்கள் என்றால், அறிவுரைகளை அள்ளி வீசியிருப்பார்கள், ஆனால் இதில் அறிவுரைகளை உதாரணங்களாக, கருத்துக்கள் வடிவில், தான் சந்தித்த மனிதர்களின் மூலம் பெற்ற அனுபவங்கள், புத்தர் போன்ற பல மகான்களின் கருத்துக்களை மேற்கோள்களாக காட்டி எழுதியுள்ளார், திரு சோம வள்ளியப்பன்.
இவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிறுவனங்களில் மனிதவளத்துறை(HR)யில் பணியாற்றி வந்துள்ளார். அதனாலேயே என்னவோ, பொருளாதாரம் பட்டம் பெற்றவராயினும், பலதரப்பட்ட மனித மனங்களை நன்கு படித்ததனால், அம்மனங்களிலிருந்து தாம் பெற்றதை இப்புத்தகம் வாயிலாக பகிர்ந்துள்ளார்.
இப்புத்தகம், தம் மனதை புரிந்துகொள்ள, கைக்கொள்ள, சொல்பேச்சு கேட்க வைக்க, குறிப்பாக பக்குவத்திற்கு உட்படுத்த எண்ணுபவருக்கு நல்லதொரு வழிகாட்டி. அதுவே, பக்குவப்பட்டவர்களாக தங்களை உணர்பவர்களும், தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்த , ஒப்பிட்டு சரிபாரத்துகொள்ளவும் உதவும்.
புத்தகத்தின் நடுநடுவே அந்தந்த கட்டுரையை பிரதிபலிக்கும் வரைபடங்களை இடம்பெறச்செய்தது, நம்முள் அக்கட்டுரையின் தாக்கத்தை வீரியப்படுத்துகிறது.
புத்தகத்திலிருந்து...
\\ எவரும் நடந்த செயலுக்காக வருத்தப்படுவதில்லை. அச்சப்படுவதில்லை. அந்த நிகழ்வால் ஏற்படப்போகும் விளைவினை நினைத்துதான் கவலை உண்டாகிறது. நடந்தது வேறு, அதனைப் பற்றிய நினைப்பு வேறு. //
\\ "இதுவரை உலகம் பெற்றுள்ள எல்லா அறிவும் மனதில் இருந்து வந்தவையே. பிரபஞ்சத்தின் எல்லையற்ற நூற்களஞ்சியம், உங்கள் சொந்த மனதிற்குள்ளேயே தான் இருக்கிறது . புற உலகம் நீங்கள் உங்கள் மனதை ஆராய்வதற்காக அமைந்த வெறும் ஒரு தூண்டுகோல், ஒரு வாய்ப்பு மட்டுமே. ஆனால் நீங்கள் ஆராய போகும் பொருளும் உங்கள் மனதுதான்". மனதைப் பற்றி இப்படி சொன்னது சுவாமி விவேகானந்தர். முதல்முறை எதிர்க்கிற வலுவுடன் மனதால் அடுத்த அடுத்த முறைகளில் எதிர்க்க முடியாது. மனது பாவம் வேறுவழியின்றி அதன் பக்கம் சாய்ந்து விடும். கட்சி மாறிவிடும்., ஒரு முறை கூட விஷயங்களை செய்யக்கூடாது என்பதுதான் உங்களுக்கான தகவல் . //
\\ காபித்தூள் அள்ளிய கரண்டி , மிளகாய் கிள்ளிய விரல்கள், எரிச்சலில் இருக்கும் மனநிலை. இவையெல்லாம் அடுத்து செய்பவவற்றையும் பாதிக்கும். அந்த வாசனை,காரம், எரிச்சல் போகும்வரை காத்திருப்பது தான் புத்திசாலித்தனம். //
\\ எதைச் செய்யலாம் என்று முடிவு செய்வதற்கு டெலஸ்கோப் பார்வையையும், எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு மைக்ரோஸ்கோப் பார்வையையும் பயன்படுத்தலாம். //
மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றியும், மனதைப் புரிந்துகொள்வதைப்பற்றியும் விளக்குகிறார் ஆசிரியர். மனதை சரியாகப் புரிந்துகொண்டு செயலாற்றினால் வெற்றி எளிதில் வசப்படும் என்கிறார் ஆசிரியர்.