வாராணசியென்னும் புறவெளி,காலாதீதமாக உயிர்த்துறப்பிற்கான நிலம். பெண்ணுடல் மரணத்தின் நிலமாக உருவகிக்கப்படும்போது வாராணசியைக் கட்டமைக்கும் அகவெளியின் கதையாகிறது. இரு பெண்கள். இருவேறு காலங்கள். அவர்களின் உணர்வுகளின் காலத்தில் நிகழ்வுகள் மீள மீளச் சுழல்கின்றன.பார்க்கும் காலம் அவற்றை முன்னதிலிருந்து வேறொன்றாக அர்த்தப்படுத்துகிறது. நிகழ்வுகளைத் தொன்மத்துடன் அடையாளப்படுத்துவதன் மறுதலையாக இன்றைத் தொனமைத்தன்மை கொண்டதாக மாற்ற முயல்கிறது இந்நாவல்
முற்றுப்புள்ளிகளின் மேல் காதல் வர பா. வெங்கடேசனை வாசிக்க வேண்டும். பத்திகள் அத்தியாயங்கள் ஏதுமற்ற பிரவாகமாய்ப் பாயும் அவரது கதைகளின் தீவிரமும், மொழியைக் கொண்டு அவர் செய்யும் ஜாலங்களும், வாசிப்பில் அவர் இட்டுச்செல்லும் உச்சங்களும் தமிழில் இதுவரை நான் கண்டிராதவை. இத்தனை சிறந்த எழுத்தாளரை நம் சமூகம் கொண்டாடாது அறியாமையில் மூழ்கியிருப்பது பேரவலம்.
மயக்கநிலைத் தோற்றங்கள் என்று வர்ணிக்கப்படும் இப்புதினம், ஓர் குடும்பத்தின் கதையை நடுவில் கொண்டு, போதை நிலை, உடல்களும் அவைசார் வரலாற்றுப் பார்வைகளும் அவை ஏற்படுத்தும் மனத்தாக்கங்களும், இந்திய சமூகம், ஓசூர் மற்றும் வாரணாசியின் நிலப்பரப்புகள், புகைப்படக் கலை, காமம், மரணம் என்று பல திசைகளில் தத்துவ விசாரணைகளாகவும் நில/மனச் சூழல் விவரனைகளாகவும் திருப்பங்கள் பல கொண்ட மர்மக்கதையாகவும் பல ரூபங்களில் பயணிக்கிறது.
அவரின் பிற படைப்புகளைப் போல வாராணசி (வாரணாசி தானே பொதுவான உச்சரிப்பு?)யும் நேர்க்கோட்டில் செல்லாமல், காலம் களம் அனைத்தும் random ஆக மாறி மாறி, காலத்தின் தொடர்ச்சியால் அல்லாமல் thematic தொடர்ச்சியால் ஒரு காட்சியில் இருந்து மற்றொரு காட்சிக்குத் தாவுகிறது. சில சமயங்களில் இந்த மாற்றங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த கதை எவ்வாறு தொடங்கப்பட்டு எப்படி எழுதப்பட்டது எனும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. அபாரமான வாசிப்பனுபவமும் இவரின் எழுத்தில் உறுதி.
ஆனாலும் : தேவை பெரிதும் இல்லாமல் நீளும் வாக்கியங்கள் பொறுமையை சோதிக்கின்றன. வேண்டுமென்றே செயற்கையாகக் கடினம் ஏற்படுத்துவதற்கு பல வாக்கியங்களைப் பிணைத்து இந்த சிக்கலான வாக்கியங்கள் உருவாக்கப்பட்டவாறு தோன்றுகிறது. சிரமம் இல்லாமல் இந்த வாக்கியங்களை கூறு போட்டால் தனி வாக்கியங்களாக அழகும் பாய்ச்சலும் குறையாமல் இன்னும் எளிதான வாசிப்புக்கு வழி வகுக்கும்.
பா. வெங்கடேசன் எழுதிய வாரணாசி . நான் படிக்கும் அவரின் முதல் நாவல். வித்யாசமான கதைக்களம் , வித்யாசமான மாந்தர்கள் , வித்யாசமான நிகழ்வுகள், வித்யாசமான எழுத்து நடை. சுருக்கமாக சொன்னால் , நாம் படித்தவற்றில் சற்று வித்யாசமான நூல் தான் . கதையாக சுருக்க வேண்டுமானால் , ஓசூரில் வசிக்கும் மூன்று சகோதரிகள் , மற்றும் அவர்களின் ஒரே கணவர் , ஒரே பிள்ளை ஆகியோரை சுற்றி நடக்கும் /நடந்த கதை. ஆனால் இதை கதையாக பார்க்காமல் , நடக்கும் காலம் , சம்பவங்கள் , நடை ஆகியன படிக்கச் சுவாரசியமான ஒன்றாக இந்த நாவலை ஆக்குகிறது.
வாசகப் பங்களிப்பை 100% கேட்கும் நாவல். சம்பவங்களை, உரையாடல்களை, விவரணைகளை, வாசகர்களாகிய நாம் தான் பிரித்து பார்த்து அர்த்தப்படுத்தியோ, அர்த்தப்படுத்தமலோ புரிந்துகொள்ள வேண்டும். இதற்கான குறிப்பை நாவலின் முதலிலே நாவலாசிரியர் Jeorges Battaile ன் quote மூலம் சொல்லியுள்ளார்.
"Arranging narrative is bourgeois mania" - Jeorges Battaile -
தமிழில் ஒரு சில எழுத்தாளர்கள் மட்டுமே நம் கைபிடித்து கடலுக்குள் இழுத்து சென்று மூழ்கடித்து நம்மை வேறொன்றாக வெளியேற்றுவார்கள் . அப்படிப்பட்ட எழுத்தாளர்களில் முதன்மையானவர் பா.வெங்கடேசன் . தமிழ் இலக்கிய சமூகத்தை தாண்டி பெரிதாக வெளியே தெரியாத , வெளியே தெரியவேண்டிய ஆகா சிறந்த எழுத்தாளர் இவர் . அதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டே இந்த வாரணாசி . அவர் எடுத்தக்கொண்ட கதைகளம் அதை கையாண்டவிதம் கதாபாத்திரங்களின் விவரிப்பு , கதாபாத்திரங்களிடேயே இருக்கும் உறவை விவரிப்பது என்று எல்லாமே உலகத்தரத்தில் படைத்திருந்தார் . சில இடங்களில் அந்த சூழ்நிலைகளுக்கேற்ற கதாபாத்திரங்களின் வர்ணனைகளை அந்த சூழ்நிலையில் அந்த கதாபாத்திரமாக நாம் இருந்தால் அந்த வர்ணனைகளை மறுத்திருக்கவே முடியாத அளவு இருக்கிறது . இரு பெண்களை மையப்படுத்தி ஒரு குடும்ப கதையை கட்டமைத்து அதை இலக்கிய உலகத்திற்கு பரிசாக , எல்லாரும் படித்து இன்புறும் பரிசாக அளித்திருப்பது என்பது எழுத்தாளரின் கொடையே அன்றி வேறொன்றுமில்லை . இலக்கிய படைப்பிற்கான இலக்கணங்கள் எழுத்தாளருக்கேற்ப , விமர்சகர்களுக்கேற்ப , ரசிகர்களுக்கேற்ப மாறுபடும் . சிலர் புறக்கணிக்கும் குப்பைகள் சிலர் கண்களுக்கு இலக்கியங்களாக தெரியலாம் , சிலர் கண்களுக்கு தெரிந்த இலக்கியம் பலர் கண்களுக்கு அர்த்தங்களற்ற வாக்கியங்களாக தெரியலாம் . இலக்கயவாதிகள் , விமர்சகர்கள் , ரசிகர்கள் என்று யாருமே புறம்தள்ளமுடியாத இலக்கிய படைப்புகள் கோடியில் ஒன்றிரண்டு தான் வரும் அதில் ஒன்று இந்த வாரணாசி . தமிழில் உலகத்தரத்தை எதிர்பார்த்து ஏமாந்துவிட்டேன் என்று சொல்லும் அத்தனை பேரும் படிக்கவேண்டிய புத்தகமிது . இந்த புத்தகத்தை படித்தவுடன் அவர்களின் கருத்து கண்டிப்பாக தற்கொலை செய்து கொள்ளும் என்பது உறுதி .