குதிரைக்காரன்
ஆசிரியர்: அ. முத்துலிங்கம்
சிறுகதை தொகுப்பு
150 பக்கங்கள்
காலச்சுவடு பதிப்பகம்
ஒரு சிறுகதை ஆசிரியருக்கு இருக்கும் பெரும் சவால் அவர் எழுதிய கதைகளே தான். அவரை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் அவரிடம் இருந்து வெளிவரும் ஒவ்வொரு கதைகளும் முந்தைய கதைகளின் சாயம் இருந்துவிடக்கூடாது,மேலும் முந்தைய கதைகளுடன் ஒப்பிட்டும் பார்ப்பார்கள். இதுவே சிறுகதை ஆசிரியர்களுக்கு ஒரு பெரும் சுமை. இதனாலயே என்னவோ உலகின் தலை சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் மிக குறைவான கதைகளே எழுதியுள்ளனர். ஆகச்சிறந்த உதாரணமாக அந்தோன் செக்கோவ்வையும், புதுமைப்பித்தனையுமே எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் அவர்கள் வாசகர்களையும் சரி, சிறுகதை எழுத்து உலகத்தையும் சரி அவர்கள் வெகு உயர்வாக கருதினர் என்பதே காரணம். இதனையே அ. முத்துலிங்கம் ஐயா அவர்கள் தன் முன்னுரையில் கூறுகிறார். 100 நாற்காலிகள் செய்யும் ஒரு தச்சனுக்கு 101 ஆவது நாற்காலி செய்வது சுலபம் ஆனால் 100 சிறுகதை எழுதிய ஒரு எழுத்தாளருக்கு 101 ஆவது கதை எழுதுவது மிக கடினமான ஒன்று. ஆனால் அந்த கடினமான பாதையை வெகு இலகுவாக, அசாதாரணமாக கடந்து விட்டார் அ முத்துலிங்கம் ஐயா அவர்கள்.
இந்த தொகுப்பில் மொத்தம் 15 கதைகள் உள்ளன. இப்படி சொல்வதை விட 15 பெண்களின் வாழ்க்கை என்றுதான் கூற வேண்டும். குறிப்பாக எழுத்தாளர்கள் தங்கள் நிலத்தை ஒட்டியே தங்கள் கதை களத்தையும், கதை மாந்தர்களையும் தேர்வு செய்வார்கள். இதற்க்கு அ முத்துலிங்கம் ஐயா அவர்கள் ஒரு விதி விலக்கு. இவருக்கு இந்த உலகமே தன் நில பரப்பு தான், இந்த உலகமே இவருக்கு கதை களம் தான், உலகின் எந்த மூலையில் வாழும் மனிதர்களும் இவருக்கு கதை மாந்தர்கள்தான். கண்டம் விட்டு கண்டம் பயணிக்கும் பறவை போல இவரின் கதைகள் கனடா, இலங்கை, இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளை கடந்து செல்பவை.
பெண்களை எத்தனை எழுத்தாளர்கள் எத்தனை காலம் எவ்வளவு எழுதினாலும் இந்த உலகில் இன்னும் எழுதப்படாத பெண்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர். அப்படி இதுவரை இலக்கியம் கண்டுகொள்ளாத பெண்களை தேடி தேடி எழுதியுள்ளார் முத்துலிங்கம் ஐயா. இவர் அனைத்து கதைகளையும் ஒரு கதை கேட்பவராகவோ, கதை சொல்லியாகவோ நமக்கு கதை சொல்கிறார். நிலம் தன் மேல் வீழும் மழைத்துளிகளை ஈரமாக தக்கவைத்து தனக்குள் புதையும் விதைக்கு அதனை பருக கொடுத்து விருட்சமாக்குவது போல, இவர் தன் மேல் அந்த பெண்கள் சிந்திய கண்ணீரை தன் மனதிற்குள்ளே சேமித்து இலக்கிய விருட்சமாக நமக்கு கொடுத்திருக்கிறார். ஒரு வேலை தி ஜானகிராமன் பல நாடுகள் சுற்றியிருந்தால் இப்படி தான் எழுதியிருப்பாரோ? அந்த குறையை அ முத்துலிங்கம் ஐயா தீர்த்துவிட்டார்.
பெண்களின் பல்வேறு பருவநிலைகளில் அவர்களின் மனநிலையை பேதை பெண்களில் தொடங்கி பேரிளம் பெண்கள் வரை ஒரு கண்ணாடி போல் தன் கதைகளில் பிரதிபலிக்கிறார். பள்ளிக்கு செல்லும் மூளையால் சிந்திக்க தொடங்கும் அனசுயா, ஒரு காருக்காக திருமணத்திற்கு சம்மதிக்கும் கனகசுந்தரி, தன் சமூகத்தையும் தாண்டி தன் அம்மா பக்கம் நிற்கும் சண்முகப்ரியா போன்ற பெண் பிள்ளைகளை நாம் புரிந்துகொள்வது கடினமே, ஆனால் ஜகதலபிரதாபன் கதையில் தங்கச்சியின் நெருப்பு காய்ச்சலுக்கு யார் காரணம் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த தொகுப்பில் என் மனதை பாதித்த, அல்ல என் மனதிற்கு மிக நெருக்கமான, இனி என் வாழ்நாள் நெடுக என் நினைவுக்கூட்டில் நிரந்தரமாக அடைகாக்க படுபவர்கள் ஹெலன் { ஐந்து கால் மனிதன் }, சாரா {புளிக்கவைத்த அப்பம் }, பிரிகேடியர் துர்கா { எல்லாம் வெல்லும் }
ஹெலன் - வாழ்வின் அனைத்து நிலைகளிலும் கைவிடப்பட்டாலும் தன் நம்பிக்கையை கைவிடாத ஒரு இறைவி. "துடைப்பைகட்டையோடு நிற்கும்போது நான் அழகாகத்தான் இருக்கிறேன், இல்லையா? " ஆம், நீ அழகாகத்தான் இருக்கிறாய், உன்னை இந்த நிலைக்கு தள்ளிய இந்த உலகம் தான் குப்பை.
சாரா - உண்ண உணவு, உடுத்த உடை, உறைவிடம், இவைகள் கிடைக்காதவர்களுக்கு தான் அதன் அருமை புரியும் என்பார்கள். சாரா ஏன் சமைத்துக்கொண்டே இருக்கிறார்? உணவின் மேல் அவளுக்கு ஏன் அப்படி ஒரு தீராத பற்று? அவள் ஒரு யூதராக பிறந்ததுதான் காரணம்.
பிரிகேடியர் துர்கா- துர்காவின் கண்கள் வழி இந்த உலகை நீங்கள் பார்த்தால்தான் புரியும் இந்த உலகம் எவ்வளவு இரக்கமற்றது என்று. பெண் புத்தி பின் புத்தி என்று இன்றும் பழைய புராணம் பேசித்திரியும் குருடர்கள் முகங்களின் மேல் இந்த கதையை வீசி - " பார், என் குலத்து வீரமங்கையின் உதிரசூடு தாங்காமல் எதிரிகள் திணறி திரும்பி ஓடுவதை என்று "
உலகில் எந்த மூலையில் பெண்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு காரணம் ஒன்று தான். ஆண்களை தன் விருப்பத்திற்கு ஏற்ப வாழவிடும் இந்த சமூகம் பெண்களை மட்டும் ஏன் கண்காணித்து கொண்டே இருக்கிறது. பெண்களை உவமைக்காக நதியோடும், ஆறுகளோடும், கடலோடும் ஒப்பிட்டு எழுதினாலோ, பேசினாலோ போதாது அவர்களை ஒரு நீரைப்போல சுதந்திரமாக செயல்பட இந்த சமூகம் வழிவிட வேண்டும். அவர்கள் பயணத்தின் வழி ஒரு தடுப்பு அணையை சமூக கட்டுப்பாடுகள் என்ற பெயரில் விதிக்கக்கூடாது. இந்த நிலை தொடர்ந்தால் நீரின் வேகமும், ஆற்றலும் வீறு கொண்டு ஒரு நாள் அந்த அணை உடைப்பட்டு காட்டாற்று வெள்ளமாக வெளிவரும். நதிகளுக்கும், மலைகளுக்கும் பெண்களின் பெயர் சூட்டுவதை விட அந்த மலையை போல், நதியை போல் அவர்களை அந்த இயற்கையை போல் இயற்கையாய் வாழ வழி வகுப்போம்,அவர்களோடு இனைந்து இந்த வாழ்வை ஒவ்வொரு நாளும் வாழ்ந்து தீர்ப்போம்.
-இர. மௌலிதரன்.