சரித்திர கதைக்களுக்கே உரியதான அக்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றிய வர்ணனைகளும், நாட்டை ஆளும் மன்னனின் வீரத்தை விளக்கும் வர்ணனைகளுடனே தொடங்கினாலும் உடனடியாகக் கதையின் களத்திற்குள்ளே நுழையவிடுகிறது அடுத்து அடுத்து வரும் நிகழ்வுகளால்.
தன் குடும்பத்தின் அழிவிற்குக் காரணமான பாண்டிய மன்னரை தோற்கடிக்கத் தனக்கென ஓர் ஒற்றர் கூட்டத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல் பாண்டிய நாட்டிற்கு எதிராக மற்ற அரசர்களை ஒரே அணியில் நிறுத்து போர் புரிய வைக்கத் தன்னால் ஆன முயற்சிகளை மேற் கொள்கிறான் குவளை மாறன்.
பாண்டிய இளவரசன் கல்வியையும் போர் முறைகளையும் கற்க வந்த இடத்தில் குருவின் மகளான செண்பகக் குழலியை காதலிக்க,பெற்றவர்களின் சம்மதமும் கிடைக்கிறது.மக்களின் முன்னிலையில் இளவரசன் இளஞ்செழியனின் திறமைகள் நிரூபிக்கப் பட்டாலும் மீதி இருக்கும் பயிற்சிகளை முடிக்கப் பயணப்படுபவனைக் கொல்ல முயலும் குவளை மாறனுக்குத் தோல்வியே கிட்டுகிறது.
கயற்கண்ணியைச் செண்பகக் குழலிக்குத் தோழியாக அனுப்பி வைத்த குவளை மாறன் அவளின் மூலம் அங்கே நடக்கும் நிகழ்வுகளைத் தெரிந்து கொள்கிறான்.குவளை மாறனைவிடச் சிறந்த ஒற்றர்படைகளை வைத்து இருக்கும் பாண்டியர்களுக்குக் கயற்கண்ணியின் பின்புலம் தெரியவர அவளுக்குத் தண்டனையளிக்கும் நேரத்தில் குவளை மாறனால் காப்பாற்றப்படுகிறாள்.
பாண்டியர்களைப் பற்றி மேலும் பல நூல்கள் வரவேண்டும் என விரும்பினேனல்லவா? இதோ. பாண்டிய நெடுங்காவியம். சிறப்பான வரலாற்று நாவல்.
சங்க காலத்தில் புகழ் பெற்ற பாண்டிய மன்னனான நெடுஞ்செழியனின் காலத்தில் நடக்கும் கதை இது. அவன் மகன் இளஞ்செழியன். இளம் பருவத்திலிருந்து அவனுடன் ஒன்றாக வளர்ந்த செண்பகக் குழலி, புலவர் மருதனார், பாண்டிய நாட்டின் வளத்தையும் வனப்பையும் கண்டு புழுங்கும் சோழர்களும் சேரர்களும் பிற சிற்றரசர்களும் எனப் பலருண்டு கதையில்.
ஆனால் இந்நூலிலேயே முக்கிய மையக் கதாபாத்திரமாக வருவதோ குவளை மாறன். அதோடு அவனின் சதிகார சீடர்களும் செண்பகக் குழலியின் தோழியாக நடிக்கும் கயற்கண்ணியும் மிக முக்கியமான கதாபாத்திரங்கள்.
பாண்டிய நாட்டை முற்றாக அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு தன் சீடர்களையும் கயற்கண்ணியையும் வைத்து திட்டம் தீட்டுகிறான் குவளை மாறன். ஏன் என்பது புலப்படவில்லை. ஆனால் ஏதோவொரு இழப்பு இருக்கிறது குவளை மாறனுக்கு. மற்றைய மன்னர்களை ஒன்று திரட்டும் வேலையில் இறங்கி முயற்சிக்கிறான்.
இளஞ்செழியனை குவளை மாறனும் கும்பலும் கொல்ல முயல்கின்றனர். திட்டம் தோல்வியுறவே சதிக்கும்பல் தப்பிக்கிறது.
ஆசானுக்காக பாண்டியரை ஒற்றறியும் கயற்கண்ணி பிடிபட்டு தண்டனை வழங்கும் வேளையில் அவளை மயிரிழையில் காப்பாற்றுகிறான் குவளை மாறன். அதோடு இப்பாகம் திடீரென்று முடிகிறது.
எழுத்தாளர் சுவாரசியமாக கதையை நகர்த்துகிறார். அக்கால மக்களின் வாழ்க்கை முறையையும் மன்னனின் வீரத்தையும் அழகாக வர்ணிக்கிறார். எனக்குப் பிடித்த அங்கம் கணியன் பூங்குன்றனார் தமிழினமே புகழ் கூறும் பாடலை இயற்றி தமிழ்ச் சங்கத்தில் ஒப்பிக்கும் காட்சிகள். அது புல்லரிக்க வைக்கும். அந்தத் தமிழ்ச் சங்கம் கூடும் காட்சிகள் முற்றிலும் அதி சிறப்பு.
In the history of Tamil emperors, Pandiyas were quite underrated by historical authors. Hope this sequel novel will break that record and shed light on the bravery of Pandiyas.