துயிலில் ஆட்சி செய்யும் கனவுகள் விடியலில் கலைந்துவிடும். அவை கற்பனையின் தாக்கமாகவோ, சம்பவத்தின் தொடர்ச்சியாகவோ, ஆசையின் வெளிப்பாடாகவோ இருக்கலாம். பதின்ம வயதில் காதலாய்த் தோன்றும் ரிதன்யாவின் கனவுகளும், அவற்றை ‘இன்ஃபாக்சுவேஷன்’ என்று அலட்சியமாய் ஒதுக்கும் சைதன்யனின் உணர்வுகளும் பக்குவப்படும் வயதிலும் அவ்வாறே தோன்றுமா? அல்லது கானலாய் மறையுமா? இவர்களுக்கிடையில் உணர்வு ரீதியான பிணைப்பையும், தோழமை கொடுக்கும் நெருக்கத்தையும், நெடும் வாழ்க்கைப் பயணத்திற்கான நம்பிக்கையையும் கொண்ட லாரஸின் கனவுகள் குறுக்கிடும் போது காதலை யார் காப்பாற்றிக் கொள்வார்கள்? இம்முக்கோணக் காதல் கதையில் யாரின் கனவுகள் கலையாத கனவுகளாயின? விடை அறிய வாசியுங்கள் ...
சலனத்திற்கும் அவமானங்களுக்கும் கொடுக்கும் அதீத கவனமே அதை மறக்க முடியாமல் அதனுள்ளே சுழல விட்டுக் காலம் கடந்த பிறகே தெளிவான முடிவை நோக்கி தள்ளும்.
இந்த எழுத்தாளரின் மாயத்தூரிகை கதையின் கதாநாயகி போலவே இக்கதையின் நாயகியும் பள்ளி பருவத்தில் ஒருவனைப் பார்த்து தன் மனதில் அவனுக்கெனத் தனியிடத்தை அளிக்கிறாள்.
குடும்பக் கஷ்டத்தைப் பார்த்து முன்னேற வேண்டும் என்று பல கனவுகளுடன் இருக்கும் சைதன்யாவுக்குத் தன் பின்னே சுத்தும் ரிதன்யா எரிச்சலையே உண்டாக்குகிறாள் அவளைத் தடுக்கும் பொருட்டு அவன் உபயோகித்த தகாதவார்த்தைகள் மனதிலே பதிந்து அவனை மறக்க செய்யாமல் இருக்கிறது.
சிலவருடங்களுக்குப் பிறகு இருவரும் தங்களுக்கென ஒரு தனி அடையாளத்துடன் சந்திக்கின்றனர்.
தான் இவ்வளவு வருடங்களாகக் காதல் என்று நினைத்தது காதல் அல்ல என்று ரிதன்யா உணரும் நேரத்திலே சைதன்யாவிற்கு ரிதன்யா தன் மீது வைத்திருந்த காதல் புரிகிறது.
ரிதன்யாவின் குடும்ப நண்பரும் அவளின் திறமையைக் கண்டறிந்த லாரஸ் மனதிற்குள்ளே அவளை ஆராதித்தது சரியான நேரத்தில் வெளிப்பட்டு ரிதன்யாவை அவனுடைய காதலில் மூழ்கடிக்கிறது.
மறுப்பைக் கூட நாகரீகமாகச் சரியான நேரத்தில் சொல்ல வேண்டும் என்ற பக்குவத்தை அடைகிறான் சைதன்யா.