கௌரி லங்கேஷின் மதமும் அரசியலும் புத்தகம் பற்றிய அறிமுகம் / விமர்சனம் / மதிப்புரை
லிங்காயத்துகளின் பிரச்சினை,
ஸ்ரீராம் சேனாவின் அட்டூழியங்கள், காவேரி நீர் சண்டைகள், முஸ்லிம்களின் அடக்கத்தலங்கள் சேதம் முதல் தற்போது ஹிஜாப் பிரச்சினை வரை கர்நாடகத்தில் ஏதொவொரு Heat of the moment ஐ தக்கவைத்துக் கொண்டே இருக்கிறது. இந்துத்துவ பார்ப்பனிய கும்பல்கள்.
Electronic City, Well Developed State, Educated State, இந்தியாவை பிரதிபலிக்கிற தகவல் தொழில்நுட்ப HUB என பெங்களூருக்கு வேறொரு முகம் இருந்தாலும் இந்துத்துவ அமைப்புகளின் அட்டூழியங்கள் அவ்வபோது அதிதீவிரமாகவே எட்டிப் பார்க்கும் மாநிலம்தான் கர்நாடகா. தமிழ்நாட்டிலோ, ஆந்திரத்திலோ அமர்ந்து கொண்டு அதனை விமர்சிப்பது எளிதான ஒன்றுதான். ஆனால் அம்மண்ணின் சொந்தக்காரியான கௌரி லங்கேஷ் கர்நாடகத்தின் அரசியலை, பார்ப்பனிய சூழ்ச்சியை, இந்துத்துவ அட்டூழியங்களை அம்மண்ணில் இருந்தே அம்பலப்படுத்தியிருப்பது தான் பாசிச சங்கப்பரிவார கும்பலுக்கு எரிச்சலை தந்திருக்கிறது.
எம்.எம்.கல்புர்கி
லிங்காயத்துகளின் நுண் அரசியலை பேசியதற்காகவும், லிங்காயத்துக்கள் தனிமதம் என எழுதியதாலும்தான் பார்ப்பனிய மதங்களின் கூடாரம் காலியாகிவிடுமோ என்று எண்ணி அவரது எழுத்துக்கள் மீது கொஞ்சம் கொஞ்சமாக தாக்குதல் நடத்தி கடைசியாக அவரையே சுட்டுக் கொன்றனர். இந்துத்துவ கும்பல்கள் அறிவுத் தளத்தில் பயணிக்கும் அறிவுஜீவிகளை, படைப்பாளிகளை கொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது.
தபோல்கரை போல, கல்புர்கியை போலத்தான், கோவிந்த் பன்சாரேயைப் போல கௌரி லங்கேஷும் அதே பானியில் சுட்டுக் கொல்லப்பட்டார் இம்மூன்று கொலைகளும் ஒரே பானியில் சனாதன் சன்ஸ்தா எனும் ஒரே இந்துத்துவ அமைப்பே முன் நின்று நடத்தியிருக்கிறது.
11கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு தான் இப்புத்தகம். முதல் கட்டுரையே ரோஹித் வெமுலாவின் நினைவுகளோடுதான் துவங்குகிறது. தலித்கள் மீதான பார்வையும், பொது சமூகத்தில் அடக்குமுறையும் இன்னும் மாறவில்லை. மாறாக அவை அறிவார்ந்த தளங்களில் கூட வேர் பிடித்து வளர்ந்திருக்கிறது. ஐஐடி போன்ற உயர் பல்கலைகழகங்கள் அப்பட்டமான தலித்,பழங்குடியின, இஸ்லாமிய வெறுப்பை வளர்த்து கொண்டே இருக்கிறது. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஒரு உயர் சாதி பெண் கொல்லப்படுகிறாள் எனில் அவருக்கு நீதிதை பெற்றுத்தர இங்கே அனைத்து அமைப்புகளுமே துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரிலேயே கூட தனிச் சட்டங்களை அரசுகள் இயற்றும். மறுபுறம் ரோஹித் வெமுலாவை, ஃபாத்திமா லத்தீஃபையோ, அனிதாவிற்காகவோ , நந்தினிக்காகவோ எந்த சட்டங்களும் இயற்றப்படாது , நீதியும் கிடைக்காது. இப்பயுமா அதுலாம் நடக்குது என்றோ.., ஆட்சி மாறியிருக்கு இனிமேல் அதெல்லாம் குறைந்துவிடும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் மெட்ராஸ் ஐஐடி பேராசிரியர் விபின் ஐஐடியில் தனக்கு தீண்டாமை பாகுபாடு காட்டப்படுவதாக ஒருவாரத்திற்கு முன்பு தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் சிற்பிகளாக இருந்த நேருவிற்கும், காந்திக்குமே சாதி குறித்தும் தலித்கள் குறித்தும் புனிதப்படுத்தப்பட்ட பார்வை இருந்திருக்கும் போது பார்ப்பனிய தத்துவத்திலும் மனுதர்மத்திலும் ஊரித் திழைத்த மோடிக்கு மட்டும் வேறொரு பார்வை இருக்க முடியுமா என்ன.?
துப்புரவுத் தொழிலாளர்களை பற்றி , கையால் மலம் அள்ளும் தொழிலாளர் படுகிற அவஸ்தைகளை பற்றி நாம் இன்னும் காத்திரமாக பேச வேண்டும். சாதி என்ன செய்திருக்கிறது மலம் அள்ளுவதற்கென்று ஒரு சமூகத்தை அடிமையாக்கி வைத்திருக்கிறது. White Cross மகான் ஒருவர் சமீபத்தில் "என் பீயை.. அள்ளித்தாண்டா நீ சம்பாதிக்கிற" என்று ஒரு துப்புரவுத் தொழிலாளரை நோக்கி ரவுடித்தனம் செய்த நிகழ்வை நாம் தமிழகத்திலேயே பார்த்திருக்கிறோம். சாதி தான் விஷம் அதனை ஒழிக்க வேண்டுமெனில் அம்பேத்கரிய பார்வை வேண்டும்.
இந்துத்துவா எனும் மலைப்பாம்பு நுழையாத புற்றுக்களே இல்லை எனுமளவிற்கு அவர்கள் அம்பேத்கரையும் திருடிக் கொள்ள பார்க்கிறார்கள். அம்பேத்கரை திருடுவதை விட்டும் நாம் சங்கப்பரிவார சக்திகளை விரட்டியடிக்க வேண்டும்.
Fake News Factory என்று சொல்லப்படும் பொய்களை உருவாக்குவதன்றே ஒரு குழுவை ஆர்எஸ்எஸ் அமைத்திருக்கிறது. அவர்கள்தான் இன்று எந்த ஹேஷ்டேக் ட்ரென்டிங்கில் இருக்க வேண்டுமெனவும், எந்த பொருள் விவாதமாக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கிறார்கள் அதனை மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார் கௌரி லங்கேஷ்.
ஓரளவிற்கு இந்துத்துவ அமைப்பினர் பரப்பும் பொய் செய்திகளை கண்டறிவதற்கும், பதிலடி கொடுப்பதற்கும் பாசிச சக்திகளை துணிவோடு எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் தொழில்நுட்பங்களின் உதவிகொண்டு முறியடித்து வருகின்றனர்.
கௌரி லங்கேஷ் நமக்கு விட்டுச் சென்றது , ஜனநாயகம் / சமத்துவம்/ மதச்சார்பின்மை மற்றும் சமநீதி கொண்ட கொள்கைகளைத்தான். அவற்றை உயிர்பிக்க அவர் தனது உயிரை அர்பணித்திருக்கிறார். அவர் உயிர் தியாகத்தால் இந்தியாவெனும் மதச்சார்பின்மையும், ஜனநாயகமும் தங்களை புதுப்பித்து.., பாசிசத்தை வேறொடு சாய்த்துவிடட்டும்.
புத்தகம் : கௌரி லங்கேஷின் "மதமும் அரசியலும்"
ஆசிரியர் : கௌரி லங்கேஷ்
தமிழில்: பா.அருண் காளிராஜ்
பக்கம் : 48
விலை : ₹50
பதிப்பகம் : நிமிர் வெளியீடு
:அஹ்மது யஹ்யா அய்யாஷ்