இப்புத்தகத்தின் பின் அட்டையில் அகரமுதலவனின் புகைப்படம் ஒன்று இணைக்கப்பட்டு இருக்கும் அதில் அவரின் முகம் புன்னகையால் பூத்து மலர்ந்திருக்கும் அதை காண்கையில் நம்முடைய மனமும் மலர வாய்ப்புண்டு, ஆனால் புத்தகத்தில் உள்ள பத்து கதைகளை வாசித்தால் நம் மனதில் மலர்ந்த மலர் பூக்கள் எல்லாம் வாடி இக்கதைகளில் உள்ள கதா மாந்தர்களுக்காக வருந்துவோம், கண்ணீரும் சிந்துவோம். இது நான் கூறும் எச்சரிக்கை அல்ல என்னுடைய அனுபவம். அந்த மனிதர்களின் வாழ்வு நமக்கு காண்பிக்க கூடிய பாடம் என்ன, கட்டாயம் இந்த சிறுகதை தொகுப்பை தேடி வாசிக்க வேண்டும்.
ஈழத்து மக்களின் வலிகளை எழுத்தாளர்களின் அகர முதலவனின் எழுத்து ஒரு தனி வகையறா, வாழ்வியல் ஒன்றுதான், துயரங்களாலும் தவிப்புகளாலும் மரணங்களாலும் துக்கங்களாலும் பசியிலாலும் வாழ்ந்த வாழ்வியலை தான் இவரும் கூறுகிறார், ஆனால் இவர் கூறும் எழுத்தின் பாணி புதிய பரிமாணத்தில் இருக்கிறது. வலிகளை உவமைப்படுத்தும் விதம் நெஞ்சை பிழிந்து எடுக்கிறது, பல கவித்துவமிக்க வாக்கியங்களில் உள்ள மையச்சரடு வலிகளால் தான் பின்னப்பட்டிருக்கிறது. ஒரு கதையை ஒரு முறை வாசிக்கும் போது உணர்கின்ற ஒரு உணர்வு மறுமுறை அக்கதையை வாசிக்கும் போது ஏற்கனவே இருந்த உணர்வின் மேல் ஒரு பெரும் பாரத்தை வைக்கிறது, இப்படி அந்த மக்களின் வாழ்விலே கண்டு மனம் வதைகிறது.
இதில் உள்ள கதைகள் என்னவெனில், வதை முகாமில் மனிதர்களால் வதைக்கப்படும் மனிதனின் மனதில் இருக்கும் மனைவியைப் பற்றிய தவிப்பு, அகதி முகாம்களில் வாழும் மக்களின் உணர்வற்ற வாழ்க்கை, நண்பனை நண்பனாக பார்க்க முடியாமல் வேவு பார்க்க வைக்கும் வாழ்வு, தள்ளாத வயதில் தன் பேத்தியை காப்பாற்ற துணியும் கிழவி, காதலின் பரிசோடு போர்க்களத்தில் போரிடும் மனிதனின் பிரிவும் தவிப்பும், தன்னுடைய உயிரின் துடிப்பை தானே தாங்க மறுக்கும் பாரம் இப்படி ஒவ்வொரு கதைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட காலமும் மனிதனும் வாசிக்கும் போது நம்மோடு வாழ்ந்து மறைவது போன்று உணர்வுகளை எழுகிறது. சில இடங்களில் வாசிக்கும் போது மொழி தடையாக இருக்கக்கூடும் ஆனால் ஆழ்ந்து வாசித்தால் அந்த எழுத்தின் ஆழமும் அதனின் பின்னால் இருக்கும் உணர்வும் விளங்கும். சமகால எழுத்தாளர்களின் அகரமுதல்வன் ஒரு சிறந்த எழுத்தாளராக இருக்கிறார் என்பது என்னால் உணர முடிந்தது.