தமிழவன் (தமிழவன் கார்லோஸ் சபரிமுத்து) (பிறப்பு:அக்டோபர் 17, 1945) பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர், இதழாளர், இலக்கியத் திறனாய்வாளர். முதுகலை இலக்கியம் படிப்பவர்களுக்கு 'திராவிட இலக்கியம்' கற்பித்து அந்த சிந்தனைப் பள்ளியை உருவாக்கியவராக அறியப்படுகிறார். இலக்கியத்திறனாய்வுகளுக்கான புதிய சிந்தனைக் கோட்பாடுகளை உருவாக்கினார்.
தமிழவன் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்தவர். ஆய்வாளர், கட்டுரையாளர், நவீன தமிழ் இலக்கிய விமர்சகர், இலக்கியக் கோட்பாட்டாளர், தமிழில் புதுக்கவிதை மற்றும் படைப்பிலக்கியங்களில் பங்காற்றியவர், நாவல்கள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய விமர்சனங்கள், திறனாய்வுகள் எழுதியுள்ளவர். ’ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ நாவல் மாய-யதார்த்தவாதத்தைப் பயன்படுத்தி எழுதியது. ’சரித்திரத்தி்ல் படிந்த நிழல்கள்’ நாவல் பாலிம்ப்செஸ்ட் (palimpsest) எனப்படும் வரலாற்றை அழித்தெழுதும் உத்தியை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கால தமிழ் வரலாற்றை அழித்தெழுதியது. ஜி.கே. எழுதிய மர்ம நாவல், மதங்கள், மடங்களின் வரலாற்றையும் தமிழீழப் போராட்டத்தையும் முன்வைத்து எழுதிய புதினம். ’வார்ஸாவில் ஒரு கடவுள்’ என்ற நாவல் போலந்து தலைநகர் வார்ஸாவைக் களமாகக் கொண்டு புலம்பெயர்ந்த இந்தியரின்/தமிழரின் கதைசொல்லுதலாக எழுதியது.
இலக்கு இலக்கிய இயக்கம் ’இலக்கு’ என்ற இலக்கிய இயக்கத்தை நடத்தியவர். எண்பதுகளில் கலை இலக்கியம், எதார்த்தவாதமும் தமிழ் நாவல்களும், புதுக்கவிதையும் புதுப்பிரக்ஞையும் போன்ற பல கருத்தரங்குகளை நடத்தி இலக்கிய இயக்கங்களின் போக்கு பற்றிய ஆய்வையும் மதிப்பிடலையும் செய்தது அவ்வியக்கம்.
ஆய்வு நூல்கள் ’புதுக்கவிதை நான்கு கட்டுரைகள்’ இவரின் முதல் நூல். தமிழ் புதுக்கவிதை இயக்கம் பற்றிய கோட்பாடுகளை முன்வைத்து எழுதினார். ’ஸ்ட்ரக்சுரலிசம்’ எண்பதுகளில் வெளிவந்தது. தமிழில் புதிய சிந்தனைகளான அமைப்பியல்வாதம், பின்-அமைப்பியல் மற்றும் பின்-நவீனத்துவம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. அமைப்பியல்வாதம் என்கிற பிரெஞ்சுப் புதிய சிந்தனை முறையை தமிழ்ச்சூழலில் நின்று விரிவாக அறிமுகப்படுத்திய நூல். இப்போது மீண்டும் ’அமைப்பியலும் அதன் பிறகும்’ என மறுவெளியீடாக வந்திருக்கிறது. ’படைப்பும் படைப்பாளியும்’ நூல் படைப்பு மற்றும் ஆசிரியனுக்கு இடையில் உள்ள உறவை பேசுகிறது. இந்நூல் பின்-நவீனத்தவ சிந்தனைகளை அறிமுகப்படுத்தியது. 'தமிழும் குறியியலும்’ நூல் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடாக வந்த நூல். தமிழில் குறியியலையும் அதன் பயன்பாடுகளையும் ஆராய்ந்தது. ’தமிழில் மொழிதல் கோட்பாடு’ நூல் ரஷ்ய மொழியியல் அறிஞர் பக்தின் முன்வைத்த மொழிதல் கோட்பாட்டை தமிழ் இலக்கியங்களுடன் இணைத்து அறிமுகப்படுத்தியது. இக்கட்டுரைகள் 'நவீனத்தமிழ் விமர்சனங்கள்’; 'இருபதாம் நூற்றாண்டில் கவிதை’ என்ற இரு நூல்களாக தொகுக்கப்பட்டு வெளியானது. ’தமிழுணர்வின் வரைபடம்’ என்ற நூல் உயிரோசை இணைய இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ’திராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல்’ ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு என்ற புது நூலும் அடையாளம் பதிப்பக வெளியீடாக வெளியானது. இந்நூல், தீராநதி இதழில் வெளிவரும் வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் என்ற தொடரில் எழுதிய கட்டுரைகளின் முதல் தொகுதி.
இதழியல் எண்பதுகளில் வெளிவந்த ’படிகள்’ சிற்றிதழின் ஆசிரியர் குழுவில் தமிழவன் இருந்தார். ’இங்கே இன்று’ நடுவகை இதழின் ஆசிரியராக இருந்தார். ’மேலும்’ பாளையங்கோட்டையிலிருந்து வெளிவந்த ஆய்விதழின் ஆலோசகப் பொறுப்பு வகித்தார். ’வித்யாசம்’ நவீன கோட்பாட்டுச் சிற்றிதழை நாகார்ஜுனன், எஸ். சண்முகம், தி. கண்ணன், நஞ்சுண்டனுடன் இணைந்து நடத்தினார்.
விருதுகள் 1999-2001 வரை நடுவண் சாகித்திய அகாடமியின் மொழிபெயர்ப்பு மையமான ஷப்தனாவின் இயக்குநராக இருந்தார்.