இன்றய மோடி அரசுக்கு முந்தைய எந்த அரசும் பகுத்தறிவையும் நியாயங்களையும் இந்த அரசைப்போல கைவிட்டதில்லை. அடல்பிகாரி வாஜ்பேயிகூட ‘உறுப்புமாற்று மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை நாம் அறிந்திருந்தோம் என விநாயகர் காட்டுகிறார்’ என்றோ, ‘பறக்கும்தட்டு பிரச்சனைபற்றி அறிவியல் மாநாட்டில் அறிமுகப்படுத்துவார்’ என்றோ என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. பகுத்தறிவு மற்றும் நியாயங்களின் மீதான தாக்குதல் பாசிசம் செய்வதாகும். பாசிசத்தின் வரலாறு முழுவதிலும் தேசத்தை புகழ்வது என்ற பெயரால் பிளவுபடுத்துதல் மற்றும் நியாயங்கள் மீது தாக்குதல் என்ற இரண்டு பெரியசெயல்கள் நடந்து வந்ததை நாம் பார்த்திருக்கிறோம்.
தற்போது நாட்டின் ஆட்சியாளரான பிஜேபி மதவாதத்தை முன்னிறுத்தவும் இந்துத்துவா கொள்கையை மக்கள் மனதில் பதியவும் வாயில் வந்ததை எல்லாம் தரவுகள் இல்லாமல் அடிச்சுவிட்டு ஆய்வாளர்களிடம் கண்டனங்களை வாங்கிய பத்திரிக்கைகளின் நேர்காணல்களும் கட்டுரைகளும் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கிறது.
பிஜேபியின் பிரச்சாரங்களைப் பார்க்கும் போது முட்டாளாகப் பேசுகிறார்கள் என்று நொடியில் புரிந்ததை ஆழ்ந்து சிந்தித்தால் மக்களைக் கோமாளியாக்கவே அவர்களின் பேச்சின் போக்கு இருப்பது புரிகிறது.
புராண சம்பவங்களாக இருப்பதை வரலாறாகச் சித்தரித்து இந்துத்துவாவை நிலைநாட்ட ஆர்எஸ்எஸ் முயல்வதும் ஆட்சி பீடத்தில் அமர துணைபுரிந்தவர்களுக்குப் பிஜேபி காட்டிய பொருளாதாரச் சலுகைகளின் விளக்கங்களும் இதில் உள்ளது.