முருகேசபாண்டியன் தனது சொந்த அனுபவங்களின் வழியே சமயநல்லூர் என்ற மதுரையை அடுத்த சிறிய ஊரில் சமூக, கலாசாரச் சூழல்களையும் அதை உருவாக்கிய காரணங்களையும் இன்றைய மாற்றத்தையும் அடையாளம் காட்டுகிறார்.
ந.முருகேசபாண்டியன் (பிறப்பு: டிசம்பர் 26, 1957) நாடக எழுத்தாளர், புனைவெழுத்தாளர், கவிஞர், விமர்சகர். தமிழ் இலக்கியத் திறனாய்வை நவீனகோட்பாடுகளின் அடிப்படையில் அணுகியவர். உயிர்மை இதழில் எழுதிய என் இலக்கிய நண்பர்கள் பரவலாகக் கவனம் பெற்ற படைப்பு. இவருடைய முதல் நூலான பிரதிகளின் ஊடே பயணம் சுடர் ஆய்வுப் பரிசு பெற்றது. சொற்கள் ஒளிரும் உலகம் 2007 -ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரை நூலாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் என்ற நூலில் சங்க இலக்கிய பெண் கவிஞர்களிலிருந்து ஆண்டாள் வரை உள்ள பெண் கவிஞர்களின் பாடல்களையும் தொகுத்து உரையெழுதினார். 1970-களின் பிற்பகுதியில் அவரது புதுக்கவிதைகள் தேடல் இதழில் பிரசுரமாயின. சிறுகதைகள் எழுதத் துவங்கினார். இலக்கியம் பற்றிய புரிதல் இடதுசாரிக் கருத்தின் தாக்கத்தினால் சிக்கலுக்குள்ளான அதேவேளையில், உலக இலக்கியங்களின் ஆழ்ந்த வாசிப்பில் ஈடுபட்டார். டால்ஸ்டாயின் 'அன்னா கரீனினா' வைத் தாண்டியோ, செகாவின் சிறுகதைகளைத் தாண்டியோ தான் புனைவில் சொல்வதற்கு எதுவுமில்லை எனக் கண்டறிந்தார்.
ராஜமார்த்தாண்டனின் தூண்டுதலால் அவர் எழுதிய பத்துக்கும் மேற்பட்ட நூல்களின் மதிப்புரைகள் தினமணியில் வெளியாகின. கண்ணனின் வேண்டுகோள் காரணமாக 'காலச்சுவடு' இதழில் நூல் மதிப்புரைகள் எழுதினார். இடதுசாரி அமைப்பிலிருந்து கற்ற எதையும் விருப்பு வெறுப்பின்றி கறாராக அணுகும் முறை இலக்கிய விமர்சனத்திலும் பயன்பட்டது. அவரது படைப்புலகம் இலக்கிய விமர்சனம், மொழி பெயர்ப்பியல், கிராமத்து வாழ்க்கை, சங்க இலக்கியம் என பல துறைகள் சார்ந்தது.
ந. முருகேசபாண்டியன் எழுதிய ராஜபார்ட் நாடகம் 1995- ஆம் ஆண்டு புதுதில்லி சங்கீத நாடக அகாதெமியினால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசு பெற்றது. இவருடைய முதல் நூலான பிரதிகளின் ஊடே பயணம் 2003-ஆம் ஆண்டின் சிறந்த ஆய்வு நூலாகச் சுடர் ஆய்வுப் பரிசு பெற்றது. மேலும் இவரது திறனாய்வுக் கட்டுரைகள் அடங்கிய சொற்கள் ஒளிரும் உலகம் 2007-ஆம் ஆண்டின் சிறந்த விமர்சன நூலாகத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டது. கிராமத்துத் தெருக்களின் வழியே, ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம் ஆகிய மானுடவியல் ஆய்வுப் புத்தகங்கள், குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல், மொழிபெயர்ப்பியல் ஆகியவை இவரது ஆக்கங்களில் குறிப்பிடத்தகுந்தவை. இருவேறு உலகம் இவரது சிறுகதைத் தொகுதி. சங்கப்பாடல்கள் குறித்தும் பல நூல்கள் எழுதியுள்ளார். 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருந்தாலும் தமிழில் நாவல்கள் குறித்து மிக விரிவான பார்வை உடைய ந.முருகேச பாண்டியன், பலநூறு விமர்சனக்கட்டுரைகளை எழுதியுள்ளதால் விமர்சகராக அறியப்படுகிறார்.
ஒரு கிராமத்து வரலாறு நூலில் தனது ஊரான சமயநல்லூரை அதன் அழகுகளோடும் பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்த நிகழ்வுகளோடும், ஒரு காலகட்டத்தின் அழுத்தமான பதிவாக வெளிப்படுத்தினார். கடந்தகாலப் பதிவுகளைக்கொண்ட பண்பாட்டு வரலாறு என்றே இந்நூலைச் சொல்லலாம். சுமார் 400 பக்கங்களில், அன்றைய (1960-80) தமிழ்க் கிராம வாழ்க்கையை சரளமாக மொழியில் பதிவு செய்தார்.
"நான் எனது பள்ளிப் பருவத்திலிருந்து ஒடுக்கப்பட்டவர்களுக்குச் சார்பான மனநிலையுடனே வாழ்ந்து வருகிறேன். சக மனிதர்கள்மீதான அன்பு எனக்கு எப்பவும் பிடித்தமானது. அது எனது பதின்பருவத்தில் இயற்கை மீதும் சக உயிரினங்கள் மீதும் என்றும் பரவியது. பால், இன, மொழி, சாதி, மத அடிப் படையில் நசுக்கப்படும் நிலைக்கு எதிரான எனது அரசியல் பார்வை, என் இலக்கிய அணுகுமுறையைத் தீர்மானிக்கிறது. அதே நேரத்தில் கோட்பாடு கொள்கையைவிடப் படைப்பாளியும் படைப்பும் எனக்கு மிகவும் முக்கியம்"
ஒரு தேர்ந்த படைப்பின் வழியாகப் படைப்பாளன் மனித இருப்புக் குறித்து கண்டறிந்த உண்மைகளையே முக்கியமானவை என்று ந. முருகேசபாண்டியன் கருதுகிறார். வாசகனின் வாசக மனநிலையைச் சீர்குலைத்து, அவனுக்குள் இடை விடாத கேள்விகளை எழுப்புவதே ஒரு சிறந்த இலக்கியப் படைப்பின் பணியாகக் கருதும் ந. முருகேசபாண்டியன் முற்போக்கு, பிற்போக்கு, உன்னதம் போன்ற அம்சங்களை முக்கியமாகக் கருதுவதில்லை.
கிராமத்து தெருக்களின் வழியே - ந. முருகேசபாண்டியன் ⠀⠀ கிராமத்து தெருக்களின் வழியே கால்களை பதித்திடாத நகரத்தில் வளர்ந்த வளரும் பிள்ளைகள் இந்த புத்தகத்தின் மூலம் தம் கால்களை பதித்திட இயலும்.⠀ ⠀ எண் பார்வையில் கிராமத்து தெருக்களின் வழியே ⠀ஓரு முக்கியமான புத்தகம். நாட்கள் செல்ல செல்ல புத்தகத்தின் மதிப்பு கூடி கொண்ட போகும். ⠀⠀ 60 70 காலகட்டத்தில் இருந்த தமிழக கிராமம் பற்றியும் கிராம மக்களின் வாழ்வியல் பற்றியும் தற்போது அடைந்த்துள்ள நவீன மாற்றங்கள் பற்றியும் இனிக்க தன் வாழ்வில் தமிழர் பண்பாட்டை பொருத்தி கட்டுரைகளாக பதிவு செய்துள்ளார். ⠀⠀ இக்கட்டுரைகள் தமிழர்களின் உழைப்பு உணர்ச்சி மகிழ்ச்சி துன்பம் பொழுதுபோக்கு விளையாட்டு மருத்துவம் உணவு கல்வி இயற்கை இறப்பு கடவுள் இசை சடங்கு கல்வி உறவு என்று பல விடயங்களை அறிந்து கொள்ள வழி செய்கிறது.
கிராமத்துத் தெருக்களின் வழியே எனும் கட்டுரைத் தொகுப்பானது கிராமத்து வாழ்க்கை அறுபதுகளில் எப்படி இருந்திருக்கிறது என்பதை விரிவாய்ப் பதிவு செய்யும் ஒரு ஆவணம் என்று சொல்லலாம். கிராமங்களில் சொல்லப்படும் பேய்கள் முனிகள் கிராமத்துச் சிறுவர்களின் விளையாட்டுகள் கிராமத்துப் பூச்சிகள் அம்மக்களின் உணவுமுறை பயணமுறை பொழுதுபோக்கு காதல், சாதிய அடக்குமுறை, பெண்கள் மீதான கட்டுப்பாடுகள், யார் கேட்டு வந்தாலும் உணவளிக்கும் அம்மக்களின் மாண்பு, பிறவுயிரகளுடன் கூடிய வாழ்வு, மருத்துவம், அரசியல், உதவி கேட்டு வருவோர், நாடகங்கள் திரைப்படங்களின் பங்கு, பல்வித உதவி கேட்டுவருவோர், அவர்களின் நம்பிக்கை, கிராம்த்து அளவை முறைகள் எனப் பல்விதமான் தளங்களை நம் கண்முன் காட்டும்படியான் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு.