கோபத்தில் எடுத்த முடிவுகள் எப்பொழுதும் தவறான புரிதலின் பக்கமே சாய்ந்துவிடுகின்றது. மனிதர்களின் மீதான நம்பிக்கையை இழக்கும் போது தான் பிரிவுகளுக்கான சாத்தியக்கூறுகள் புலப்படத் துவங்குகின்றன.
பக்குவம் அடையாதவர்களிடம் பழகும் பழக்கமே பலநேர வலிகளுக்குக் காரணமாகிறது.
போதையில் இருந்த அரவிந்த் இரயிலில் தன்னுடன் பயணம் செய்த உடல்நலம் குன்றிய வாஸந்தியுடன் கூடியபிறகே அவளின் பலவீனத்தைத் தான் தவறாக பயன்படுத்திக் கொண்டதை உணர்ந்தவன் தாயின் சம்மதத்துடன் அவளை மணந்துக் கொண்டாலும் அவளுக்கு அதில் விருப்பமில்லை என்று தெரிந்த பிறகு தன்னை ஏற்கும் வரை காத்திருக்க வேண்டும் என்பதுடன் சேர்ந்து ஏன் தன்னை வெறுக்கிறாள் என்ற கேள்விக்கான விடையையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.
கல்லூரி காலத்தில் காதலித்துப் பதிவு திருமணம் செய்து கொண்டபிறகு பிரச்சனையே இல்லாததைத் பிரச்சனையாகக் கருதி அரவிந்தை விட்டு விலகி சென்ற வாஸந்தி ஐந்துவருடங்களுக்குப் பிறகு அவனை இரயிலில் சந்தித்த வேளையில் நிகழ்ந்த அசம்பாவிதம் அவன் மீது மீண்டும் தவறான அபிப்ராயத்தைத் தோற்றுவிக்கத் திருமணத்துக்குப் பிறகும் மறுபடியும் அவனைவிட்டு விலகி சென்று விடுகிறாள்.
கணவனை பிரிந்தவள் தன் இரண்டு வயது மகனுடன் சேர்ந்து மறுபடியும் அவன் வீட்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில் தன் பிடிவாதத்தால் கடந்த காலத்தில் செய்த தவறுகளால் இழந்த இனிமையை மீட்டெடுக்க முயலும் போது அரவிந்தனின் பிடிவாதம் அவளைக் காயப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.தன் காதல்மனைவி தவறுகளை உணர்ந்துவிட்டாள் இனி எதிர்காலத்தில் பிரிவு நேராது என்று உறுதிபடுத்தியவன் அவளின் காதலனாகப் பரிமளிக்கத் துவங்குகிறான்.
கள்ளம் கபடமில்லா குழந்தைத்தனம் என்றுணர்ந்து விரும்பத் தொடங்கியவளின் முடிவுகளும் குழந்தைத்தனமாக இருப்பதைப் பொறுத்துப் போவதை தவிர அவளைக் குற்றம்சாட்டும் உரிமை அவனுக்கில்லாமல் போகிறது.