ஊரில் நம் எல்லோர் வீட்டிலுமே கொல்லைப்புறம் இருக்கிறது. அம்மிக்கல்லு, நாய்க்குட்டி, ஈரச்சாக்கு, விறகுக்கட்டை என்று நாம் மட்டுமே அறிந்த கொல்லைப்புறம். நம் நினைவுகளும் அப்படியே. ஐஞ்சாம் வகுப்பு ராதிகா, பங்கர், நல்லூர்க்கந்தன், ஒழுங்கைக் கிரிக்கட், பிரேமதாசா போட்ட பீக்குண்டு என அத்தனையும் நம் பிரத்தியேகக் கொல்லைப்புறத்துக் காதலிகளே. சில காதலிகளை நினைக்கையில் ஏக்கம் வரும். சில பெயர்கள் புன்னகையை வரவழைக்கும். ஊருக்குத் திரும்புகையில் மனம் அவர்களையே தேடி ஓடும். பேசினவற்றை மீட்டிப்பார்க்கும். பேச மறந்தவற்றைப் பேசி முடிக்கும். சிலதுக்குச் செவிட்டைப்பொத்தி அறையவேணும்போலவும் தோன்றும்.
#339 Book 10 of 2025- என் கொல்லைப்புறத்துக் காதலிகள் Author- ஜேகே
முன்னுரையிலிருந்தே இந்த புத்தகம் என் முழு கவனத்தையும் ஈர்த்தது. தலைப்பைப் பார்த்தவுடன் இதுவொரு காதல் கதைகளின் தொகுப்பாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால், இது வாழ்க்கையின் பக்கங்கள். சுஜாதாவின் “ஶ்ரீரங்கத்து தேவதைகள்” புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு, இந்த புத்தகத்தை எழுதியதாக ஜேகே குறிப்பிட்டுள்ளார்.அதை போலவே இந்த புத்தகமும் என் மனதில் ஆழமாக இடம் பிடித்துவிட்டது.
இது ஒருவரின் நினைவுகளின் பயணம். தனது வாழ்வில் எழுத்தாளர் சந்தித்த மனிதர்கள், அனுபவங்கள், பார்வைகள் அனைத்தையும் நேர்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் வாழ்வின் அழகையும் சவால்களையும் படிப்பவருக்கு நேரடியாக உணர்த்துகிறார்.
புத்தகத்தில் பல அத்தியாயங்கள் என் மனதை ஆழமாகத் தொட்டன. குறிப்பாக, இளையராஜா பற்றி எழுதியிருக்கும் பகுதி அவரது இசையைப் பற்றி எனக்கு ஒரு புதிய பார்வையைத் தந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மணிரத்னம் ஆகியோரின் கலை உலகை பற்றிய அத்தியாயங்கள் மூலம் நாம் நிறைய தெரிந்துக் கொள்ளலாம். மகாபாரதம் குறித்த கருத்துகள் மிக ஆழமானவை. அதேபோல, அவருக்குப் பிடித்த ஆசிரியர்கள் பற்றிய பகுதி,மாணவருக்கும் ஆசிரியருக்கும் உள்ள உறவை மிக உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.ஏ.ஆர். ரஹ்மான் குறித்த வர்ணனைகள் இசையின் மகத்துவத்தை உணர்த்தின.
புத்தகத்தில் யாழ்பாணம் பற்றி எழுதியிருக்கும் பகுதிகள் எனக்கு மிகவும் பிடித்தது.அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் பற்றிய வர்ணனைகள் என்னை அந்த இடத்திற்கு நேரடியாகக் கொண்டு சென்றது. அந்த மக்களின் வரலாறும் வாழ்க்கைப் போராட்டங்களும் என்னை ஆழமாகக் கவர்ந்தன.
ஜே.கே-வின் எழுத்து மிகவும் எளிமையானதுதான். ஆனால், அந்த எளிமையான வார்த்தைகளில் உள்ள ஆழமான உணர்வுகள் நெஞ்சில் நிற்கும்.ஒவ்வொரு அத்தியாயமும் என்னைப் பெரிதும் பாதித்தது. இந்த புத்தகம் என் நினைவுகளில் நீண்டநாள் நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஒவ்வொரு கதையிலும் வாழ்வின் ஒரு அங்கத்தை அழகாக உணர்த்துகிறார்.
வாழ்க்கையைப் பற்றிய நினைவுகள், அனுபவங்கள், இசை, சினிமா, கலாச்சாரம் என பல்வேறு கோணங்களில் எழுத்தாளர் ஜே.கே. உணர்வுபூர்வமாக பதிவு செய்த இந்தப் பயணம் கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.
என் கொல்லைப்புறத்துக் காதலிகள் ❤️ • யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிடையில் நடக்கும் பெருந்துடுப்பாட்ட போட்டிகள். பள்ளி தாண்டியும் கல்வி வளர்க்கும் கொட்டில்கள், கொட்டில்களில் நடக்கும் லூட்டிகள். கொட்டில் வகுப்பை கட் அடித்து படம் பார்க்க செல்லும் சினிமா கொட்டகைகள். சினிமாவில் கலக்கிய சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த், மணிரத்னம். இசைத்தூதர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான். கனவுகளில் கதை படைக்கும் சுஜாதா. கம்பரின் கம்பராமாயணத்தில் களம் அமைத்து தமிழ் வளர்த்த கம்பவாரிதி. என நீண்டு செல்லும் யாழ் வாழ்க்கையும் ஜே.கே இன் அனுபவப்பகிர்வும் அன்றைய நாட்களில் ஈழத்தமிழர்கள் எல்லோர் மத்தியிலும் இருந்த கட்டாய கதாப்பாத்திரம் ஒன்றின் கதையுடன் நிறைவுபெறுகிறது. • ஜே.கே இன் எழுத்து இயல்பானது. நகைச்சுவை ததும்பும் எழுத்து. இந்தப்புத்தகத்தை யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலேயே எழுதியது சிறப்பானதும் தேவையானதும் கூட. யாழ்ப்பாணத்தையும், அதன் வாழ்வியலின் அழகிய தருணங்களையும், அருகில் இருந்து உணர நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் ‘என் கொல்லைப்புறத்துக் காதலிகள்’.
நீண்ட நாட்களாக படலை மற்றும் ஜே.கே வை Follow பண்ணிவருவதால் அடிக்கடி கண்ணில் படும் இந்த புத்தகம் அவரின் மற்ற எல்லா புத்தகங்களும் வாசித்த பிறகு தான் வாசிக்க கிடைத்தது. 90களின் வாழ்வியல் மற்றும் தன் வாழ்வில் தாக்கமேற்படுத்தியவரகளை பற்றி எழுதியிருந்தாலும் எங்கள் வாழ்விலும் அதனை பொருத்திப்பார்க்க கூடியதாக இருக்கின்றது. கலைஞர்கள் பற்றிய எழுத்துக்கள் தான் சுவாரஸ்யமமில்லாமல் இருந்தது.