தவறு செய்தவர்களுக்குக் கொடுக்கும் தண்டனையே அவர்களை நேர்வழிபடுத்தும் என்றாலும் தண்டனை கொடுக்கும் முற்படும் வேளையில் தவறை ஆராய்வது முதன்மையாகிறது,அதுவும் தாய் தன் மகனுக்குத் தண்டனை தரும் வேளையில் அவனின் குற்ற பின்னணியை ஆராயாமல் எடுக்கும் முடிவு குழந்தையைப் பெரிதும் மனதளவில் பாதிப்பது மட்டுமில்லாமல் குடும்பத்தை விட்டே அக்குழந்தையை விலக வைத்துவிடும்.
கண்மூடித்தனமான அன்பு எக்காலத்திலும் குழந்தைகளைப் பக்குவமாக வளர துணைபுரிவதில்லை அதுவே ஓர் எதிர்கால வளர்ச்சியின் தடையாக உருமாறிவிடும்.
சிறுவயதில் தான் செய்த தவறுகளுக்கு எல்லாம் தம்பி விக்ரமை காரணகர்த்தாவாக்கி விடும் செல்வத்தால் தனிபிம்பமே அவர்களின் தாய் மனதில் உருவாக்கிவிடுகிறது.
அண்ணன் சொன்னதை மட்டும் கேட்டு தாய் ஒருதலைபட்சமாக முடிவெடுத்துத் தண்டனை தொடர்ந்து தருவதால் வீம்புடன் வளர்ந்த விக்ரம் பெரியவனாகிய பிறகு ஒதுக்கத்துடனே அக்குடும்பத்தில் இருக்கிறான்.
செய்யாத ஒன்றை மகன் செய்தான் என்று முடிவெடுத்த சிவகாமியால் தங்களை விடப் பொருளாதாரத்தில் குறைந்த கயல்விழியை விக்ரம் மணந்து கொள்ள வேண்டிய சூழலை அமைத்துவிடச் சம்மந்தப்பட்ட இருவரும் விரும்பியே திருமணப் பந்தத்தில் நுழைகின்றனர்.
தன் வெகுளிதனத்தால் விக்ரமை தன் வசப்படுத்திக் கொண்டவள் மனதில் அவனின் கடந்தகாலம் ஒரு கரும்புள்ளியாகவே சுழண்டு வர அதையும் காலம் அவளுக்குச் சாதகமாகவே முடித்துவைத்ததால் இன்பத்தை மட்டுமே தன் திருமண வாழ்வில் எதிர்கொள்கிறாள் கயல்விழி.
தன் தந்தையின் மூலம் தாய் முன்பு செய்த தவறை எல்லாம் உணர்ந்து கொண்டு தன்னை முழுமையாகப் புரிந்து கொண்டார் என்று கேட்டு மகிழும் விக்ரமுக்கு அவன் எதிர்பார்த்த அன்பின் சாரல் அவனின் மீது விழ ஆரம்பிக்கிறது.
செல்வத்தின் திருமண வாழ்வை அவனின் மனைவி நசுக்கியதால் அவனுக்கென மற்றொரு வாழ்வை அமைத்துக் கொண்டு இருபக்கமும் போராட்ட வாழ்வை எதிர்கொள்ளத் தயாராகிறான்.
வெகுளியாகவே கதை முழுவதும் வரும் கயல்விழி கடைசி வரை தன்னை அதிலிருந்து மாற்றிக் கொள்ளாமல் கிடைத்ததை வைத்து அதிலிருக்கும் இன்பதை கடைசிவரை பருகும் கலையை அறிந்தவளாகிறாள்.