வென்வேல் சென்னி 2 - தென்னாட்டு வேங்கை ❤️ • தென்னாட்டின் வேங்கை வென்வேல் சென்னியின் வெறியாட்டம் தான் இப்பாகம். தொடக்கம் முதல் இறுதி வரை யுத்தமும் ரத்தமும்தான்.! • கலிங்கப்போருடன் ஆரம்பமாகிறது இப்பாகம். இருதரப்பும் தங்களுக்கான போர் வியூகங்களுடன் பலமாக மோதிக்கொள்கின்றன. விறுவிறுப்பாக நடக்கும் போரின் இறுதியில் கலிங்க மன்னனின் இழப்பை தொடர்ந்து கலிங்கம் மோரியர் வசமாகிறது. • கலிங்க மன்னன் மரணத்தை தழுவும் வேளையில் சொல்கிறான் “உனது படையில் ஆண்மகன்கள் என எவனாவது இருந்தால் தெற்கே கரும்பெண்ணை நதியை கடந்து படையை செலுத்தச்சொல் பார்ப்போம். திராணி இருந்தால் சென்னியை தோற்கடிக்கட்டும்.” என்று அதே போல இரும்பிடர்தலையனும் ஒரு சமயத்தில் நேரடியாக எச்சரிக்கை விடுக்கிறான் “கரும்பெண்ணை நதியை தாண்டி வரும் வீரன் எவனும் அவனுடைய காதலியை தழுவ உயிருடன் திரும்பமாட்டீர்கள்” என்று. ஆனால் தம்பெரும்படை பலத்தின் மீது கொண்ட நம்பிக்கையில் மோரியப்படை போரிற்கு ஆயத்தமாகிறது. • சென்னியை கொல்லும் நோக்கில் ஏவப்பட்ட தசவர்க்கிகளை சென்னி தனி ஒருவனாக நின்று களமாடும் காட்சி மயிர்க்கூச்செறியச் செய்கிறது. எச்சரிக்கையை மீறி நதியை கடந்து அதிரடித்தாக்குதல் நடத்த வந்த மோரிய இளவரசன் ஒருவனின் படை ஒருவர் கூட மிச்சமில்லாமல் பலியிடப்படுகிறார்கள். இதுவரை நதியை தாண்டியிராத தமிழர் படை முதன்முறையாக சென்னியின் தலமையில் மோரியர் படை பாசறை மீது அதிரடித்தாக்குதல் நடத்துகிறார்கள் அதிலும் மோரியர் படைக்கு பெரும் தோல்வி, இன்னுமொரு இளவரசனும் பலியிடப்படுகிறான் தீராக் குருதித்தாகம் கொண்ட கொற்றவைக்கு. • இரண்டு அதிமதியூகிகளான இந்திரசேனைக்கும் சென்னிக்கும் இடையிலான யுத்தத்தில், இந்திரசேனையின் திட்டங்கள் அனைத்தும் சென்னியால் முறியடிக்கப்படுகிறது. இறுதியாக இரண்டு படைகளும் நதியில் நேருக்கு நேர் மோதிக்கொல்கின்றன. முதற்கட்ட போரின் முடிவில் சென்னியின் கையே ஓங்கி நிற்கிறது. ஆனால் இன்னொருபுறம் பாழி கோட்டை மோரியர் வசமான செய்தி கிடைக்கிறது. இருபக்கமும் வெற்றியும் தோல்வியும் என்ற நிலையில் இரண்டாம் பாகம் முற்றுகிறது. • இப்பாகம் முழுவதுமே சமர்தான். இடையிடையே காதலும் காமமும் இணைந்து கொள்கிறது. யுத்தங்கள் போர்களக் காட்சிப்படுத்தல்கள் அதிசிறப்பு. பங்கங்கள் ரத்தம் சொட்ட சொட்ட விறுவிறுப்பாக நகர்கிறது. இனி இறுதிக்கட்ட போர்தான்.. ஆயத்தமாகுங்கள்..!