பிரமிள் (ஏப்ரல் 20, 1939 - ஜனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் பிறந்தவர். தமிழகத்து எழுத்தாளர். பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு தோன்றிய ஒரு இலக்கிய மேதை. தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர்.புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் பானுசந்திரன், அரூப் சீவராம், பிரமிள் போன்ற பல புனைபெயர்களில் எழுதினார். அடிக்கடி தம் பெயரை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தவர். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் படைப்புகள் கவிதைத் தொகுதிகள்
கண்ணாடியுள்ளிருந்து கைப்பிடியளவு கடல் மேல்நோக்கிய பயணம் பிரமிள் கவிதைகள் சிறுகதை தொகுப்பு லங்காபுரி ராஜா பிரமிள் படைப்புகள் சிறுகதைகள் சில
பொதுவாக கவிதை என்பது எப்போதும் ஓர் மாயத் துள்ளலை உள்ளத்திற்கு அள்ளிக் கொடுக்கும். கவிதைகள் பல முறை உண்மைகளை அள்ளித் தெளிக்கும். பல முறை உவமைகளோடு பயணிக்கும். நான் தேர்ந்த கவிதை வாசகனா என்றால், என்னால் இல்லை என்பதைத் தான் சொல்ல முடிந்தது. கவிதைகளில், கவிஞர்களைப் பொறுத்து பல அடுக்குகள் இருக்கும். அதைத் தேர்ந்த வாசகர்களால் எப்போதும் சட்டென்று இனங்கண்டு கொள்ள முடியும். அதன் காரணமாகவே சில நாட்களாக புத்தக வரிசையில் இருந்த பிரமிள் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பை வாசிக்காமல் வைத்திருந்தேன்.
சரி படித்துப் பாப்போம் என்று வாசிக்கத் தொடங்கினேன். கவிதைக்கான இலக்கணமோ, அதில் இருக்கும் படிமங்களோ அதிகம் தெரியாத படியால், அவரின் கவிதைகளைப் புரிந்து கொள்ளத் திணறினேன் என்பது உண்மை. ஆனால் பக்கங்கள் செல்ல செல்ல அவரின் கவிதை வடிவங்கள் புரிய ஆரம்பித்தன. சில வார்த்தைக்கான அர்த்தங்களைத் தேடி அறிந்து கொண்டேன். தருமு சிவராம் என்ற இயற்பெயர் கொண்ட பிரமிள் அவர்களின் கவிதைகளைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருப்பினும், ஆன்மிகம், அறிவியில், சுயசாடல் என்பன போன்ற அடுக்குகளில் அவரது கவிதைகள் என்னில் வளரத்தொடங்கின.
சிலக்கவிதைகளை மீண்டும் மீண்டும் வாசித்தேன். சிலக்கவிதைகள் சட்டென படித்தவுடன் விளங்கின. சிலக்கவிதைகளை வாசித்தவுடன் "எட என்னமா யோசிச்சிருக்கார்" எனத் தோன்றியது. சிலக்கவிதைகள் பல வாசிப்புகளுக்கு பின்னும் எனக்கு சிரமமாய் இருந்தது. ஆனால் இவரது கவிதையின் மொழி அழகானது. ஒரே மூச்சில் படித்து முடிக்கக்கூடிய வரிகள் அவற்றில் உண்டு. கவிதைகள் எல்லாம் அழகுதான். "உன் பாதம் பட்ட இடத்தில நான் சாதம் போட்டு சாப்பிடுவேன்" என்பன போன்றவற்றை மட்டும் சொல்லவில்லை! ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதத்தில் ஈர்த்து படிப்பவரின் மனதில் ஆழமாய் அழகாய் நிற்க வேண்டும் என்று நினைக்கிறேன். இன்னும் பல ஜாம்பவான்களின் உலகம் இது.
இன்னொன்றையும் முக்கியமாக சொல்ல வேண்டும். இந்த கவிதைகளைத் தொகுத்த சுகுமாரன் அவர்களுக்கும் யுவன் சந்திரசேகர் அவர்களுக்கும் நடைபெற்ற உரையாடல் இந்த புத்தகத்தின் கடைசியில் இடம் பெற்றிருக்கிறது. அது படித்ததில், பிரமிளின் கவிதைகளின் பல இடங்களை புரிந்து கொள்ள இயன்றது. ஓ, இதைத்தான் சொல்ல வந்திருக்கிறாரா? என்ற தருணங்களிலும் சரி, அட என் புரிதல் சரிதான் என்பதான தருணங்களும் சரி, இரண்டு தொட்டுக்கொள்ளாத நேர்கோடுகளாய் பயணப்பட்டதுதான் வியப்பாக இருந்தது. நிறைய வாசிக்க வேண்டும்! அதற்கான தொடக்க புள்ளியெனவே இதை நான் பார்க்கிறேன்.
என்னை மிகவும் ஈர்த்த அல்லது பாதித்த அல்லது புரிந்த கவிதைகளை பகிர்ந்து கொள்கிறேன்.
வானத்தின் முடிவில்லாத வெளியையும், அதில் எங்கும் சுற்றி திரியும் காற்றையும், அதில் அங்கமென பறந்து திரியும் ஒரு பறவையையும் மையமென வைத்து அவர் எழுதிய கவிதை "காவியம்".
"சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது"
இப்படி ஒரு சொல்லாடல். இறகுக்கும், பறவைக்கும் காற்றுக்குமான மையப்புள்ளி தான் காற்றின் வெளியில் பறவையின் வாழ்வை எழுதுவதாக ஒப்பீடு. கவிதை என்பது என்ன மாதிரியான மனநிலையில் எழுதுவது, என்ன விளக்கங்களை உணர்ந்து கொள்வது என்பதையெல்லாம் தாண்டி, அந்த கவிதையின் உண்மை வெளிப்படும் தருணங்களைத் தான் மாய துள்ளலாய் உணர்கிறேன்!
"பாலை", என்றொரு கவிதையில் பிரம்மாண்டத்தின் மத்தியில் கூட, தேடல்கள் எப்போதும் மறைந்து இருக்கும் என்றும். அதை உணர்ந்து கொள்ள, அதை தேடி அடைகின்ற மனநிலை மட்டுமே வேண்டும் என்று சொல்வதாக தோன்றுகிறது.
"பார்த்த இடமெங்கும் கண் குளிரும் பொன் மணல்
என் பாதம் பதித்து நடக்கும் இடத்தில் மட்டும் நிழல் தேடி என்னோடு அலைந்து எரிகிறது ஒரு பிடி நிலம்"
இப்படியாக சில நேரத்தில் மகிழ்ந்தும், புரியாத கவிதைகைளை படிக்கையில், ஏன் வாசிப்பின் எல்லையை விரிவுபடுத்தாமல் இருந்தோமென்றும் நினைத்துக் கொண்டே கவிதைகளில் பயணப்பட்டேன். பல இடங்களில் சுருக்கென தைக்கும் கேள்விகளை கேட்கிறார். முன்னரே சொன்ன சுயசாடல்களும் நிறைந்துள்ளது.
ஆனால் இன்னும் ஆழமாய் வாசித்துப் பிரமிளின் உலகைக் கண்டு கொள்ள முனைய வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். இன்னும் பல கவிதைகள் என்னை கட்டிப்போட்ட படியும், சில கவிதைகள் என்ன சுட்டுப்போட்ட படியும் கழிந்தன. அருவுருவம், தாசி, நிகழ மறுத்த அற்புதம் போன்ற கவிதைகள் நம்மை இழுத்துப் போடுகின்றன அந்த மாய உலகில். ஈழத்தின் பாடுகளையும் சில கவிதைகளில் காட்டியுள்ளார்.
"பிறவாத கவிதை" என்ற கவிதையில் அவர் தன்னையே சாடிக் கொள்வதாய் பார்க்கிறேன். பிறவாத பிள்ளையாய், இதயத்துக்குள் புழுவாய் நெளிந்து கிடப்பினும் வர மறுக்கும் அந்த கவிதை ஒரு சுயசாடல் இல்லையா?
"மீண்டும் மீண்டும் நோக்காடு வந்ததும் பிள்ளை பிறக்கவில்லை 'வாடா' என்றழைத்த ரிஷித்தகப்பன் குரலுக்கும் சுகப்பிரம்மமாக வந்துதிக்கவில்லை இதயத்தின் பட்டுத் துரும்புக் கூட்டுக்குள் புழுவாய் நெளிந்து கிடக்கிறது இது.
இதில் அக்குரோணி என்பது மிகப்பெரும் சேனையை குறிக்கிறது. எங்கேயோ வாசித்திருக்கிறோம் இதை என்று யோசித்தும், தேடியும் பார்த்ததில் உபபாண்டவம் புத்தகத்தில் எஸ்.ரா அவர்கள் இதைப் பற்றி சொன்னதை தேடி வாசித்தேன்.
"ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரை, ஐந்து காலாள் அடங்கியது ஒரு பத்தி. மூன்று பத்திகள் ஒரு சேனாமுகம், மூன்று சேனாமுகம் ஒரு குல்மம், மூன்று குல்மம் ஒரு கணம், மூன்று கணம் ஒரு வாகினி, மூன்று வாகினி ஒரு பிடுதினை, மூன்று பிடுதினை ஒரு சமு, மூன்று சமு ஒரு அணிகினி, பத்து அணிகினி ஒரு அக்குரோணி. இதன்படி ஒரு அக்குரோணியில் 21,870 தேர்களும், 21,870 யானைகளும், 65,610 குதிரைகளும், 1,09,350 காலாட்களும் இருக்கும்."
இப்போது மீண்டும் அந்த கவிதையை ஒரே மூச்சில் வாசியுங்கள். பற்பல எண்ணக் கூற்றின் வெளிப்பாடும், அவரின் சாடலும் விளங்கும். இப்படி இது ஒரு அருமையான தொகுப்பு. இதை தொகுத்து வாசக வெளிக்கு கொடுத்த சுகுமாரன் அவர்களின் வார்த்தைகள் மெய்யாக வேண்டும்.இன்னும் நிறைய இவரின் கவிதைகள் வாசிக்கப்பட்டு, பேசப்பட வேண்டும். படித்துப்பாருங்கள்...
பிரமிளின் 'காவியம்' கவிதையை பலர் அறிந்திருக்க கூடும் அப்படித்தான் நானும் அவரை அறிந்தேன். கவிதைகளை நான் அதிகமாக வாசித்தது இல்லை நான் இதுவரை வாசித்த கவிதை தொகுப்பு அப்துல் ரகுமான் எழுதிய 'ஆலாபனை' மட்டுமே. கவிதைகள் எல்லாம் இப்படித்தான் இருக்கக்கூடும் என்ற முன் அனுமானத்தோடு பிரமளின் கவிதையை எடுத்து வாசிக்க துவங்கிய போது தான் உணர்ந்தேன் நான் நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று.
ஆரம்பத்தில் பிரமிளின் கவிதைகளை வாசிக்கும் போது அந்த கவிதைகளை முழுவதுமாக புரிந்து கொள்ளவே இல்லை, அரைகுறையாக தான் புரிந்து. எத்தனை முறை வாசித்தாலும் அந்த கவிதையின் முழுமை தனத்தை அடைய முடியவில்லை, ஆனால் வாசிக்கும் ஒவ்வொரு தருணமும் அந்த கவிதையின் ஒவ்வொரு உணர்வுகளையும் என்னால் உணர முடிகிறது. இவர் கவிதைகளில் உள்ள எழுத்தின் இறுக்கமும் வடிவமும் அழகும் வாசிக்கும் போது உருவாகும் பிம்பமும் மேலும் மேலும் வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று உணர்வை தூண்டிக்கொண்டே தான் இருக்கிறது. இவரின் கவிதைகள் உள்ள மாற்றத்தை அவரின் வாழ்வியல் காலத்தை வைத்து ஒப்பிடலாம் ஆரம்பித்தில் எழுதிய கவிதைகள் பெரும்பாலும் ஆன்மீகத்தைச் சார்ந்ததாகவும் மரபை சார்ந்ததாகவும் அப்படியே அறிவியல் நோக்கிய பயணத்திலும் கால் பதிக்கிறார் பின்பு இறுதியில் ஈழத்தை நோக்கிய பயணத்தில் முடிகிறது.
இந்நூலின் இறுதியில் யுவன் சந்திரசேகரும் சுகுமாரும் அவர்கள் பிரமிளின் கவிதைகளை வைத்து நடத்திய உரையாடல் இணைக்கப்பட்டிருந்தது. அந்த உரையாடல் வாயிலாக பிரமியளின் கவிதையில் நமக்கு இருக்கக்கூடிய சந்தேகங்கள் ஒரு சிலவற்றை விளங்க கூடும் இப்படித்தான் அவரின் கவிதைகளில் உள்ள உட்கருத்தை உணர்ந்தேன். இவருடைய முழு கவிதை தொகுப்பையும் கட்டாயம் வாங்கி வாசிக்க வேண்டும் என்று உணர்வு எழுந்தது.
பிரமிளின் கவிதைகளில் உள்ள படிமத்தை வாசிக்கும் போதெல்லாம் அதில் உள்ள கற்பனையும் மாயையும் நம் மனதோடு ஒன்றி அப்படிமத்தின் மேலே எழும் கதைகளும் அதில் உள்ள அழகும் நம் மனக்கண்ணால் கண்டு பிரமித்து நிற்போம்.