மறைந்த பத்திரிகையாளர் வலம்புரிஜான் ‘நக்கீரன்’ பத்திரிகையில் எழுதி, அரசியல் வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பிய ‘வணக்கம்’ தொடர் பிறகு புத்தக வடிவமும் பெற்றது. தமிழக அரசியல் களம் தற்போது அடைந்திருக்கும் பல மாற்றங்களை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிட்டிருக்கிறார் வலம்புரிஜான். அரசியல் சூட்டுக்கு ஏற்ப அந்தப் புத்தகத்தை இப்போது மறுபதிப்பித்திருக்கிறது ‘நக்கீரன் பதிப்பகம்’. நூலிலிருந்து சில பகுதிகள்.
ராஜீவ் காந்தி பதவிக்கு வருவதற்கும் இரண்டு நாட்களுக்கும் முன்னர் ஜெயலலிதா ராஜீவ் காந்தியைச் சந்திக்க விரும்பினார்… ராஜீவ் காந்தி சொன்ன ஒரு செய்தி ஜெயலலிதாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. எம்.ஜி.ஆர். நலமுடன் இருக்கிறார். பத்து நாளில் திரும்பி வந்துவிடுவார் என்பதுதான் அந்தச் செய்தி!
இந்த நாட்களில் எம்.ஜி.ஆர். ஒருநாள் ஜெயலலிதாவை அழைத்து நீ என்ன வேண்டுமென்றாலும் செய்; உடன்படுகிறேன். ஆனால், சசிகலா நடராசனை மாத்திரம் கூட வைத்துக்கொள்ளாதே என்று அழாத குறையாகக் கேட்டார். இதற்கான சாட்சிகள் அமைச்சரவையிலேயே இருக்கிறார்கள். ஆனால் இந்தக் காலகட்டத்திலேயே சசிகலாவின் மாயவளையத்திற்குள் ஜெயலலிதா முழுக்கவே வந்துவிட்டார். சசிகலா என்கிற பெண்மணியால் ஜெயலலிதா முற்ற முழுக்க ஆட்டிப்படைக்கப்படுகிறார் என்கிற செய்தி ராஜீவ்காந்தி வரை எட்டியது. ராஜீவ்காந்தி, தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர் ஒருவர் வழியாகக்கூடச் சொல்லிப் பார்த்தார். அவரோ இறுதியாக என்ன நடக்கும் என்பதை உறுதியாக அறிந்துகொண்டவர். ஆதலால் சொல்லாமலே விட்டுவிட்டார்.
அதிமுக நமது கழகமாகி நாளாகிறது. கொள்ளைப் பணத்தை வைத்துக்கொண்டு அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று அரசாட்சி நடத்தும் ‘அன்றிற் பறவைகளை’ நினைத்தால் தூவல் தூவலாக உண்மைத் தமிழர்கள் உரிப்பார்கள். இது நிச்சயம்!
வடுகப்பட்டி தர்மராஜன்தான் அப்போதைக்கு சசிகலாவுக்கு ஆஸ்தான ஜோதிடர். அவர் சொன்னால் சொன்னதுதான். இப்போது சசிகலாவின் பணபலத்தில் மித்ரன் நம்பூதிரிகூட சாதாரணமாகிவிட்டார். வடுகப்பட்டி தர்மராஜன்தான் சசிகலா ஒருகாலத்தில் முதலமைச்சராகிவிடுவார் என்று சொன்னவர். இதை உறுதிப்படுத்திக்கொள்ளுவதற்காக சசிகலா அப்போதே, பல ஜோதிடர்களிடம் நடந்தார். இன்றும் அவர் முதலமைச்சராக ஆகத் தக்க வாய்ப்பு நிச்சயமாகவே இருக்கிறது.