செளந்தர்யமும், காதலும், மானுடத்தின் மீதான அன்பும், துரதிர்ஷ்டத்தை நோக்கி, துயரத்தை நோக்கி, பைத்தியத்தை நோக்கிச் செல்லும் சரிந்த பாதை கண்டராதித்தனுடையது. அவரது உலகில் எல்லாமே பிரிக்கவியலாத ஞாபகத்தின் பிரக்ஞையில் பிணைந்து கிடக்கிறது. அந்தவுலகிலேயே உழலும் கண்டராதித்தனின் கவிதைத் தன்னிலை பல உருமாற்றங்களை அனுபவிக்கிறது. அங்கே சந்தோஷமும் துக்கமும் பயங்கரமும் வசீகரமும் நல்லூழும் துரதிர்ஷ்டமும் வேறு வேறு உயிர்நிலைகள் அல்ல.
கவிஞர் கண்டராதித்தன் (மே 8, 1972) நவீன தமிழ் கவிஞர்களில் மரபோடு சார்ந்த கவிதைளை எழுதும் கவிஞர். இவருடைய கவிதைகள் பெரும்பாலும் பக்தி மரபுகளையும் தொன்மங்களையும் சார்ந்து எழுதப்பட்டுள்ளன. தமிழ் மரபின் பண்பாட்டுச் சித்திரங்கள் ஊடுருவும் கவிதை வெளி இவருடையது என்று கவிதைச்சூழலில் கருதப்படுகிறது.
கண்டராதித்தனின் இயற்பெயர் இளங்கோ. கண்டாச்சிபுரத்தை ஆண்ட சிற்றரசர் கண்டராதித்தர் நினைவாகக் கண்டராதித்தன் என்கிற பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார். முதல் படைப்பு 1994-ல்கரும்பலகை என்ற தலைப்பில் கையெழுத்துப்பிரதியில் வெளியானது. தலைப்பில்லாத கவிதை காலச்சுவடு அச்சு இதழில் பிரசுரமானது.
விருதுகள்: சிறந்த கவிதை தொகுப்பிற்கான ஆனந்த விகடன் விருது (2008, சீதமண்டலம்) சிறந்த கவிதை தொகுப்பிற்கான ஆனந்த விகடன் விருது (2016, திருச்சாழல்) குமரகுருமரன்-விஷ்ணுபுரம் விருது (2018) எழுத்துக்களம்(சேலம்) வாழ்நாள் சாதனையாளர் விருது (2021)