கவிஞனின் கண்களில் ஒன்று கடவுளால் கையளிக்கப்பட்டது. அது ஒவ்வொன்றையும் உற்றுநோக்குகிறது. மற்றொன்றோ ஒரு குழந்தையிடம் யாசிக்கப்பட்டது, எப்போதும் வியப்பில் விரிவது. இசை இவ்விரு கண்களின் உதவிகொண்டு தனக்கு பிடித்த, படிக்க கிடைத்த, பாதித்த படைப்புகளைப் பற்றி இந்நூலில் அலசுகிறார். இசையின் விதைகளைப் போலவே இக்கட்டுரைகளும் அவற்றின் சுயேச்சையான நோக்கு, நுட்பமான அவதானிப்பு, அசாதாரணமான மொழிவீச்சு, அரிதான நகையுணர்வு ஆகியவற்றின் சிறப்பால் தனித்துவத்துடன் மிளிர்கின்றன.
1977ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் இருகூரில் ஆறுமுகம் - நாகரத்தினம் தம்பதியருக்கு மகனாக பிறந்த இசை 2002 ஆம் ஆண்டில் தமிழ்ச் சூழலில் கவிஞராக அறிமுகம் ஆகினார். இவரது இயற்பெயர் ‘சத்தியமூர்த்தி’ என்பதாகும். இவர் தற்போது தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனை ஒன்றில் மருந்தாளுநராகப் பணியாற்றி வருகிறார். மேலும் இவரும் இவரது நண்பர்களும் இணைந்து ‘கருக்கல்’ எனும் சிறுபத்திரிகை ஒன்றை நடத்தி வருகின்றனர். அது ஆனந்த விகடனின் சிறந்த சிறுபத்திரிகைக்கான விருதினைப் பெற்றுள்ளது. மேலும் காலச்சுவடு, உயிர்மை, அம்ருதா, அந்திமழை, தடம், தீராநதி முதலிய இலக்கிய இதழ்களில் கவிதைகள் மற்றும் திறனாய்வு கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். 2014ஆம் ஆண்டில் “இளம் படைப்பாளருக்கான சுந்தரராமசாமி விருது” பெற்றுள்ளார்.