சாகித்ய அகாதெமி விருது பெற்ற வண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்பு ’ஒளியிலே தெரிவது’ இந்த நூல் ‘சுஜாதா உயிர்மை விருது பெற்றுள்ளது. இந்த நூலின் முன்னுரையில் வரும் வண்ணதாசனின் வரிகள்: நான் என் கிளையோடும், இலையோடும். நிழலோடும் நின்றுகொண்டு இருக்கிறேன். நான் ஒளியிலே தெரிவேன். அல்லது என் நிழலில் உதிர்ந்த சருகின் மேல் ஒரு எளிய எறும்பு ஊர்ந்து கொண்டிருக்கும்.
Vannadaasan (தமிழ்: வண்ணதாசன்) aka கல்யாண்ஜி is a popular poet in Tamil Modern literature. He lives in Tirunelveli. He writes short stories and non fiction articles under the name "Vannadhasan". He writes poems under the name "Kalyanji". His real name is S. Kalayanasundaram
உருவகங்கள் என்பவை தமிழுக்கு ஒன்றும் புதிதல்ல... "கடன் பெற்றார் நெஞ்சம் போல்.." தொடங்கி பலப்பல வகையாய் மலிந்து விட்டன இன்று. ஆனால் மறைபொருளாய் இருக்கும் மெல்லிய நீர்த்தடம் போல் மனதின் அடியாழத்தில் ஒளிந்திருக்கும் ஒரு உணர்வை, ஒரு உருவகத்தின் வழியே கதாபாத்திரமாக உலவ விடும் வித்தை தெரிந்தவர் வண்ணதாசன்.
//"காந்தியின் கைகளிலிருந்து என்கையை உருவிக் கொண்டேன். பத்திரிக்கையும் கையுமாக மடங்கி அப்படியே கால்கள் பக்கம் உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன். என்னை அமிழ்த்தி உருட்டி ஆழத்துக்குக் கொண்டுபோவது போல அலையலையாக ஏதேதோ மேலே நனைத்து ஓடிக் கொண்டிருந்தது. தலையை நிமிர்த்தி அந்த ரவிவர்மா படத்தைத் தேடினேன். கொஞ்சம் கொஞ்சமாக அது தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது."// இப்படி பொங்கிப் பெருகும் உணர்வை இதை விட அழுத்தமாக வேராரும் சொல்லி விட முடியாது. அப்படி சொன்ன கணத்தில் அந்தப் படமும் ஒரு பாத்திரமாக நடமாடத் துவங்குகிறது.
//"தாளமிடுவதுபோல சத்தமின்றிக் கைதட்டிக் கொண்டிருக்கிறவரின் வெள்ளை விழுந்த சிரிப்பையே பார்த்தபடி வந்த சிந்தாமணி அக்கா, இப்போது முன்னால் இருக்கிறவர்களை நோக்கிப் பேசத் தொடங்கினாள். எடுத்த எடுப்பிலேயே, ‘‘உங்களில் எத்தனை பேருக்கு நீச்சல் அடிக்கத் தெரியும்?’’ என்று கேட்டுவிட்டு நிறுத்தினாள். சிதம்பரம் பதில் சொல்லவில்லை. மேடைக்குப் பின்னால் தொங்குகிற ஃப்ளெக்ஸி பேனரில் அவன் வரைந்திருக்கிற நான்காவது கத்திரிக்காயையே பார்த்துக்கொண்டு இருந்தான். அதற்குப் பதிலாக அந்த இடத்தில் இரண்டு அல்லிப் பூக்களை உடனடியாக வரைந்துவிட முடியாதா என்று அவனுக்குத் தோன்றிற்று."// நொடிநேரம் தலைதூக்கி மறையும் உணர்வை இப்படி படக் கென்று படம் பிடிக்கும் லாவகம் அவருடைய அடையாளம். அப்படி உணர்வுகளைப் படிக்க ஆசைபடுபவர்கள் அவரை எளிதில் கடந்து போக முடியாது.
முந்தின பக்கங்களைத் திருப்பாமல், அடுத்து வரும் பக்கங்களை யூகிக்காமல், அப்போது வாசிக்கும் வரிகளில் மட்டும் லயித்து போவது என்பது சொர்க்கம்... அந்த உணர்வை நாம் வண்ணதாசன் அவர்களின் ஒவ்வொரு படைப்பும் நமக்கும் கொடுக்கும்..
வாழ்க்கையில் கவனிக்க தவறிய, கவனித்தாலும் கொண்டாட மறந்த விஷயங்கள் ஏராளம். வண்ணதாசன் படைப்புகளை வாசித்த யாரும் அடுத்த முறை அதை எல்லாம் கவனிக்க இல்லை இல்லை ரசிக்க தவறமாட்டார்கள்.
12 சிறு கதைகளை கொண்ட 160 பக்கங்கள் கொண்ட புத்தகம். ஒவ்வொரு கதையும் ஒரு உணர்ச்சியை சொல்லும்... ஏதோ ஒரு வகையில் கண்ணின் ஓரத்தில் ஒரு துளியை கொடுக்கும். அது ஆனந்த கண்ணீரோ, வருத்த கண்ணீராகவும் இருக்கலாம்.
எல்லா கதையும் ரசிக்க கூடியது என்றாலும் சிநேகிதன், இன்னொன்றும், ஒரு போதும் தேயாத பென்சில், துரு எதோ மனதிற்கு நெருக்கமாக போன ஒன்று.
இரண்டு மூன்று நாட்களில் நனைந்து போன வாழைபூவின் மடலும் அதன் கரு நிறத்தின் அழகு . கிளை விழுந்த ஈரத்தில் . நசுங்குகின்ற முருங்கை இலை தழையின் பச்சை வாசம்... கனத்த இஷ்த்திரி பெட்டி, சூட்டோடு துணியில் அழுத்தமாக நகர்கிற சமயம் உண்டாகும் வாசனை... வெயிலில் காயும் நெல்லின் வாசம் அனைத்தையும் சிரிப்போடு ரசிக்காமல் செல்ல முடியாது.
தண்ணீர் நிரப்புகின்ற சத்தம் ஏதோ ஒரு வகையில் நம்மையும் நிரப்பச் செய்கிறது
2008 முதல் 2010 வரை, பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்த 12 சிறுகதைகளும் பெருங்கதைகளும் கொண்ட தொகுப்பு இப்புத்தகம். அவை: 1.சினேகிதிகள், 2.இமயமலையும் அரபிக்கடலும் 3.சில ராஜா ராணி கப்பல்கள் 4.யாரும் இழுக்காமல் தானாக 5.ஒரு கூழாங்கல் 6.சுலோச்சனா அத்தை, ஜெகதா மற்றும் ஒரு சுடுமண் காமதேனு 7.காணாமல் போகும் வாய்க்கால்கள் 8.ஒரு போதும் தேயாத பென்சில் 9.ஒளியிலே தெரிவது 10.இன்னொன்றும் 11.துரு 12.மீன்கள் இல்லாத தொட்டியில் மீன்களை
இக்கதைகளில் நெல்லை தமிழ் பேச்சுவழக்கு ஆங்காங்கே இடம்பெற்றுள்ளது.
நீண்ட கதையை வாசித்து கடைசியில் பொசுக்கென்று முடிகின்ற கதைகள். அதாவது, ஒரு சுபமான முடிவுக்கு சர்வ நிச்சயமாய் நம்மை கொண்டு செல்லாது. ஆனால் ஒவ்வொரு கதையையும் வாசித்தபின் , அரைநிமிட பொழுதாவது நம்மை சிந்திக்கச் செய்யும்படியான முடிவுகள். முரண், பிறழ்வு செயல்களை கொள்ளும் கதைமாந்தர்களின் போக்கை, நாசூக்காய் சொல்கின்றன. முதல் நபர் பார்வையில் சொல்லபடும் இக்கதைகளை, திரு வண்ணதாசன் அவர்களே நம்மிடம் சொல்வதாக உணரச்செய்கிறது.
கதைமாந்தர்களின் அறிமுகமும், ஒருவொருக்கான தொடர்பும் கதைகளின் ஆரம்பத்தில் தெளிவாக்கபடவில்லை. வாசிப்பவர் தன்போக்கில் கற்பனை செய்து கொண்டு வருகையில், நடுவில் அத்தொடர்புகளுக்கு விளக்கம் தரபடுகிறது. இது சற்றே ஆயாசத்தையும சலிப்பையும் தருகிறது.
மற்றபடி கவித்துவமான வர்ணனைகளும், ஆழ்பொருள்நிறைந்த எழுத்துக்கோர்வை நடையும், கடைசியில் பெருமூச்சுக்கள் விடுவிக்க வைக்கும்படியான கதைகள் என இவற்றை சொல்லலாம்.
புத்தகத்திலிருந்து...
\\ இந்தப் படிகள் மட்டுமல்ல. எந்த படிகளுக்குமே உட்கார்ந்து இருக்கிறவர்களை அழகாக்கி விடுகிற ரகசியம் உண்டல்லவா. //
\\ பீரோ கதவுகள் என்றைக்குச் சத்தம் போடாமல் இருந்தன. சத்தம் போடுவது மட்டுமல்ல, வீட்டில் இருக்கிற இன்னார் இப்படித் திறப்பார்கள் என்பதையும் அல்லவா சேர்த்து ஒப்பித்து விடுகின்றன. //
\\ வாசிப்பதற்கு கையில் வைத்திருந்த பேப்பரை அப்படியே கசக்கினான். அவ்வளவு பெரிய முழு பேப்பரும் அவன் கைகளுக்குள் கசங்கி, ஒரு காகிதப் பந்து மாதிரி ஆகிவிட்டிருந்தது. கையை அவன் உதறினால், உள்ளங்கையில் ஒட்டியிருக்கிற எழுத்து எல்லாம் தரையில் உதிர்ந்தாலும் உதிரும் என்று கூடத் தோன்றிற்று. //
\\ கனத்த அந்த இஸ்திரி பெட்டி, சூட்டோடு துணியில் அழுத்தமாக நகர்கிற சமயம் உண்டாகிற வாசனையில் என் சுருக்கங்களை விளக்கிக் கொண்டிருந்தேன். //
\\ சில ஜன்னல் திரைகளை இழுத்து மூடி விடுவதன் மூலம், சில திரைகளை திறந்து விடுவதன் மூலம் , நான் அமர்ந்து இருக்கிற இந்த அறையின் வெளிச்சத்தை இங்குமங்கும் இடம்பெயர்த்தாள். //
All the stories are very subtle and the author never tells us directly about the emotions. This writing style is apt for the people who love to read character based stories and subtle emotions.
பவானி சிரித்த சிரிப்பை இதற்கு முன்பு பார்த்திருக்கிறேனா. புகையப் புகைய அடுப்புக் குழலை ஊதிக்கொண்டு இருக்கும்போது, குப்பென்று ஒரு ஊதலில் பிடிக்குமே அந்தத் தீயை கடைசியா��� எப்போது பார்த்தேன்.
-ஒளியிலே தெரிவது
ஒளியிலே தெரிவது ஆசிரியர் – வண்ணதாசன் பதிப்பு – அமேசான் மின் புத்தகம் பார்க்க – vannathasan
ஒளியிலே தெரிவது – சிறுகதை ஒளியிலே தெரிவது – தொடர்ச்சி யாரும் இழுக்காமல் தானாக… ஒரு கூழாங்கல் ஒரு போதும் தேயாத பென்சில் மீன்கள் இல்லாத தொட்டியில் மீன்களை…
இது வரை வண்ணதாசனின் இரு சிறுகதைத் தொகுப்புகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். இது மூன்றாவது. இவ்வளவு எளிதான மொழி நடையில் இவ்வளவு இனிமையான நினைவுகளை, வண்ணங்களை, மனிதர்களை இத்தனை செரிவுடன் ஒரு மனிதரால் எழுத முடிகிறது. அந்த மொழி நடையை வாசிக்கையிலேயே நம்மை அறியாமல் புன்னகைக்க வைக்கிறார், பதைபதைக்க வைக்கிறார். ‘0கொஞ்ச நேரம் கழித்து அடுத்த கதையை வாசிக்கலாமே, அந்தக் கதையின் இனிமையில் திளைத்த பின்னர்’ என நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வைக்கிறார். சிக்கல் சிடுக்கல் இல்லாத இந்த கதையோட்டமே நம்மை ஆழ்ந்து போக வைக்கிறது.
நாச்சியாரிடமும் கிருஷ்ணம்மாவுடனும் சேது பேசிக்கொண்டிருக்கும்போது நாம் நம் கிராமத்தின் குளத்தங்கரையிலோ ஆற்றங்கரையிலோ இருப்பதாக உணர்கிறோம். ஒவ்வொருவரின் உள்ளும் பிறந்த வளர்ந்த மண்ணின் வேரைப் பிடித்து வைத்திருப்பது அம்மண்ணின் மனிதர்கள் அல்லவா. இன்றளவும் நம் ஊர்களின் நாச்சியாரும் கிருஷ்ணம்மாவும் இருந்துகொண்டுதானே இருக்கின்றனர். அவர்கள் இருக்கும் வரைதான் அம்மண்ணும் மங்காத நினைவுடன் நம்மிடையே நிற்கும்?
‘அப்படியே இருக்கீங்க’ என்று சொன்னதும் கிருஷ்ணம் மாவுக்கு ஒரே சிரிப்பு. ‘அப்பா.. இந்த நாற்பது வருஷத்தில் இன்றைக்குத்தான் வாயைத் திறந்து என்கிட்டே பேசத் தோணியிருக்கு போல’ கிருஷ்ணம்மா நாச்சியார் முதுகைத் தொட்டுக்கொண்டு என்னிடம் பேசினார்.
-சிநேகிதிகள்
நிறைய மனிதர்களைக் காட்டுகிறது இந்த தொகுப்பு. ஊதாரி தந்தையர்கள், உயிரான தோழிகள், ஏங்கும் மனிதர்கள், அழுத்தத்தில் பிதுங்கும் மனிதர்கள்…
‘இமயமலையும் அரபிக்கடலும்’ காதையில் வரும் தங்கம் அப்படிப்பட்டவள்தான். ஓடிப்போன தந்தை, அந்த எரிச்சலில் வாழ்க்கையை நடத்தும் தாய், படிப்பில் ஆர்வமாய் இருப்பவளை வேலைக்குப் போகவைக்கும் வறுமை… இத்தனைக்கிடையிலும் ‘அம்மா இப்படி சிரிச்சிட்டே இருந்தா எப்படி இருக்கும்’ என்று ஏங்குகிறாளே. நமக்கு என்னவோ செய்கிறது. கரிசனத்துடன் வந்த சைக்கிள் காரப் பெரியவர் செய்யும் உதவி என்னவோ சிறிதுதான் என்றாலும், தந்தை அற்ற பெண்ணின் அந்த கண்ணீர் துளிகள் வாசிப்பவர் மனதைக் கணக்கவே வைத்திருக்கும்.
‘புதையல் எடுத்துக்கிட்டு வந்திருக்கியாக்கும் உங்க அய்யா கிட்டேயே கொடு’ என்று சிரித்த அம்மா ‘சிரங்கு எல்லாம் ஆறிட்டுதா? கையைக் காட்டு’ என்று சொன்னாள். இப்போது சிரங்கு எப்படிப் போனால் என்ன? அம்மா ஏன் அப்படியே கொஞ்சநேரம் சிரித்துக் கொண்டு இருக்கக் கூடாது என்று தோன்றிற்று.
மெல்லிய உணர்வுகளை சொல்லிச் செல்கிறது அத்தனை கதைகளும். ‘சில ராஜா ராணிக்கப்பல்கள்’ கதையில் வரும் சுந்தரம் மாமாவிற்கும் சரோ அத்தைக்கும்தான் எத்தனை வித்தியாசம்?
அம்மாவைப் பார்த்ததும் சரோ அத்தை எழுந்திருந்தார்கள். முகம் கொள்ளாமல் சிரித்தாள். அம்மா பரிசு வாங்க வருவது போலவும், சரோ அத்தை பரிசு கொடுக்கப்போவது போலவும் நின்றார்கள். பக்கத்தில் வந்ததும் அம்மா கையை அத்தை பிடித்துக் கொண்டாள்.
எத்தனை நல்ல உவமை. கதையின் கரு மின்னலாக நம் மனதிற்குள் அடிக்கிறது. அதை ஒரு சிறிய பெண்ணின் பார்வையில் கதை சொல்லவேண்டும் என்று தோன்றியிருக்கிறது அவருக்கு.
oliyile therivathu vannathasan
இப்படி யாரும் இழுக்காமல் கதையில் கையில் கீரைக்கட்டுடன் பாஸ்கர பெரியப்பாவுடன் பேசிக்கொண்டிருக்கும் அம்மாவைப் பார்க்கும் நீலா, அவளுடைய காதலை எச்சரிக்கையுடன் அணுகும் அம்மா, பக்கத்து வீட்டு அக்காக்கள் நினைவைத் தரும் ஒரு கூழாங்கல் காந்தி, செம்பா, காணாமல் போகும் வாய்க்கால்கள் சிந்தாமணி அக்கா என சுற்றி வாழ்கிற மனிதர்களுடன் வாழ்ந்த உணர்வைத் தருகிறது இத் தொகுப்பு.
உணர்வுகளை நாசூக்குடன் வெளிக்கொணரும் சுலோச்சனா அத்தை, ஜெகதா மற்றும் ஒரு சுடுமண் காமதேனு மேலோட்டமாகப் பார்த்தால் ஏதோ எல்லை மீறிய ஒரு பெண்ணைக் காட்டுவது போலத் தோன்றும். நமக்கு இரண்டு நிமிடம் கழித்துதான் ஒரு மின்னல் அடிக்கிறது. ஆமா. ‘அவ அப்டின்னா இவன் ஏன் அதை எல்லாம் வளரவிட்டுகிட்டு இருக்கான்’ என்று உணரும்போது கதை நம்மை வேறொரு இடத்தில் நிறுத்திவிடுகிறது.
இப்படி விட்டால் ஒவ்வொரு கதையைப் பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாவற்றுயும் விஞ்சி இந்த நூலை வாசிக்க வைப்பது வண்ணதாசனின் அசை போடுவது போன்ற கடந்த கால நினைவுகள், வர்ணம் வாசனை என்று எல்லாவற்றையும் சற்றேனும் மிகை இன்றி அவர் நமக்குக் காட்டித்தரும் காட்சிகள், …. இன்னும் எவ்வளவே.. அவ்வளவு இனிமையாக இருக்கிறது இந்த நூல். இமைக்கணம் என்கிற தலைக்குள் ஏறாத தத்துவ நாவலை வாசித்துவிட்டு அரண்டு போன நம் மனதிற்கு இது தரும் ஆசுவாசத்தையும் சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது.
"நான் என் கிளையோடும், இலையோடும், நிழலோடும் நின்றுகொண்டு இருக்கிறேன். நான் ஒளியிலே தெரிவேன். அல்லது என் நிழலில் உதிர்ந்த சருகின் மேல் ஒரு எளிய எறும்பு ஊர்ந்து கொண்டிருக்கும்" - வண்ணதாசன்.
அந்த எளிய எறும்பு நான்தான் என்று தோன்றுகிறது எனக்கு!