சரித்திரத்தில் வரும் சோழ, சேர, பாண்டிய மன்னர்களைப் பற்றி, பெண்மை படர்ந்த முகத்தில் குறு மீசையுடனும், அதீத ஒப்பனையுடனும், தமிழ் மண்ணின் காலநிலைக்கு ஒவ்வாத ஆடையுடன் மரத்ததை சுற்றி பாட்டிசைத்து, பேரிளம் பெண்களை நோக்கி உதட்டசைக்கும் காட்சியையே முன்நிறுத்திய நாடக மற்றும் திரை ஊடகங்களின் பிம்பத்தை உடைத்து, இலக்கியங்களின் அடிப்படையிலும், சரித்திர தரவுகளின் வழியே, இந்த மண்ணின் இயற்கை மைந்தர்களாய் நிறுவும் ஒரு உன்னத்தப்படைப்பு. ஒவ்வொரு மன்னனையும் இயல்பான மனிதர்களாய், எந்த பகட்டுமின்றி, தமிழ் மாந்தராய் உலவவிட்டு, ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் முயற்சி, முதன் முறையாக இருந்தாலும், மிக தாமதமாய் வந்திருக்கும் ஒரு அவசியப்படைப்பு. இது பேராசான் கைவண்ணத்தில் நிறைவாய் அமைந்திருப்பது சிறப்பு.