இந்த வருடத்தின் முதல் தமிழ்ப் புத்தகம். வண்ணதாசனை விட வேறு நல்ல வழி இருக்கிறதா என்ன துவங்குவதற்கு. கடித இலக்கியம் என்கிற வகை தமிழுக்கு புதிதல்ல. இதுவரை இந்த வகையை நான் படித்ததில்லை. வண்ணதாசனிலிருந்து தொடங்கியாயிற்று.
வண்ணதாசன் இரண்டு கண்களால் இந்த உலகத்தைப் பார்க்கிறார். அதில் ஒரு கண் முழுக்க சௌந்தர்யம் நிறைந்த்திருக்கிறது. மற்றொரு கண் முழுக்க கருணை நிறைந்திருக்கிறது என வண்ணதாசனின் நெருங்கிய நண்பரான வண்ணநிலவன் கூறுகிறார். இந்த தொகுப்பைப் படித்ததும் அது எவ்வளவு உண்மை என தெரிகிறது. இந்த கடிதங்கள் எல்லாம் அவர் ஒரு குறிப்பிட்ட நபருக்கு எழுதியிருந்தாலும், என்னைப் பொறுத்தவரை இது வண்ணதாசன் அவருடனேயே அவர் பேசிக் கொள்ள கிடைத்த ஒரு வாய்ப்பு என்று கருதுகிறேன். தனது மனதில் நீரோடை போல ஓடும் எண்ணங்களை அப்படியே கடிதமாக்கி அனுப்பி விடுகிறார் போலும்.
புத்தகத்தின் முன்னுரையில் ஒரு வரியில் ஆவி நிறைந்த இட்லி வேகுகிற பக்கத்து வீட்டு வாசம் என ஒரு வரியை எழுதி சென்றிருப்பார். மிகச் சாதாரணமானது போல இருக்கும் அந்த வரியில் நான் அப்படியே தங்கி விட்டேன். சிறு வயது பழைய நினைவுகள் அப்படியே ஒரு ரீலில் ஓட ஆரம்பித்து விட்டது. எழுத்தாளனின் எந்த சொல் ஒரு வாசகனை பீடிக்கும் என்பது எழுத்தாளர்களுக்கே பிடிபடாத ஒன்று. ஒட்டு மொத்த புத்தகத்தை படித்து முடித்தாலும் என்னில் ஒரு பகுதி அந்த வாக்கியத்திலேயே தங்கி விட்டதைப் போல இருந்தது.
சாம்ராஜ் அவர்களுக்கு எழுதின கடிதத்தில் தன்னுடைய தாத்தா மாம்பழம் சீவி பேரப்பிள்ளைகளுக்கு கொடுப்பதைப் பற்றி சில வரிகள் எழுதி இருந்தார். அதில் தாத்தா பரிமாறும் போது அன்றைக்கு யோகம் உள்ளவர்களுக்கு மாங்கொட்டை கிடைக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். வேனல் காலத்தில் எனது தந்தை மாம்பழம் வாங்கி வந்து மதிய சாப்பாட்டோடு சீவி வைப்பதை ஒரு நிமிடம் உணர்ந்தேன். போதும், இந்த படைப்பு அதற்கான வேலையை செய்து விட்டது. நாயின் கையில் கிடைத்த கொப்பரையைப் போல புத்தகம் முடிக்கும் வரை அந்த நினைவுகளையே உருட்டிக் கொண்டிருந்தேன்.
சில கடிதங்களில் தனிப்பட்ட தகவல் இருப்பதும், ஏற்கனவே எழுதிய கடிதத்திற்கு பதிலாகவும் இருப்பாதல் நம்முடன் ஒன்ற முடியவில்லை. மாம்பழம் போலத் தான் வண்ணதாசனின் இந்த கடிதங்களும், தொடர்ந்து படிக்க திகட்டலாம். கடித இலக்கியத்தில் ஆர்வம் இருந்தால் படித்துப் பாருங்கள்.