காட்டில் ஒரு நெடிதுயர்ந்த மரத்தைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? அதன் பசிய இலைகள், அது தரும் நிழலின் தண்மை, அம்மரத்தில் தங்கும் பறவைகள், விலங்குகள், இவ்வளவு வளர இது எடுத்துக்கொண்ட ஆண்டுகள் இவையெல்லாம் தானே? ஆனால் மனிதரில் சிலருக்கு மரம் பச்சை டாலராக மட்டுமே தெரியும்! அந்த சிலருக்காக போர்னியோ மழைக்காடுகளில் மரம் வெட்டும் வேலைக்கு செல்கிற ஆசிரியர் தன்னோடு நம்மையும் கூட்டிச்செல்லும் பயணமே "காடோடி".
போர்னியோ என்கிற பசிபிக் தீவு மலேஷியா, புரூனே, இந்தோனேசியா ஆகிய மூன்று நாடுகள் அடங்கிய வெப்பமண்டல மழைக்காடுகள் கொண்டது. அமேசான் காட்டுக்கு நிகரான பல்லுயிர் வகைமை (biodiversity) கொண்ட காடுகள் இவை; சுமார் 10 முதனிகள் (primates) இங்குண்டு; குறிப்பாக ஓராங் ஊத்தான்! கடமான், கேழையாடு, செம்படாவ், மலை அணில்கள், சறுக்கிகள் என இவையும் கதையின் ஓர் அங்கமே! தவிரவும் மரம் வெட்டும் முகாம் இருக்கும் இடம் இருவாசிகள், பகட்டுக் கோழிகள் முதலான ஏராளமான பறவையினங்கள், நூற்றுக்கணக்கில் செடி கொடி மர இனங்கள் கொண்டது. 30 மீட்டர் உயரம் கொண்ட கவிகை ஒளி புகாமல் தடுத்து குளுமை தரும்! கினபத்தாங்கன் நதியும் அதன் கிளைகளும் நூல் நெடுக நம்மோடு வரும்!
வெறும் காடும் காட்டுவிலங்குகளின் கதை மட்டுமே இல்லை காடோடி; மரம்வெட்டும் முகாமில் மலாய், சீனர், பழங்குடிகள் என்று பல்வேறு இன மக்கள் தங்கள் வேறுபாடு மறந்து வாழும் அன்றாடம் கொண்டது; பிரியும் நாள் வரும் என்று அறிந்தும் ஒருவருக்கொருவர் செலுத்தும் நிபந்தனையற்ற அன்பும் ஒரு வகையில் காடு மனிதருக்கு அளிக்கும் கொடைகள் போலத்தானே! இவர்களில் சிலர் கதையைத் தாண்டி நேரடியாக நம்மோடு உரையாடுகிறார்கள்:
ஜோஸ்: மரத்துக்கு மரம் இலைகள் உரசும் ஓசையில் கூட எவ்வளவு வேறுபாடு? சொரசொரப்பான இலைகளுக்கென்று ஒரு ஓசை. வழுவழுப்பான இலைகளுக்கு வேறு ஓசை. அதுவே தடித்த இலைகள் என்றால் தனி ஓசை. இவையெல்லாம் தனித்தனிப் பண்கள் அல்லாமல் வேறு என்ன? இத்தோடு கூடுதலாகக் கேட்கும் சிள்வண்டு களின் ஓசை, பறவைகளின் குரல்கள் இவையெல்லாம் தாளங்கள். இவை அனைத்தையும் சேர்த்த முழு இன்னிசை நிகழ்வுதான் காட்டின் பாடல்.
தொல்குடி பிலியவ்: எங்களுக்கு அன்பு செலுத்த மட்டுமே தெரியும். அதையும் ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு வகையாக செலுத்தத் தெரியாது. இப்போது உன் மேல் வைத்துள்ள அதே அன்பைத்தான் இதோ இம்மரத்தின் மீதும் வைத்துள்ளேன்.
தன்னை அழிக்கும் மனிதரை காடு பழி வாங்கும் என்றும், இயற்கை என்பது அன்புமயமான இறைவன் போலும், சில சூழலியலாளர்களாலேயே மடத்தனமாகக் கட்டியமைக்கப்படுவது குறித்துத் தொல்குடி பிலியவ் கொண்டிருக்கும் தெளிவு பகுத்தறிவின் பால்பட்டது! மிக எளிமையாக, மனிதர்களின் உணர்வுகளை இயற்கையின் மேல் திணிக்காதீர்; அதற்கு நம்மைப் பழி வாங்குவது தான் வேலையா என்று சொல்லி ஆச்சர்யமூட்டுகிறார்!
தன் படுக்கையில் இருந்தே மழைக்காடுகளின் சிறப்பு வாய்ந்த ஓராங் ஊத்தான்களைக் காண்கிற ஆசிரியரை எண்ணி பொறாமை கொள்ளும் அதே நேரம், காடு, மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு, விலங்குகள், பறவைகள், கவிகை பரப்பு அனைத்தும் இழந்து, வெற்று நிலத்தை கண்டு எழுதும் அவரது மனநிலையை வாசிக்கும்போதே கண்கள் கசிகிறது! அவரது வாழ்க்கை மரத்தின் வளையங்களில் கண்டிப்பாக அவ்வளையம் வடு பெற்ற ஒன்றாகத்தான் இருக்கும்...
முடிவாக நாம் புரிந்துகொள்ளவேண்டியது இது தான்: கடந்த சில ஆண்டுகளாகவே மக்கள் திரளாக போராடும் களங்கள் பெரும்பாலும் சூழல் போராட்டங்களே; மனிதனின் அதீத பேராசையால், காடுகள் அழிப்பு பருவநிலை மாற்றத்தை துரிதப்படுத்திய இன்றையப் பின்னணியில் இருந்துதான் இந்த நாவலை வாசிக்க வேண்டும்! குணா, குவான், தான் செய்வது எத்தகைய பெரும் குற்றம் என்று தெரிந்தும் கையறுநிலையில் தவிக்கும் ஒமர், கதை சொல்லும் ஆசிரியர் அனைவருமே சுயமாய் முடிவெடுக்க முடியாத, ஏதோ ஒரு பெருமுதலாளி ஆட்டுவிக்கும் கைப்பாவைகளே! இவையனைத்தையும் புரிந்துகொள்ளும் வகையிலும், விறுவிறுப்பாகவும் சொல்லுவதாலேயே காடோடி அனைவரும் வாசிக்க வேண்டிய பிரதியாகிறது!!