வீரபாண்டியன் மனைவி என்ற தலைப்பை பார்த்தவுடன் பொன்னியின் செல்வன் கதையில் ஆதித்த சோழனால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட வீரபாண்டியனின் மனைவியின் கதையாக இருக்கலாம் என்று நினைத்து தான் வாங்கினேன். ஆனால் இது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கும், அப்போது பாண்டிய நாட்டை ஆண்ட வீரபாண்டியனுக்கும் இடையில் நடைபெறும் கதை.
வீரபாண்டியன் புரிந்துவரும் ஆட்சியே குலோத்துங்க சோழனின் தந்தை இரண்டாம் ராஜாதி ராஜ சோழனால் வழங்கப்பட்டது என்பதை மறந்து இலங்கையுடன் வீரபாண்டியன் கொண்ட நட்புறவும், அதே போல வீரபாண்டியனின் மனைவியான சேர தேசத்து இளவரசியை குலோத்துங்கன் பெண் கேட்டு மறுத்து வீரபாண்டியனுக்கு திருமணம் முடித்துக் கொடுத்ததுமான இரண்டு முக்கிய காரணங்களால் பாண்டிய நாட்டின் மீது குலோத்துங்க சோழன் போர் புரிகிறான்.
இதே காலத்தில் தான் கம்பர் வடமொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்தை தமிழில் மொழில்பெயர்த்து "கம்பராமாயணம்" என்ற பெயரில் சோழனின் ஆட்சிக்குட்பட்ட திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்) அரங்கேற்றம் செய்கிறார். அதனால் அரு. ராமநாதனும் இந்த கதையை ராமாயணத்தை ஒட்டியே கொண்டு செல்கிறார்.
கதை: வீரபாண்டியனின் ஆட்சி காலத்தில் விக்கிரம பாண்டியன் எனும் மன்னனும் மதுரை ஆட்சியை கைப்பற்ற நினைத்து சோழனின் உதவியுடன் போர் புரிந்து வீரபாண்டியனை வீழ்த்தி மதுரையை கைப்பற்றுகின்றான். இதில் வீரபாண்டியனின் மகன் ஒருவன் இறந்து விடுகிறான். வீரபாண்டியன் மனைவியை சிறைபிடித்து கொடுமை செய்கின்றனர் சோழர்களும் விக்கிரம பாண்டியனும். இதில் வீரபாண்டியன் தன் மனைவியை எப்படி மீட்டெடுக்கிறான் என்பது தான் மொத்த கதையும்.
அரசியல் பற்றிய உரையாடகள் அதிகம் ஈர்க்கக்கூடியவை. முக்கியமாக சோழனிடம் ஒற்றர் படை தலைவனாக இருக்கும் பல்லவ இளவல் ஜனநாதன் எனும் கதாபாத்திரம் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
குறைகள் என்றால் அளவிற்கு அதிகமாக உரையாடல்கள் தினிக்கப்பட்டுள்ளதும், அதிலும் பல திரும்ப திரும்ப இடம்பெறுவதும் படிக்கும் ஆர்வத்தை வெகுவாக பாதிக்கின்றன.. பொறுமை இருந்தால் படிக்கலாம்.