வெகு நாட்களாக இந்த புத்தகத்தை படித்து விட வேண்டும் என்று நினைத்து இருந்தேன். சமீபத்திய புத்தக திருவிழாவில் இந்த புத்தகத்தை ஒரு வழியாக வாங்கி மறுநாளே வாசிக்கவும் தொடங்கி விட்டேன்.
ஒரு பிளாக் மாஜிக் கதை. தொடக்க அத்தியாயங்கள் டில்லி, சென்னை, காஷ்மீர், கும்பகோணம் என்று பல இடங்களில் பலதரப்பட்ட மனிதர்களை மையமாக வைத்து நடக்கிறது. சற்றே குழப்பமாக இருந்தாலும் ஒரு சில அத்தியாயங்களை கடந்து அனைத்தும் ஒரு இடத்தில இணைய தொடங்குகிறது. ஒரு கமர்ஷியல் சினிமாவை போல் வேக வேகமாக பக்கங்கள் நகர்கின்றன.
ஸ்ரீ சக்கரத்தை மய்யமாக வைத்து பல தலைமுறைகள், சில மனிதர்கள், சில குழப்பங்கள், சில சஸ்பென்ஸ்கள் என்று சுவாரசியமாகவே இருக்கிறது. எனினும் ஆங்காங்கே நடக்கும் சம்பவங்களில் கூறப்படும் ஒரு சில ப்ளாஷ்பாக்குகள், அதில் வரும் மனிதர்கள் பெயர்கள் பெரும் குழப்பமாக இருக்கின்றன.
இந்த ஆசிரியரின் சங்கதாராவை போல் இந்த புத்தகமும் நடக்காத ஒரு விஷயத்தை நடந்திருக்கலாம் என்று கற்பனை செய்து எழுதப்பட்டிருக்கும் ஒரு நாவல். புத்தகம் படித்து முடித்தவுடன் கண்டிப்பாக இது உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை என்று கூறிவிடும் அளவுக்கு புருடாக்கள் அதிகம். :-)
ஆனால் படிக்க படிக்க சுவாரசியமாக இருப்பதை மறுக்க முடியாது. :-)