நம்முடைய சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களும், விளிம்பு நிலையில் வாழ்ந்து வருபவர்களுமான திருநங்கைகள், கைம்பெண்கள், யாசிப்பவர்கள், ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், பாலியல் தொழிலாளிகள், ஆதரவற்றோர், முதியவர்கள், மலைவாழ்ப் பழங்குடியினர்கள் மற்றும் கறுப்பினத்தவர்கள் பற்றிய ஆழ்ந்த புரிதலுடன், நா.காமராசன் எழுதிய ஒரு புதுக்கவிதை நூல் ‘கருப்பு மலர்கள்’. புறக்கணிப்பாளர்களைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் வெள்ளைக் கவிதையில் கருப்பு மலர்களாகத் தொகுக்கப்பட்டுள்ளது. நா.காமராசனின் வார்த்தைத் தேர்ந்தெடுப்பு சிக்கலற்று எளிமை ததும்ப படிப்பவரிடம் பேசுகிறது. அனைத்தையும் அனைவரும் படித்து தெளிவு பெற வேண்டிய தூண்டுகோலாக இந்நூல் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
UPSC மெயின்ஸ் தேர்வில் தமிழை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கும் நூல் நா.காமராசன் அவர்கள் எழுதிய கருப்பு மலர்கள்.
நா. காமராசன் (நவம்பர் 29, 1942 - மே 24, 2017) தமிழ்ப் புதுக்கவிஞர், திரைப்பாடலாசிரியர். வானம்பாடி கவிதை இயக்கத்தின் கவிஞர்களில் ஒருவர். மரபுக்கவிதையில் இருந்து நவீனக்கவிதைக்கு வந்தார். அரசியல் செயல்பாட்டாளராக இருந்தார்.
நவம்பர் 29, 1942-ல் ஆண்டு தேனி மாவட்டத்தில் போ. மீனாட்சிபுரத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். போடிநாயக்கனூரில் தொடக்கக் கல்வி கற்றபின் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழிலக்கியம் பயின்றார்.
காமராசன் பிப்ரவரி 5, 1967-ல் தேனி மாவட்டம், உ. அம்மாபட்டியில் வசிக்கும் தா. பொம்மையன் மகள் லோகமணியை மணந்தார். தைப்பாவை என்ற மகள் வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றார். தீலீபன் என்ற மகன் பட்டயக்கணக்கர்.
முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அரசியல்சட்ட நகலை எரித்தமைக்காக கைதானார். பின்னர் தியாகராசர் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் ஆலோசனைப்படி உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணிக்குச் சேர்ந்தார். தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் அதிகாரியாக பணியாற்றினார். எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு கதர் வாரிய துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.1991-ல் தமிழ் நாட்டு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினராக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார்.
நா. காமராசன் பாரதிதாசன் பரம்பரை கவிஞர்களின் பாதிப்புடன் மரபுக்கவிதைகள் எழுதியவர். சுரதா அவரை இலக்கியத்திற்குள் கொண்டுவந்தார். பின்னர் வானம்பாடி கவிதை இயக்கம் அவரை புதுக்கவிதை நோக்கிக் கொண்டு வந்தது. வானம்பாடி கவிதை இயக்கத்தின் பாதிப்பு கொண்டவர் என்றாலும் அவருடைய கவிதைகள் வானம்பாடிக் கவிஞர்களைப்போல நேரடிக்கூற்றுகளை நம்பாமல் படிமங்களை முதன்மையான கூறுமுறையாக கொண்டவை.
நா. காமராசனின் முதல் தொகுப்பு கறுப்பு மலர்கள் பரவலாக கவனிக்கப்பட்டது. சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி அவருடைய புகழ்பெற்ற கவிதைநூல். பெரியார் காவியம் என்னும் நீள்கவிதைநூலையும் எழுதியுள்ளார்
என்னுடைய இலட்சிய பாதையை அடைவதற்கான தேர்வின் விருப்பப்பாட பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புத்தகம் கறுப்பு மலர்கள் என்றாலும் மனதின் கருமையை சற்று விலக்கி வைத்த வாடா மலரென திகழ்கிறது.
எளிமையான வார்த்தை விளையாட்டாக அமைந்து அவை புரிந்தப் பின்பு சமூகத்தில் நிகழ்பவற்றை சாட்டையடியாக கூற இறைச்சி உத்தியை பயன்படுத்தியுள்ளார் கவிஞர்.
புத்தக விமர்சனத்தினல் கவிஞர் கண்ணதாசனின் விமர்சனம் வியக்க வைக்கிறது. "யாருக்கு என்ன பிடிக்கும் என அவன் தேடிப் பார்த்து பரிமாற முடியாது, அவன் விரித்த பந்தி! அவன் போட்ட இலை! அவன் வைக்கின்ற உணவு, பசிகின்ற வயிறு அமரலாம்"
கவிஞர் காமராசன் இப்புத்தகத்தை நடைப்பாதைக்கு காணிக்கை என சொல்லியிருப்பது என்னை அச்சரியப்படுத்தியது.. மேலும் அவர் கவிதை என்பது நாடு, மொழி, இனம் முதலிய எல்லைக்கும் அம்பால் சிறகு விரிகின்ற உலகப்பறவை என கூறியுள்ளார் அவை உண்மை என்பதற்கு சான்றாக கண்டம் தாண்டிய கருப்பினத்தவர்களையும் ஆதரித்துள்ளார்.
சுவடுகள் பதித்து, காகிப் பூக்களை சூடி, அனாதைகளின் கரம் பற்றி நிலாச்சோறூட்டி, பரீக்குட்டியின் இசையுடன், செம்மண், புழுதி பறக்கும், நடைப்பாதையில் நடந்து, மலைக்குடிலில் தவழ்ந்து புல்புல் கவியில் மயக்கம் கொண்டு, தபால்காரரின் இறப்பில், ஊமையாக கண்ணீர் கூடலில் மூழ்கி, தன் கனவு பூமியில் கால் பதித்து, நாம் ஒரு வானத்தின் கீழே என்பதை, அடிநாளின் வசந்தமென வாழ்ந்து, கல்லறையில் உறங்கும் தலைவனுக்கு, கவி மலர்களால் அஞ்சலி செலுத்தி, தன் மரணத்தை பற்றி சிந்தித்து, விலைமகளின் ரணத்தை எண்ணி, நீதிமன்ற விசாரிப்புகளையும் சொல்லி, முதல் கவிதையை இறுதி கவிதையாக அமைத்து, வானவில் கண்டு வானம்பாடி பறவையை மேகங்களுக்கு தூது அனுப்பி கடலை காணாமலே காதலித்த ஓவிய புல்லை யாருக்கு தான் பிடிக்காமல் போகும் இந்த கறுப்பு மலர்கள் போல்"
சாதி, மதம், இனம், மொழி இவற்றை எல்லாம் கடந்து மனிதன் என்றாலே அவனுக்கும் நமக்கு இருப்பது போல் அதனால் மனிதனை மனிதனாக எண்ண வேண்டும் என்பதை பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளது கவியரசு நா. காமராசன் இயற்றிய இந்த கறுப்பு மலர்கள்.