எட்டு கதைகள் - இராஜேந்திரசோழன்
வெறும் எட்டே எட்டு சிறுகதைகள், எட்டு கதைகளும் தரம்.
எட்டு கதைகளும் ஆகா, ஓகோ விவரணை கதைகளோ, இல்லை மீண்டு எழ முடியாத உணர்வுக் குழிக்குள் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கிற கதைகளோ இல்லை, மாற எந்த மேல் பூச்சுமே இல்லாத எளிமையான எதார்த்த கதைகள்.
ஆனால் கதை சொல்லும் முறையும், உயிரோட்டமான சித்தரிப்பும் படித்து முடித்ததும் மனதை வேற எங்கும் பயணிக்க முடியாத படி அந்த கதையின் தருணங்களுக்குள்ளாகவே கட்டிப் போட்டு நிற்க வைத்து விடுகிறது ஒவ்வொரு கதைகளும்.
என்னாத்த, பாத்துக்னே, தா ஒடேன், அடி என்னாடி இவன்னு கதையின் மாந்தர்கள் பேசுற வட மற்றும் தென் ஆற்காடு வட்டார வழக்கும், எளிய மனிதர்களின் அன்றாட உரையாடல்களும் - அந்த மனிதர்களை வெறும் கதாபாத்திரமா மட்டுமே கடந்து போக முடியாதபடி அவர்களோடு ஏதோ நெருக்கத்த உண்டு பண்ணி அவர்களின் உலகை இன்னும் நெருங்கி நின்று பார்க்க வைக்கிறது.
எட்டு கதைகளுமே ஆண், பெண் உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களையும், திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் ஆண், பெண் மனநிலையையும், பாலியல் ரீதியான தடுமாற்றங்கள் மற்றும் சலனங்களையும், வளரிளம் பருவத்தின் இனக்கவர்ச்சி மற்றும் பாலியல் சார்ந்த இச்சைகளையும் தான் பேசுகிறது.
தொகுப்பில் மிகவும் பிடித்த விசயமே - அது சொல்லாமல் கடந்து போகிற இடங்கள் தான்.
எல்லாத்தையுமே சொல்லித் தான் தீர்க்கணும்னு அவசியமே இல்லை, சொல்லாமல் விட்டோ இல்ல பூடகமா மட்டுமே சொல்லிக் கடப்பது வழியா கூட கதையின் உச்சத்தை அடைந்திட முடியும் - அப்படி சொல்லாமல் விட்ட கதைகள் தான் இந்த எட்டு கதைகளும்.
ஒரு வேளை எல்லாத்தையும் கொட்டி தீர்த்து இருந்தால் கூட இப்படி ஒரு தாக்கத்தை கொடுத்து இருக்காது. அப்படி சொல்லாமல் விட்டுவிட்ட இடங்கள் தான் இந்த கதைகளை வேற ஒரு தளத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது.
வெறும் உரையாடலில் தொடங்கி உரையாடலாகவே முடிகிற இந்த கதைகளில், ஏதோ ஒரு கதாபாத்திரம் எந்த ஒரு தீர்மானமோ இல்ல முன் அனுமானமோ இல்லாமல் உரையாடலின் போக்கிலேயே கதைகளின் இறுதியில் ரொம்ப இயல்பா கேட்டுட்டு போகிற ஒரு கேள்வி இல்ல ஒரு வரி தான் இந்த கதைகளை ஆகச்சிறந்த கதைகளாக மாற்றுகிறது.
தான், திருமணம் தாண்டிய உறவில் இருக்கிற பார்வதியைக் கூட சந்தேகப்பட்டு விவாதம் பண்ணிட்டு வந்து தன்னால ஒண்ணுமே பண்ண முடியாதுன்னு இயலாமையில் மூஞ்ச தூக்கி வச்சுட்டு உட்கார்ந்து இருக்கக் கிஷ்டாவ பார்த்து "என்னாயா, என்னமோ பொண்டாட்டிய பறி குடுத்தவனாட்டம் போய் குந்திகினனு" ரொம்ப இயல்பா அவனோட மனைவி மங்கலட்சுமி கேட்டுட்டு போறதும்.
காலையில் இருந்து எதிர் வீட்டுக்காரன் மேல புகாரா சொல்லிட்டு இருக்க வனமயில பார்த்து பொறுமை இழந்து "சரிதான் உள்ளே போமே பேசாதே. சும்மா பொண பொணன்னிக்னு, இப்பதான் ஒரேயடியா காட்டிக்கிறா என்னுமோ பெரிய பத்தினியாட்டம்னு" கணவன் கந்தசாமி சொல்றதும்.
தன்னோடு மனைவியின் நடத்தையை தாங்கிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டவனின் - இறப்புக்கு போயிட்டு வந்த கணவனை " என்னா இப்பிடியே வர்ரீங்க, போய் அப்பிடிய தோட்டத்தலா வாங்க தல முழுக வேணா" அப்படினு அவனோட மனைவி சொல்றதும்.
இது மாதிரி இன்னும் எத்தனையோ வரிகள் வெறும் இயல்பா கடந்து போகிற வரிகளாக தோன்றினாலும் கதையின் ஊடா பயணிக்கும் போது தான் அதோட முழுமையை உணர முடியுது.
இப்படியான வரிகளுக்குள் இருக்கிற ஆழமும், அடர்த்தியும் அதுக்குள்ள பொதிந்து இருக்கிற அத்தனை அர்த்தங்களும் தான் அதுவரைக்கும் ஒன்றாக இருந்த அந்த கதையை வேறொரு பரிமாணத்திற்கு நகர்த்தி, ஏதேதோ உணர்வுகளுக்குள் அலைந்து திரிய வைத்து இறுதியில் ஒரு மாதிரி விவாத மனநிலைக்குக் கொண்டு போய் நிறுத்திருது மனதை.
தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை தனபாக்கியத்தோட ரவ நேரம்.
முன்னுரையில் பவா சொல்லி இருந்த மாதிரி, மனித உணர்வுகளினூடே ஒரு பத்திருபது வருஷமாவது ஊறிக் கிடந்தாலொழிய - தனபாக்கியத்தின் ஒரு நாள் புலம்பலின் ஒரு வரியைக் கூட ஒரு எழுத்தாளனால் எழுதிவிட முடியாதுன்னு தோன வச்ச சிறுகதை.
சண்டையில் தொடங்கி, அடி வாங்கி, முகம் கொடுத்து பேசாம, மூஞ்ச திருப்பிக்கிட்டு உட்கார்ந்து, மீண்டும் கொஞ்ச நேரத்தில் இயல்பா சமாதானம் ஆகி இறுதியில் வேற ஒன்றா முடியும் எத்தனையோ தனபாக்கியங்களின் அன்றைய ஒரு நாள் வாழ்வையும், நிமிஷத்துக்கு நிமிஷம் மனம் மாறும் மனித மனங்களையும் அதன் நுண்ணிய உணர்வுகளையும் எப்படி இவ்வளவு அப்பட்டமாக எழுதிட முடியுமென்று யோசிக்க வைத்த சிறுகதை.
மொத்தமாக மனித மனங்களின் ஆழ, அகலங்களையும், வாழ்வின் நுட்பமான தருணங்களையும் எந்த ஒரு பாசாங்கும் இல்லாமல் உயிரோட்டமா பதிவு செய்த ஒரு சிறந்த தொகுப்பு.
படித்து முடித்தும் இராஜேந்திரசோழனின் வேறு சில படைப்புகளையும் தேடி படிக்கணும்னு ஆசையைத் தூண்டின ஒரு தொகுப்பு.