இளம் கவிஞர் இசையின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது.
இன்றைய வாழ்க்கையின் லௌகீக நிகழ்வுகளுக்கும் தனது கனவுகளுக்குமிடையேயான முரண்கள், தவிர்க்கவியலாத சில சமரசங்கள், வாழ்க்கையின் இயல்பாகிப்போன குரூரங்களின் முன் ஒரு பார்வையாளனாகவே நிற்கும் இயலாமை என எல்லாமும் நகையுணர்வுடன் கூடிய கிண்டலான பார்வையில் கவிதைகளாக உருமாற்றம் பெற்றுள்ளன.
முதல் தொகுப்புக்கும் இந்தத் தொகுப்புக்குமிடையேயான ஆறாண்டுக்கால இடைவெளியில் கவிதையமைப்பில், செய் நேர்த்தியில் கவிதை மொழியில், பார்வையில் இசையிடம் கூடிவந்திருக்கும் கலைத்திறன் வியப்பளிக்கிறது.
1977ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் இருகூரில் ஆறுமுகம் - நாகரத்தினம் தம்பதியருக்கு மகனாக பிறந்த இசை 2002 ஆம் ஆண்டில் தமிழ்ச் சூழலில் கவிஞராக அறிமுகம் ஆகினார். இவரது இயற்பெயர் ‘சத்தியமூர்த்தி’ என்பதாகும். இவர் தற்போது தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனை ஒன்றில் மருந்தாளுநராகப் பணியாற்றி வருகிறார். மேலும் இவரும் இவரது நண்பர்களும் இணைந்து ‘கருக்கல்’ எனும் சிறுபத்திரிகை ஒன்றை நடத்தி வருகின்றனர். அது ஆனந்த விகடனின் சிறந்த சிறுபத்திரிகைக்கான விருதினைப் பெற்றுள்ளது. மேலும் காலச்சுவடு, உயிர்மை, அம்ருதா, அந்திமழை, தடம், தீராநதி முதலிய இலக்கிய இதழ்களில் கவிதைகள் மற்றும் திறனாய்வு கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். 2014ஆம் ஆண்டில் “இளம் படைப்பாளருக்கான சுந்தரராமசாமி விருது” பெற்றுள்ளார்.
இசை எழுதிய இரண்டாவது தொகுப்பு. சாந்தமான ஒரு நதியைப் போல் எனக்குள் ஓடிச்செல்கிறது.அது ஓடும் போதே சில குழாங்கற்களை உருட்டுகிறது.. மெல்லிய ஓசை எழுப்பிச் செல்கிறது. இசையின் அதிகம் பேசப்பட்ட கவிதைகளில் ஒன்றான "தற்கொலைக்குத் தயாராகுபவன்" கவிதை இந்த தொகுப்பில் தான் இடம் பெற்றிருக்கிறது. குரலுக்கு எப்படி முத்தமிடுவது? என்று நான்கு நாட்களாக நான் யோசித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அதே கேள்வியை எழுப்பும் ஒரு கவிதை இடம் பெற்றிருப்பதால் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாக ஆகியிருக்கிறது.இசையின் கவிதைகள் அனைத்தையும் உங்களால் ஒரு காட்சியாக காணமுடியும் அது தான் இசையின் பலமும்.. ஒரு என்னுரையோ.. அணிந்துரையோ இதில் இல்லை...பேசவேண்டிய அனைத்தையும் கவிதைகள் மட்டுமே பேசுகின்றன.. இசை தமிழ் கவிதை உலகில் தவிர்க்க முடியாதவர் என்பதற்கு இந்த தொகுப்பு சாட்சி...