சாரதாதேவி வந்து விட்டார். விமானத்திலிருந்து இறங்கிய சாரதாதேவியை வரவேற்க அரசியல் பிரமுகர்கள், சினிமாவின் பிரபலங்கள், தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள் என்று முக்கியப் புள்ளிகளின் கூட்டம் அலைமோதியது. பத்திரிகைக்காரர்கள் ஊடுருவிக் கிடந்தார்கள். புகைப்பட வெளிச்சமும், வீடியோ வகையறாக்களும் அலைபாய்ந்தன! சாரதாதேவி... தமிழகத்தில் பிறந்த பெண்மணி! எழுபதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் சாரதாதேவி பார்க்க ஒரு வெள்ளைக்கார பெண்மணி போல இருந்தார். பாப் செய்யப்பட்ட தலை... முழுவதுமாக வெளுத்துக் கிடந்தது. நல்ல நிறம்... ரிம் லெஸ் கண்ணாடி... மைசூர் சில்க் சேலை! அதற்குத் தோதாக ரவிக்கை... தீர்க்கமான கண்களும் முகமும்... செதுக்கி வைத்தாற்போல உடம்பு...