காலை எட்டரைக்கெல்லாம் பவித்ரன் சம்பத் வீட்டுக் கதவைத் தட்டி விட்டான். திறந்தான் சம்பத். “வாங்க பவித்ரன். அம்மா...!” அம்மா வந்தாள். “நேத்து நான் சொன்ன பவித்ரன்மா!” பவித்ரன் அம்மா கையில் அந்தப் பெரிய பையைக் கொடுத்தான். “என்னப்பா இதெல்லாம்?” “அம்மாவைப் பார்க்க வரும்போது, வெறும் கையோட வரலாமா? அதான்!”அதில் ஒரு பழக் கடையே இருந்தது. ஸ்வீட் பாக்கெட், பூந்தி வகையறாக்கள்.“அம்மா, காபி கொண்டு வா! உட்காருங்க பவித்ரன்!” பவித்ரன் சிரித்தபடி உட்கார்ந்தான். வீடு சின்னதாகத்தான் இருந்தது. “என்ன வாடகை?” “எட்டு நூறு வாங்கறான். கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் வெளிலபோனா, ஆயிரத்துக்குக் குறைஞ்சு இல்லை. இதுல பாதிதான் இருக்கு. இங்கே தண்ணீர் பிரச்சனை இல்லை.