இரா. முருகன் என்பவர் தமிழக எழுத்தாளர் ஒருவர் ஆவார். இவர் கணினித்துறையில் பணி புரிகின்றார்.
1977-ல் கணையாழியில் முதல் படைப்பாக ஒரு புதுக் கவிதை பிரசுரமானதோடு இவருடைய எழுத்துலகப் பிரவேசம் தொடங்கியது. கவிஞராக அறியப்பட்டு பின் சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக முகிழ்ந்தவர். இலக்கியப் பத்திரிகைகளிலும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் இவர் எழுதி வருகிறார். சென்னை அகில இந்திய வானொலியில் இவர் கதைகள் இவர் குரலிலேயே ஒலிப்பதிவாகி ஒலிபரப்பாகியுள்ளன.
தமிழில் மாந்திரீக யதார்த்தக் கதையாடலாக இவர் எழுதிய அரசூர் வம்சம் புதினம் ஆங்கிலத்தில் கோஸ்ட்ஸ் ஓஃப் அரசூர் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி இருக்கிறது. இவர் ஆனந்தவிகடனில் எழுதிய 'உலகே உலகே உடனே வா' தமிழில் முதல் branded column ஆகும். மலையாளத்திலிருந்து குறிப்பிடத் தகுந்த மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். ஆங்கிலத்தில் இருந்து அருண் கொலாட்கரின் அனைத்துக் கவிதைகளையும் மொழிபெயர்த்தார்.