ராமாயணமும் மகாபாரதமும் மக்களோடு ஒன்றிப் போய்விட்ட வாழ்க்கைக் காவியங்கள். எப்போதும் எந்தச் சூழ்நிலையில் படித்தாலும் மனம் அவற்றில் லயிக்க ஆரம்பித்துவிடும். காரணம், கதையில் வரும் சம்பவங்கள் நம் சொந்தக் கதையோடு ஒன்றிப் போவதுதான். வாழ்க்கையில் கஷ்டம் வரும்போதெல்லாம் 'ராமன் பதினான்கு ஆண்டுகள் படாத கஷ்டமா நாம் பட்டுவிட்டோம்' என்று மனதை தேற்றிக் கொள்கிறோம். அப்படிப்பட்ட அசாத்திய கஷ்டம் ராமனுக்கு நிவர்த்தியாகத் தொடங்கியது 'சுந்தர காண்ட'த்தில்தான். 'ராமனின் அனுக்ரஹம் பெற்ற பராக்கிரமசாலி அனுமன், 'கண்டேன் சீதை'யை என்ற உயிர்ச்சொல்லால் ராமனுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்த, அவன் பட்ட கஷ்டங்களையும், அவற்றை எதிர்கொண்டு, எதிர்ப்பு சக்திகளைத் தூள் தூளாக்கி அதன்பின் அடைந்த வெற்றிகளையும் தெரிந்து கொள்ளுங்கள்' என்று மனோதிடம் கூறும் பகுதிதான் சுந்தர காண்டம்.
புத்தாண்டின் முதல் வாசிப்பு. இந்த புத்தகத்தை அம்மா அடிக்கடி வாசித்து இருக்கிறாள். கேட்டிருக்கிறேன் ஏன் என்று, இந்த புத்தகம் வாசித்தால் நல்லது நடக்கும், மனது இலகுவாக மாறும் என்று சொன்னாள். நல்லது நடக்குமா என்று தெரியவில்லை, ஆனால் அம்மாவின் நினைவுக்காக வாசித்தேன்.
இந்திரா சௌந்தர்ராஜன் எழுத்தில் இராமயண இதிகாசத்தின் ஒரு பகுதியாக விளங்கும் சுந்தர காண்டம். அவரின் தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்திருக்கிறேன். முதன் முதலாக அவரின் எழுத்தை இப்போதுதான் வாசிக்கிறேன். மனவலிமைக்கு இராமயணத்தின் சுந்தரகாண்டத்தை படிக்கவும் தினமும் பாராயணம் செய்யவும் சொல்வார்கள்.
மிக அருமையான நடை, எளிதில் புரிந்து கொள்ளும்படி உரை. ராமபிரான் புகழ் மேலும் மேலும் பரவட்டும். இந்திரா சௌந்தர்ராஜன் குலமும் கொற்றமும் தழைகட்டும். ஜெய் ஸ்ரீ ராம்...!