நவீனத் தமிழ் சூழலில் இசையைப் போலக் கவிதையுடன் இவ்வளவு அபாயகரமாக விளையடுபவர்கள் அதிகமில்லை. கூர்வாளை வீசி விளையாடும் கோமாளியைப்போல கவிதையாட்டம் போடுகிறார். அந்த ஆட்டத்தில் புனிதங்கள் கலைகின்றன. விழுமியங்கள் சிதறுகின்றன. வாழ்வின் தருணங்கள் ஏளனப் புன்னகையுடன் நையாண்டிச் சிரிப்புடன் வெளிப்படுகின்றன. ஆபத்தான இந்த ஆட்டத்தை தார்மீகக் கோபத்துடனும் அறச் செருக்குடனும் வெளிப்படுத்துகின்றன இசையின் கவிதைகள். இது இவரது மூன்றாவது தொகுப்பு.
1977ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் இருகூரில் ஆறுமுகம் - நாகரத்தினம் தம்பதியருக்கு மகனாக பிறந்த இசை 2002 ஆம் ஆண்டில் தமிழ்ச் சூழலில் கவிஞராக அறிமுகம் ஆகினார். இவரது இயற்பெயர் ‘சத்தியமூர்த்தி’ என்பதாகும். இவர் தற்போது தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனை ஒன்றில் மருந்தாளுநராகப் பணியாற்றி வருகிறார். மேலும் இவரும் இவரது நண்பர்களும் இணைந்து ‘கருக்கல்’ எனும் சிறுபத்திரிகை ஒன்றை நடத்தி வருகின்றனர். அது ஆனந்த விகடனின் சிறந்த சிறுபத்திரிகைக்கான விருதினைப் பெற்றுள்ளது. மேலும் காலச்சுவடு, உயிர்மை, அம்ருதா, அந்திமழை, தடம், தீராநதி முதலிய இலக்கிய இதழ்களில் கவிதைகள் மற்றும் திறனாய்வு கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். 2014ஆம் ஆண்டில் “இளம் படைப்பாளருக்கான சுந்தரராமசாமி விருது” பெற்றுள்ளார்.