“உணவின் வரலாறு” - பா.ராகவன்
*******************************
குமுதம் ரிப்போர்ட்டரில் 2009-10 வாக்கில் வெளிவந்த கட்டுரைத் தொடர். 43 அத்தியாயங்களை கொண்டு புத்தக வடிவில் 2010ல் வெளியானது.
மனிதன் உருவாவதற்கு முன் தோன்றியது மனிதனுக்கான உணவு என சொல்லி, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஆதிமனிதன் தேன் எடுப்பதில் ஆரம்பித்து, இறைச்சி, சுடப்பட்ட இறைச்சி, பீன்ஸ், பழங்கள், தானியங்கள், பழரசங்கள், புளித்த பழரசம் பின்பு மது, அதன் தயாரிப்பு, ரொட்டி என சென்று,
ஒவ்வொரு பூகோள கண்டத்திலும், எந்தெந்த காலத்தில், என்னென்ன மாதிரியான உணவுகள், எதனால் அந்த மாதிரியான உணவுகள், அதாவது பனி பிரதேசமோ, வெப்ப மண்டலமோ, பாலையோ அந்தந்த சூழலுக்கேற்ற உணவும் செய்முறைகளும் என முடிந்த அளவுக்கு பல புத்தகங்களை ஆராய்ந்து தொகுத்து தந்திருக்கிறார், திரு பா.ரா
லட்டு, பஞ்சாமிர்தம், வாழை பழம், உருளைக்கிழங்கு சிப்ஸ், ஒயின், கீரை, சாசேஜ்(நம்மவர்களுக்கு 'கறி வடை' என கையாண்டிருக்கிறார்) , வோட்கா போன்ற வகையறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டு பரிணமித்த விதம்...
SARS நோய் 2002ல் உலகை ஆட்டிப்படைத்த விதம். அதிலும் சீனாவின் 'கை' உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்போது அவர்கள், ஆரஞ்சு ஜூஸ் குடிக்கவும் பூனை கறி சாப்பிட கூடாது எனவும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இப்படியே பற்பல தேசத்து உணவுகளை ஆராய்ந்து கொண்டே செல்லலாம், ஆனால் அதற்கு காலம் போதாது என சொல்லி முடிக்கிறார்.
கிட்டத்தட்ட 300 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை, எப்போது வாசிக்க எடுத்தாலும், நமக்கு பசிக்க தொடங்கிவிடுகிறது. எழுத்துநடை துள்ளலாகவும், சுவாரசியமாகவும் சென்றாலும், அதனால் ஏற்படும் பசிக்கு கொரிக்க கோரிக்கை வைக்கிறது நமது வயிறு.
இப்புத்தகத்தை வாசித்து முடிக்கையில் ஆதிகால மனிதனாக மாறி, உணவு தேடி, அந்த காலத்து உணவுகள் முதல் தற்கால பண்டங்கள் வரை அறிந்து, காலங்களை கடந்து பயணப்பட்ட TimeTravel உணர்வை பெறுகிறோம்.
புத்தகத்திலிருந்து …
\
உலகம் உயிர்களால் ஆனது. உயிர்கள் உணவினால் ஆனவை. உணவு இல்லாமல் ஒன்றுமே இல்லை. நமக்கு முன்னால் தோன்றியது, நாம் சாப்பிடும் உணவு.
/
\
என் நோக்கம், உலகில் உள்ள அனைத்து வித உணவுகளையும் பட்டியலிட்டு, செய்முறை விளக்கம் சொல்லி, ருசி பார்க்கத் தூண்டுவதல்ல. எந்தக் காலத்திலோ டிரங்குப் பெட்டியின் அடியில் போட்டுவைத்த புராதனமான குடும்ப போட்டோவை தூசு தட்டி எடுத்துச் சில கணங்கள் ரசித்து, பழைய நினைவுகளுக்கு மீள்வடிவம் கொடுப்பது போல, உண்பது என்கிற ஓர் அனிச்சை செயல்பாட்டைச் சற்றே ஆர அமர ரசிக்கவும் செய்யலாம் என்பதை நினைவுறுத்துவது மட்டுமே.
/
\
நாம் ஆய்வாளர்களைப் பின்பற்றிப் போவோமானால் பைபிள் சொல்லும் ஆதி மனிதன் ஆதாமின் காலம் அதிக பட்சம் கி.மு. 8000 தான். ஏனெனில் அவன் பெண்டாட்டி சாப்பிட்ட ஆப்பிள் அப்போதுதான் முதல் முதலில் தோன்றியிருக்கிறது! கிழக்கு கசகஸ்தானில் உள்ள தீன் – ஷான் மலைப்பகுதியில்தான் ஆப்பிள் முதலில் உற்பத்தியானதாக அறிவியல் சொல்கிறது.
/
\
மானுடவியலின்படி ஆப்பிளுக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே மனிதன் ஆட்டுக்கறி சாப்பிட்டிருக்கிறான். அதற்கும் பல காலம் முன்னதாகப் பன்றிக்கறி. அதற்கும் முன்னால் இலை, தழைகள். கைக்கெட்டும் உயரத்தில் பழுத்த பழங்கள். அனைத்துக்கும் முன்னால் தேன்!
/
\
எரிந்துகொண்டிருந்த மரக்கட்டைகளை எடுத்துச் சென்று பரிசோதிக்க ஆரம்பித்தார்கள். நெருப்பு என்பது தொட்டால் சுடும். பக்குவமாகக் கையாண்டால் பண்டங்களுக்குச் சுவை கொடுக்கும். சாப்பிடுவதை எளிதாக்கும். இது நமக்கு மிகவும் உபயோகமானது. எனவே நிச்சயமாக இது கடவுளாகத்தான் இருக்க வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல. உலகம் முழுதும் ஆதி மனிதர்கள் நெருப்பைக் கடவுளாக்கியிருக்கிறார்கள். அக்னியே உன்னை ஆராதிக்கிறேன்.
/
\
ஆதி மனிதன் பசியால் உணவையும் பயத்தால் கடவுளையும் ஒருசேரத் தேடத் தொடங்கினான்.
/
\
இன்றைக்குப் பிறந்த குழந்தைக்கு முதல் உணவு தாய்ப்பால். ஆதி காலத்தில் ஒரு குழந்தை பிறந்தால் உடனே அதன் உதட்டில் ஒரு சொட்டுத் தேனைத் தான் தடவுவார்கள். குழந்தையின் முதல் அழுகையைச் சிரிப்பாக மாற்றும் கடவுள் அது.
/
\
ஈக்கள், தேனைத் தேடி ஒவ்வொரு செடியாகப் பயணம் மேற்கொண்டு தேன் உள்ள மலர்களைக் கண்டடைந்து அதனை உறிஞ்சி எடுத்து வந்து சேகரிக்கும் ‘ப்ராசஸு’க்கு டெபோரா என்று பெயர்
/
\
கடவுள் அல்லது பேருண்மை எதுவென்று தேடி அலையத் தொடங்கிய ஆதி மனிதர்களின் ஆன்மிகப் பயணத்துக்கும் ஹீப்ரூவில் டெபோரா என்றே பெயர். தேன் விற்கத் தொடங்கிய ஒரு கம்பெனி தன் ப்ராண்டுக்கு ‘டாபர்’ என்று பெயர் வைத்ததன் பொருத்தமும் இதுவே.
/
\
நெருப்பின் பயன்பாடு அறியப்படுவதற்கு முந்தைய காலத்தில், மனிதன் தேன் எடுப்பதற்குப் பெரும்பாலும் தன்னோடு ஒரு புதரை எடுத்துச் செல்வான். வலுவான காட்டு மரங்களின் தடித்த இலைகளைச் சேர்த்துப் பின்னிய புதர் முகமூடி! அடர்த்தியான இலைகளைச் சேர்த்துச் சேர்த்து வேர்களால் இறுகக் கட்டி, பல லேயர்களை உருவாக்குவார்கள். பம்மென்று அதுவே ஒரு பெரிய பந்து மாதிரி இருக்கும். அதைத் தலையில் அணிந்துகொண்டால் முகம் வரை மூடும். அப்படி மூடிக்கொண்ட பிறகு மற்றவர்கள் அந்த இலைகளின்மீது சிலவகை விஷச் செடிகளின் சாறைப் பிழிவார்கள். கடிக்க வரும் தேனீக்கள் அந்த விஷச் சாறின் வாசத்தை நுகர்ந்தால் உடனே மயங்கி விழுந்துவிடும்.
/
\
கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னால் மனிதன் ஒயினைக் கண்டுபிடித்துவிட்டான். திராட்சைப் பழத்தை ஊறவைத்து, புளிக்க வைத்து, புதைத்து வைத்து என்னென்னவோ செய்து ஒரு ருசியான மதுவைத் தயாரித்துவிட்டான். அப்படித் தயாரித்த மதுவை புனிதப்படுத்தாமல் அப்படியே எடுத்துக் கொட்டிக்கொள்வதாவது?
/
\
நீரில் கலந்த தேன் பானத்தை Mead என்று சொல்வார்கள்.
/
\
தேனை ஒரு சத்துபானம் என்று கண்டுபிடித்து, உணவுக்கு மாற்றாக அதைப் பயன்படுத்தலாம் என்று தீர்மானித்து, விஷ அம்புப் பைகளுடன் கூட தேன் நிரப்பப்பட்ட தோல் பைகளையும் லட்சக்கணக்கில் ஏற்றிக்கொண்டு உலகை வெல்லப் போன ஒரு ஆசாமி இருக்கிறார். அவர் பெயர் செங்கிஸ்கான்! மாதக்கணக்கில், வருடக்கணக்கில் தேசம் தேசமாகப் படையெடுத்து, முற்றுகையிட்டு யுத்தம் புரியும் வீரர்களுக்கு திடமான சாப்பாடு என்பது சோர்வைத் தரும். அனைவரும் தேன் சாப்பிடுங்கள். அது தெம்பு தரும். தவிரவும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும், பசிக்கவும் செய்யாது என்று எடுத்துச் சொல்லி, தனது மங்கோலியப் படையினருக்குத் தேனை மட்டுமே போர்க்கால உணவாகக் கொடுத்தவர் செங்கிஸ்கான்!
/
\
ஒரு கிலோ தேன் நமக்குக் கிடைக்கிறது என்றால், அதற்காகத் தேனீக்கள் குறைந்தது ஒரு லட்சம் முறை பறக்கிறது. ஒரு ‘பறத்தல்’ என்பது, புறப்பட்ட இடத்திலிருந்து ஒவ்வொரு மலராகத் தேடிப் போய் உட்கார்ந்து மகரந்தத்தைச் சேகரித்துக்கொண்டு திரும்பி வந்து கூட்டை அடைகிற ப்ராஸஸ். இப்படி ஒரு லட்சம் முறை அவை யாத்திரை செய்வதன்மூலம் மொத்தம் சுமார் ஐந்து லிட்டர் மகரந்தம் சேகரமாகிறது. வெறும் மகரந்தம் தேனாகாது! தேனியின் நாவில் சுரக்கும் திரவம் அதில் கலக்கும் போதுதான் தேன் பிறக்கிறது. தேனி சாப்பிட்டு, கீழே சிந்தி, வீணாகி, ஆவியாகி, விதி தேடிப் போன மகரந்தத் தூள்களையெல்லாம் கழித்துவிட்டு மிச்சத்தைக் கணக்கெடுக்கும்போதுதான் இந்த ஒரு கிலோ தேன்.
/
\
ஒரு தேனி எந்தப் பூவிலிருந்து கொள்முதல் செய்கிறது? அந்தப் பூச்செடி வளர்ந்திருக்கிற மண்ணின் தன்மை எத்தகையது? பிரதேசத்தின் காலநிலை எப்படிப்பட்டது? இதையெல்லாம் பொருத்துத் தான் தேனின் தரம்.
/
\
பித்தகோரஸ் ஒரு சுத்த சைவ பார்ட்டி. இரண்டாவது, உலகில் முதல் முதலில் பயிரிடப்படத் தொடங்கிய வஸ்து, பீன்ஸ்!
/
\
ஆதி ஜனநாயக தேசம் என்று வருணிக்கப்படும் கிரேக்கத்தில் தொடக்க காலத்தில் மக்கள் தமது கிராமத் தலைவரைத் தேர்ந்தெடுக்க சோழர்கள் மாதிரி குடவோலை முறையைத்தான் பின்பற்றியிருக்கிறார்கள். ஒரே வித்தியாசம், இன்னார் தலைவராக வேண்டாம் என்று கருதினால், குடத்தில் ஓலைக்கு பதில் அவர்கள் வாக்குச் சீட்டாகப் போட்டது பீன்ஸைத்தான்! இலை விழுந்தால் வெற்றி. பீன்ஸ் விழுந்தால் தோல்வி!
/
\
ஜைன மதம் அப்போது இந்தியாவில் பரவியிருந்தது. இயேசுநாதருக்கு அறுநூறு வருடங்களுக்கு முன்னரே ஜைன மதத்தின் இருபத்தி நான்காவது தீர்த்தங்கரரான மகா வீரர் தோன்றியிருந்தார். அவருக்கு முந்தைய தீர்த்தங்கரர்கள் துணைக்கண்டம் முழுதும் பல்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்து, போதித்துவிட்டுப் போயிருந்தார்கள். தவிரவும் கி.மு 400க்கு இருபது வருடங்கள் முன்னப்பின்ன கவுதம புத்தர் வேறு தோன்றிவிட்டார். முதலில் ஜைனமும் பிறகு பவுத்தமும் இந்தியாவில் தோன்றி, பரவத் தொடங்கியதும், புலால் உண்பது தவறு அல்லது பாவம் என்னும் கருத்தாக்கம் மிக ஆழமாக ஒரு பகுதி மக்களிடையே தோன்ற ஆரம்பித்தது. கொல்லாமை என்பதை ஜைனம் மிக முக்கியமான ஐந்து அடிப்படை ஒழுக்கங்களுள் முதலாவதாக வைத்தது. [பொய்யாமை, திருடாமை, பிரம்மச்சரியம், பற்றற்ற தன்மை என்பவை மற்ற நான்கு.]
/
\
இந்திய மண்ணில் மரக்கறி உணவு மட்டுமே சாப்பிடுவது என்னும் வழக்கம் முதல் முதலில் உருவாவதற்கு ஜைன மதம்தான் மூல காரணமாக இருந்திருக்கிறது. பின்னாளில் வட இந்தியாவில் வர்ண அமைப்புகள் [நான்கு வர்ணங்கள் என்று பகவத் கீதை சுட்டிக்காட்டுகிறது.] ஹிந்து மதத்துக்குள் நுழையும்போது, தென் இந்தியாவில் சாதிகள் ஏராளமாக முளைக்கத் தொடங்குகின்றன. மக்களுக்கு இடையே உருவாக்கப்பட்ட இந்த முகமற்ற பிரிவினைக் கோடுகள், ஒரு சாராரை உயர்ந்த சாதியினர் என்றும் [வட இந்தியாவில் உயர் வர்ணத்தோர்] இன்னொரு சாராரைத் தாழ்ந்த சாதியினர் என்றும் [வடக்கே கீழ் வர்ணத்தோர்] பிரித்து வைத்தன. வடக்கிலும் சாதிகள் முளைத்தன. ஆனால் அந்தளவுக்குத் தெற்கே வர்ண பேதம் எடுபடவில்லை.
/
\
ஹிந்து மதத்துக்குள் இருந்த சில உயர் சாதி, உயர் வர்ணத்தவர்கள், குறிப்பாக பிராமணர்கள், தமது மத ஒழுக்கங்களின் ஒரு பகுதியாக, ஜைனம் வற்புறுத்திய புலால் உண்ணாமை என்பதை ஏற்றுக்கொண்டார்கள். இதற்குச் சாதகமாக ஆதி ஜைன மதத்துக்கும் ஆதி ஹிந்து மதத்துக்கும் இடையில் இருந்த சில ஒற்றுமைகளையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். வேதங்களில் மூத்ததெனச் சொல்லப்படும் ரிக் வேதத்தில் வருகிற ரிஷப தேவரே ஜைன மதத்தின் முதல் தீர்த்தங்கரராக அறியப்படுகிறார் என்பது ஓர் எளிய எடுத்துக்காட்டு.
/
\
கிறிஸ்துவுக்கு அதிசுமார் ஏழாயிரம் வருஷங்களுக்கு முன்னால் உலகிலேயே முதல் முதலாகத் தென்னிந்தியாவில்தான் [ஆந்திரமா, தமிழகமா, கேரளமா, கர்நாடகமா என்று கேட்காதீர். தெரியாது.] இரண்டு முக்கியமான உணவுப் பொருள்கள் விளைந்திருக்கின்றன. எள்ளும் கத்திரிக்காயும்.
/
\
கிறிஸ்டோபர் கொலம்பஸ் கடைசிவரை இந்தியாவையும் கண்டுபிடிக்கவில்லை, மிளகையும் கண்டுபிடிக்கவில்லை. அமெரிக்காவையும் பச்சை மிளகாயையும் ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்துவிட்டு எம்பெருமான் திருவடிக்குப் போய்ச் சேர்ந்தார்.
/
பால்+தேன்+சர்க்கரைப் பாகு+பருப்பு காம்பினேஷனில் உருவான முதல் தமிழ் இனிப்பு டிஷ் குறித்த குறிப்புக்கு மிஞ்சிப்போனால் 1200 வயசு.
\
/
லட்டு, தென்னகத்துப் பண்டமல்ல. அதுவும் வட இந்தியச் சரக்குதான். குஜராத் அதன் தாயகம். அங்கே அதனை மோத்திசூர் லட்டு என்பார்கள். ஆதி லட்டு பற்றிய இலக்கியக் குறிப்பு, பன்னிரண்டாம் நூற்றாண்டு குஜராத்தி செய்யுள்களில் வருவதாகத் தெரிகிறது. கடலைப்பருப்பு பிரதான பொருள். அப்புறம் சர்க்கரைக் கரைசல். கம்பிப் பாகு முக்கியம். தாராளமாக நெய். மேலுக்கு திராட்சை, ஏலம், முந்திரி. எளிய ஃபார்முலாதான்.
\
/
திருப்பதியில் கிபி 1700க்குப் பிறகுதான் லட்டு பிரசாதம் வழங்கும் முறை வந்திருக்கிறது. அதற்கு முன்னால்வரை பிரம்மாண்டமான வடையும் வெண் பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும்தான் பக்தர்களுக்குக் கிடைத்துவந்தன. இன்றைக்கும் இவை உண்டு என்றாலும் லட்டு முதலிடம் பெற்றதற்குக் காரணம் அதன் ருசியும் அதனைப் பற்றிய கதைகளும்.
\
/
எனவே திருப்பதி லட்டு ஃபார்முலாவை நன்கறிந்த கல்யாணம் ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்த ரமேஷ் என்கிற லட்டு எக்ஸ்பர்ட்டைத் திரும்பச் சென்று அழைத்து வந்து பணியில் உட்கார வைத்தது தேவஸ்தானம். இன்றைக்கும் லட்டு ரமேஷ் என்றால் திருப்பதியில் தெரியாதவர்கள் கிடையாது.
\
/
ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்து சேர்ந்த காலத்தில் முதல் முதலில் வாழைப்பழத்தை ருசித்துவிட்டு அதனைக் ‘கல்பதரு’ என்று அழைத்தார்கள். அற்புதத் தாவரம் என்று தமிழில் சொல்லலாம்.
\
/
\
பாலும் தெளிதேனும் பாகும் (தேனோடு சர்க்கரைப் பாகு! என்ன ஒரு காம்பினேஷன்!) பருப்பும் கலந்து பிள்ளையாருக்குக் கொடுத்த இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்து ஔவையார் (இவருக்கு முன்னால் இரண்டு ஔவையார்கள் இருந்திருக்கிறார்கள் என்கிறார்கள். ஆனால் அவர்கள் இத்தகைய அருமையான சமையல் குறிப்புகள் எதுவும் தந்ததாகத் தெரியவில்லை.)தான் முதல் ஸ்வீட் ரெசிபி உற்பத்தியாளர்.
/
\
பஞ்சாமிர்தம் என்றால் ஐந்து பொருள்களின் சேர்க்கையில் உருவாகும் அமிர்தம் போன்ற ருசி மிக்க பண்டம் என்று பொருள். பஞ்ச அமுதம் என்று சொல்லிக்கொண்டிருந்தது, காலப்போக்கில் பஞ்சாமிர்தமாகி, இன்றைக்குப் பேடண்ட் வரை வந்துவிட்டது.
/
\
‘இதென்ன ஃப்ரெஞ்ச் ஃப்ரையா? உன் கட்டை விரலா? இத்தனை தடியாக இருப்பதை மனுஷன் சாப்பிடுவானா?’ என்று ஒரு ப்ளேட் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸையும் ஜார்ஜ் க்ரம் தலையில் கொட்டிவிட்டார். செவ்விந்தியரான ஜார்ஜுக்கு செம கோபம் வந்துவிட்டது. அவர் அந்தக் கஸ்டமர் மீது விஷ அம்பு விடாத குறை. ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு விறுவிறுவென்று சமையலறைக்குச் சென்றார். உனக்கென்ன? உருளைக் கிழங்குத் துண்டுகள் ஒல்லியாக இருக்கவேண்டும். அவ்வளவுதானே என்று சக் சக் சக் சக் என்று கிழங்கைப் படு ஒல்லியாக வட்ட வடிவில் சீவிச் சீவி அப்படியே கொதிக்கும் எண்ணெயில் போட்டார். அவை சிவக்கும்வரை காத்திருந்து மொறுமொறுவென்று ஆனபிறகு எடுத்து, கஸ்டமரைக் கண்ணீர் விட வைக்கும் உத்தேசத்துடன் அதன் தளையில் ஒரு பிடி மிளகாய்ப் பொடியையும் உப்பையும் கொட்டினார். இந்தா கொட்டிக்கோ என்று ஒரு பிளேட் நிறைய அந்தப் பதார்த்தத்தை எடுத்துச் சென்று அவர் வைக்க, சுவைத்துப் பார்த்த அந்த கஸ்டமர் சொக்கிப் போனார். அடே, படுபாவி! இத்தனை காலமாக நான் ருசித்துவந்த ஃப்ரெஞ்சு ஃப்ரையெல்லாம் இதன் முன்னால் பிச்சை வாங்கவேண்டும்.
/
\
ஐந்தாண்டு காலம் உழுது பயிரிட்டால், உழுத நிலத்தில் சரிபாதி விவசாயிக்கு. ஆனால் மேற்கொண்டு அவர் செய்யும் ஒவ்வொரு சாகுபடியிலும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மட்டு���் பண்ணையாருக்குக் கொடுத்துவிடவேண்டும். இதன்மூலம் என்ன லாபமென்றால் நிலமற்ற விவசாயி என்ற பேச்சுக்கே இடமில்லை. அவரவர் உழைப்புக்கேற்ற நிலம் அவசியம் கிடைத்துவிடுகிறது! இந்த ஏற்பாடு கொடுத்த உத்வேகத்தில்தான் பிரெஞ்சு விவசாயிகள் போட்டி போட்டுக்கொண்டு திராட்சை உற்பத்தியில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.
/
\
ஒரு கட்டத்தில் வோட்காவைத் தவிர இன்னொன்றை ஏறெடுத்தும் பார்க்கமாட்டோமென்று ரஷ்யர்கள் பரிபூரண சரணாகதி நிலைக்குச் சென்றபோது அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் வோட்காவின் பெருமையைக் குறைப்பது எப்படி என்று யோசிக்கத் தொடங்கின. பல்வேறு விதமான கட்டுக்கதைகள் பரப்பப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான், வோட்கா சாப்பிட்டால் ஆண்மை போய்விடும் என்பது. இன்றைக்கு வரை – இந்தியா உள்பட பல்வேறு தேசங்களில் மிகத் தீவிரமாக நம்பப்படுகிற கதை இது.
/
\
1917ம் ஆண்டு ரஷ்யப் புரட்சி நடைபெற்று லெனின் ஆட்சிக்கு வந்தார். ஐந்து வருடங்கள். அடுத்து வந்த ஸ்டாலின் தேசத்தின் உற்பத்தி முழுவதையும் அரசுடைமை ஆக்கினார். மக்கள் என்பவர்கள் வேலை செய்யவேண்டியவர்கள். நிலத்தின் உரிமை அரசாங்கத்தினுடையது. கடமையைச் செய். பலனை அரசாங்கம் தரும் என்றார் அந்த நவீன கம்யூனிஸ்ட் பரமாத்மா.
/
\
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஜப்பான் மீண்டு எழுந்ததற்குச் சற்றும் சளைத்ததல்ல, இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ரஷ்யா தனது கோரமான ஏழைமையிலிருந்து மீண்டெழுந்தது.
/
\
உணவை வீணாக்குவது என்பது ரஷ்யர்கள் சரித்திரத்திலேயே கிடையாது. குறைந்தபட்சம் நூற்றாண்டுகால சரித்திரத்தில். வசதி வாய்ப்புகள் இருந்தும் சாப்பாடு கிடைக்காமல் தவித்த சமூகமல்லவா? தவிரவும் இன்றைக்கு வரை ரஷ்யாவில் உணவுப் பொருள்களின் விலை மிக அதிகம். இதனாலேயே என்ன தேவையோ, அதை மட்டும் வாங்குவார்கள். எவ்வளவு தேவையோ, அதை மட்டும் சமைப்பார்கள். ஒரு துளியும் வீணாக்குகிற வழக்கம் அவர்களிடையே கிடையாது.
/
\
உலகில் வேறெந்தக் கண்டத்திலுமே ஆப்பிரிக்க உணவின் ருசி கூடவில்லை என்று நவீன சாப்பாட்டு ராமர்கள் [உணவு வல்லுனர்கள் என்றும் பாடம்.] சத்தியமே செய்கிறார்கள். ஒரே காரணம், உணவு என்பதை அவர்கள் பெரும்பாலும் தமது கௌரவத்துடன் தொடர்புபடுத்தித் தயாரிப்பதுதான்.
/
\
நாமெல்லாம் என்ன பால் சாப்பிடுகிறோம்! ஆப்பிரிக்கர்கள் ஒவ்வொரு வேளை உணவுக்குப் பிறகும் தவறாமல் குறைந்தது முக்கால் லிட்டர் பால் குடிப்பார்கள்.
/
\
சோமாலியாவில் கம்பூலோ [Cambuulo] என்று ஓர் உணவு ரொம்பப் பிரசித்தம். இதன் பிறப்பிடம் சோமாலியா என்றாலும் பொதுவாகக் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் அனைத்திலும் இன்று இதுவே சூப்பர் ஸ்டார். இரவு உணவு என்பது அநேகமாக கம்பூலோவாகத்தான் இருக்கும்.
/
\
தென்னாப்பிரிக்க உணவை ‘ரெயின்போ உணவு’ என்றுதான் இப்போதும் மேற்கத்திய நாடுகள் அழைக்கும். அப்படியொரு கலர்ஃபுல் உணவு! காரணம், தென்னாப்பிரிக்க ஆதிவாசிகளின் ரசனை.
/
\
இந்த பண்ட்டூ மொழிப் பிரிவினர் தவிர கொய்ஸான் என்று இன்னொரு ஆதிவாசிப் பிரிவினரும் தென்னாப்பிரிக்காவில் இருக்கிறார்கள். இவர்கள்தாம் உண்மையில் மண்ணின் மைந்தர்கள் என்பார்கள். தமக்கென்று பத்தாயிரம் வருஷத்து சரித்திரக் கதை வைத்திருக்கும் சிறுபான்மையினர்.
/
\
மறுபுறம் கொய்ஸான் பழங்குடியினர் வேட்டையாடுதலைத் தவிர வேறெதையும் செய்திருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் ஆதி மனிதர்கள். விலங்குகளை அடித்து அப்படியே சாப்பிடுதல், தேன் வேட்டைக்குச் செல்லுதல் என்பதைத்தான் நவீன காலத்திலும் பின்பற்ற விரும்பினார்கள். அவர்களது நாகரிக வளர்ச்சி என்பது, வேட்டையாடிய விலங்குகளை வேகவைத்துச் சாப்பிடுவது என்ற அளவுக்கு இப்போது முன்னேறியிருப்பதைக் கண்டிப்பாகச் சொல்லிவிட வேண்டும்.
/
\
உயிர் என்று உலகில் தோன்றிய அனைத்துக்கும் ஆதாரமாக, அனைத்துக்கும் பொதுவாக இருக்கும் ஒரே உணர்ச்சி. நமது இருப்பும் செயல்பாடுகளும் இதனைச் சார்ந்தே எப்போதும் இருந்துவந்திருக்கிறது. இதனாலேயே உணவு அனைத்திலும் முக்கியமாகிப் போகிறது.
/
\
எதையும் தின்றுபார்ப்பது என்னும் தொடக்ககால முயற்சியில் பலியாகிப் போன உயிர்கள் எண்ணிலடங்காதவை. நான் ஆண், நீ பெண் என்கிற முதல் பகுத்தறிவுக்கு அடுத்தபடி மனிதன் கண்டடைந்தது, எது உண்ணத்தகுந்தது, எது உண்ணக்கூடாதது என்பதுதான். அதுதான் தொடக்கம். அங்கிருந்துதான் பகுத்தறிவே ஆரம்பிக்கிறது.
/