திருக்குறளின் காமத்துப்பாலுக்குச் செய்யப்பட்ட உற்சாகமும் சுவாரசியமும் கூடிய உரை என்பதைத் தாண்டி இந்நூலில், ஆண்ட்ராய்டு காலத்துக் காதலில் மறைந்திருக்கும் வள்ளுவயுகத்துக் காதலையும் கண்டுபிடிக்கிறார் இசை. பின், எந்தக்காலத்தில் எந்தக்காலமோ எனப் பரவசம் கொள்கிறார். அந்தப் பரவசமே மேதைமையாக, நகையுணர்ச்சியாக, உபாசனையாக, விளையாட்டாக, திகைப்பாக, குழந்தைமையாக நூலெங்கும் வெளிப்பட, கடைசிப் பக்கத்திற்குப் பின்பு, காதலின் அத்தனை ஆட்டங்களையும் அறிந்த ஒரு கவிஞனாக, தோழனாக வள்ளுவன் எழுந்து வருவதைப் பார்க்கிறோம். அறத்தையும் பொருளையும் சற்றே நெகிழ்த்திவிட்டு அவனை அப்போது அறியவும் நெருங்கவும் முயல்வது நமக்கு அவசியமானதும்கூட. — வே.நி. சூர்யா
1977ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் இருகூரில் ஆறுமுகம் - நாகரத்தினம் தம்பதியருக்கு மகனாக பிறந்த இசை 2002 ஆம் ஆண்டில் தமிழ்ச் சூழலில் கவிஞராக அறிமுகம் ஆகினார். இவரது இயற்பெயர் ‘சத்தியமூர்த்தி’ என்பதாகும். இவர் தற்போது தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனை ஒன்றில் மருந்தாளுநராகப் பணியாற்றி வருகிறார். மேலும் இவரும் இவரது நண்பர்களும் இணைந்து ‘கருக்கல்’ எனும் சிறுபத்திரிகை ஒன்றை நடத்தி வருகின்றனர். அது ஆனந்த விகடனின் சிறந்த சிறுபத்திரிகைக்கான விருதினைப் பெற்றுள்ளது. மேலும் காலச்சுவடு, உயிர்மை, அம்ருதா, அந்திமழை, தடம், தீராநதி முதலிய இலக்கிய இதழ்களில் கவிதைகள் மற்றும் திறனாய்வு கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். 2014ஆம் ஆண்டில் “இளம் படைப்பாளருக்கான சுந்தரராமசாமி விருது” பெற்றுள்ளார்.