கல்வியின் அளவும் செலவும் குறைக்கப்படுவது மாத்திரமல்லாமல், கல்வித் திட்டத்தையும் தலைகீழாக மாற்றி பிள்ளைகளுக்கு விஷய ஞானப்படிப்பு சொல்லிக் கொடுப்பதற்குப் பதிலாக தங்கள் தங்கள் கையினால் தொழில் செய்து வெறும் ஜீவனம் மாத்திரம் நடத்தி விட்டு மிருகங்கள், பூச்சி, புழுக்கள் போல் செத்து மடியும்படியான மிருகத்தன்மை தொழில்முறைகற்றுக் கொடுப்பதையே பள்ளிக்கூடப் படிப்பாகச் செய்யத்தக்க திட்டம் போடப்பட்டு வருகிறது. இது அமலுக்கு வருகிறது காலதாமதமாகுமானால் அதற்குள் புராண உணர்ச்சியை மக்களுக்குள் புகுத்த இந்தி கட்டாயப் பாடமாக ஆக்குவதற்குத் திட்டமும் பலாத்கார முயற்சியும் வெகு வேகமாக நடைபெறுகிறது.

