திலகருக்கும் ஏனைய தலைவர்களுக்கும் உள்ள வித்தியாசம் ஒன்றை இங்குக் குறிப்பிட வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். (இது இக்காலக் காங்கிரஸ் தலைவர்களது கண்ணிலும் படுவதாக!) அவர் எக்காரியத்தைச் செய்ய விரும்பினாலும், அக்காரியத்தைப்பற்றி முதலில் தம்முடைய சிஷ்யர்களைக் கலந்து ஆலோசனை செய்வார். தமது கருத்தும், அவர்களது அபிப்பிராயமும் மாறுபடுமாயினும் தமது அபிப்பிராயத்திற்கு அனுசரணையான விஷயங்களையெல்லாம் காரணகாரியத்தோடு எடுத்துச்சொல்லி விவாதிப்பார். தமது அபிப்பிராயம் அவர்களால் நிராகரிக்கப்படுமாயின், தமது சிஷ்யர்களின் அபிப்பிராயப்படியே முடிவு செய்வித்து அதனையே தாம் முன்னின்று முடிப்பார்.

